Monday, November 11, 2019

விவசாயியின் புத்திசாலித்தனம்...

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்துவந்தார். சிறந்த உழைப்பாளி அவர். எப்போதும் வயலில் வேலை செய்து கொண்டே இருப்பார். அவர் தோட்டத்தில் இருந்த தர்ப்பூசணிக் கொடியில் ஒரு காய் காய்த்தது. அது விவசாயியின் சிறந்த கவனிப்பில் நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டே வந்தது. விரைவில் அது பிரம்மாண்டமாக வளர்ந்தது. அந்தத் தர்ப்பூசணிப் பழத்தைப் பார்த்து அந்தக் கிராமமே வியந்தது. அந்தப் பழத்தைப் பார்க்கப் பார்க்க விவசாயிக்குப் பெருமை தாங்க முடியவில்லை.

வயலில் வேலைசெய்த நேரம் போக மீதி நேரம் தன் தோட்டத்தில் விளைந்திருக்கும் அற்புதப் பழத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பார். ‘இதைச் சந்தைக்கு எடுத்துச் சென்று நல்ல விலைக்கு விற்கலாம்’ என்று நினைத்தார் விவசாயி. உடனே தன் முடிவை மாற்றிக்கொண்டார். ‘இல்லை இல்லை. இந்த அற்புதப் பழத்துக்குச் சந்தையில் மதிப்பு கிடைக்காது. இதைக் கண்காட்சியில் வைத்தால் என்ன?’ என்று யோசித்தார். பிறகு அந்த முடிவையும் கைவிட்டார்.

ஏழை வேடத்தில் அரசர்

முடிவில் பழத்தை அந்த நாட்டு அரசருக்குப் பரிசளிக்கலாம் என்று விவசாயி முடிவுசெய்தார். தான் பரிசளிக்கும் பழத்தைப் பார்த்து வியக்கும் அரசர், தனக்கு நிறைய பரிசளிப்பார் என்று நினைத்தபடியே உறங்கப் போனார். ஒவ்வொரு நாள் இரவும் மாறுவேடத்தில் நகர்வலம் வருவது அரசனின் வழக்கம். அன்றும் அரசர் ஒரு வழிப் போக்கனைப் போல ஆடையணிந்து வந்தார். விவசாயியின் தோட்டத்தில் இருந்த பெரிய தர்ப்பூசணிப் பழத்தைப் பார்த்ததும் அதை உடனே சாப்பிட வேண்டும் என்று அவருக்கு ஆசையாக இருந்தது. உடனே விவசாயி வீட்டுக் கதவைத் தட்டினார்.

அரசருக்குக் கிடைத்த சாபம்

வெளியே வந்த விவசாயி, அரசரைப் பார்த்து யார் என்று கேட்டார். அரசரும் தான் ஒரு வழிப்போக்கன் என்றும், தனக்குத் தர்ப்பூசணிப் பழம் வேண்டும் என்றும் கேட்டார். அதைக் கேட்ட விவசாயி அதிர்ச்சியடைந்தார். “என்னது, தர்ப்பூசணியா? அதை நான் அரசருக்குப் பரிசாகத் தருவதற்காக வைத்திருக்கிறேன்” என்று விவசாயி சொன்னார். மாறுவேடத்தில் இருந்த அரசர்,

“நீ தரும் பரிசு அரசருக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்?” என்று கேட்டார். உடனே விவசாயி, “என் பரிசை மறுத்தால் அரசருக்கு நரகம்தான் கிடைக்கும்” என்று சொன்னார். அரசரும் மறுபேச்சின்றி அங்கிருந்து கிளம்பினார்.

விவசாயியின் புத்திக்கூர்மை

மறுநாள் தன் தோட்டத்துத் தர்ப்பூசணிப் பழத்தை எடுத்துக் கொண்டு அரசரைப் பார்க்கக் கிளம்பினார் விவசாயி. அரசரை நெருங்கும்போதே, நேற்று இரவு மாறுவேடத்தில் வந்தது அரசர்தான் என்பது விவசாயிக்குப் புரிந்தது. இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பணிவுடன் அரசரிடம் தன் பரிசை ஒப்படைத்தார்.

“மகாகனம் பொருந்திய மன்னரே, இந்த நாட்டின் மிகப்பெரிய தர்ப்பூசணிப் பழம் இது. உங்களுக்கு இது மிகவும் பிடிக்கும்” என்று விவசாயி சொன்னார்.

அதற்கு அரசர், “இது எனக்குப் பிடிக்கவில்லை என்றால்?” என்று கேட்டு நிறுத்தினார். விவசாயியும், “இந்தக் கேள்விக்குப் பதில் உங்களுக்கே தெரியுமே அரசரே” என்று மெதுவாகச் சொன்னார். அதைக் கேட்டு உடனே சிரித்துவிட்டார்

அரசர். “உன் பரிசுக்காக மட்டுமில்லை. உன் புத்திசாலித்தனத்துக்கும்   அரசர், விவசாயிக்கு நிறைய பொன்னும் பொருளும் தந்து அனுப்பினார்.💰💎


உங்களில் ஒருவன்
இர.ஜேசுதாசன் ✍

No comments: