Saturday, November 30, 2019

வீட்டிற்குள் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க இதை செய்யுங்கள்..

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தக் காலத்தில் வீட்டுக் கட்டிடம் ஈரத்தன்மையுடன் இருக்கும். வீட்டுக்குள் எங்கேயாவது நீர்க்கசிவோ சுவர் ஈரமாகவோ இருந்தால் அதைக் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் பின்னால் கட்டுமானத்துக்கே ஆபத்தாக ஆகிவிடும். சரி, வீட்டில் ஈரக்கசிவு ஏற்படாமல் எப்படித் தடுப்பது?

பொதுவாக மழைக் காலத்தில் கான்கிரீட் மேற்கூரையிலேயே ஈரக் கசிவு ஏற்படும். மேற்கூரையில் ஈரக் கசிவு ஏற்படாமல் இருக்க கான்கிரீட் போடுவதற்கு முன்பாக மணலைச் சல்லடை மூலமாக நன்றாகச் சலிக்க வேண்டும். அதன் பின்புதான் அதைப் பயன்படுத்த வேண்டும். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஆற்று மணலில் களிமண் கட்டிகள் கலந்தே வரும்.

களிமண்ணை கான்கிரீட் கலவையுடன் சேர்ந்து கட்டினால் பாதிப்பு ஏற்படும். களிமண்ணின் ஈரத்தன்மை கான்கிரீட் வழியாகச் சுவருக்குள் இறங்கும். பெரும்பாலும் கான்கிரீட் மேற்கூரை போட்ட பிறகு மொட்டை மாடியில் சுர்க்கி என்றழைக்கப்படும் செங்கற்பொடி ஓடுகளைப் பதிப்பது வழக்கம். இந்த ஓடுகள் நல்ல தரத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தண்ணீர் கான்கிரீட் வழியாக உள்ளே சுவரில் இறங்கும்.

மழையைத் தவிர்த்து, குளியல் அறையில் ஏற்படும் ஈரத்துக்கு சுவருக்குள் பதிக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்களில் கசிவு இருக்கலாம். வீட்டில் அறை, சமையலறை, படுக்கையறை சுவர்களில் ஈரம் தென்பட்டால் அதற்கு தரமற்ற செங்கற்களைப் பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம்.

அப்படித் தரமான கற்களைப் பயன்படுத்தாவிட்டால், வீட்டின் அறைகள் மட்டுமல்ல, மொட்டை மாடியில் இருந்து கசியும் ஈரமானது கட்டிடத்தின் மேற்கூரையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்துவிடும். இந்த ஈரக்கசிவானது கான்கிரீட்டில் உள்ள இரும்புக் கம்பிகளைத் தாக்கும்போது கம்பிகள் துருப்பிடித்து நாளாக நாளாக சிமென்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழும். குளியல் அறையில் நீர்க்கசிவு ஏற்பட்டால் பிளம்பரை வைத்துச் சரி செய்துவிடலாம். மற்ற இடங்கள் என்றால், ஈரம் படிந்துள்ள இடத்தை உடைத்துவிட்டு மீண்டும் பூசுவதே தீர்வாக இருக்கும். ஆனால் அதற்குக் கொஞ்சம் கூடுதலாகச் செலவாகும்.

மொட்டை மாடியில் கான்கிரீட் போட்ட பிறகு சுர்க்கி ஓடுகளைப் பதிக்கும் முன்பு இன்னொரு வேலையைச் செய்ய வேண்டும். அதாவது, சுர்க்கி ஓடு பதிப்பதற்கு முன்பு நீர்த்தடுப்பு சிமெண்ட் கலவையைச் சந்துபொந்து விடாமல் நன்றாகப் பூச வேண்டும். உட்புறக் கைப்பிடிச் சுவரிலும் மேற்பூச்சு பூசுவதற்கு முன்பே இதைப் பூசிவிட வேண்டும். தற்போது சந்தையில் நீர்க் கசிவைத் தடுக்கும் வகையில் ஏராளமான ரசாயன பேஸ்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த வேதியியல் பொருட்களைச் சுண்ணாம்பு பூசுவதைப் போல சுவரில் பூசலாம். இந்த வேதியியல் பூச்சு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தீர்வாக இருக்கும். பின்னர் மீண்டும் பிரச்சினை தலைகாட்டத் தொடங்கிவிடும்.

No comments: