Saturday, December 14, 2019

துணிவு

வெளியே அசுர மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. கூட்டிலிருந்து ஒரு குருவி வெளியே பறக்கத் தயாரானது. தாய்க்குருவி தடுத்தது. ‘இம்மழையில் பறக்கிறாயே, அடிக்கிற காற்றில் சிறகுகள் பிய்ந்து இறந்துவிடுவாய். உனக்கென்ன பைத்தியமா?’ என்றது. ‘இம்மழை தொடர்ந்தால் வயல்கள் எல்லாம் மூழ்கி உண்ண ஒரு மணியும் கிடைக்காது. நீங்கள் உயிர்த்திருந்தாலும் பசியில் மரிப்பீர்கள். பசியில் மரிப்பதிலும், விபத்தில் மரிப்பது தேவலை. முடிந்தால் தப்பித்துத் தொலைதூரம் செல்வேன்’ எனக் கூறிவிட்டுப் பறந்தது.

‘எட்டிப் பறக்கிறவர்கள்தானே வெற்றியைத் தட்டிப் பறிக்க முடியும்!’ என்பதோடு கதை முடிவடைகிறது.

கதை கூறும் தத்துவ நெறிகள்

சிக்கல்களை எதிர்கொண்டு வாழ மனிதன் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இச்சிறுகதை வலியுறுத்துகிறது. சிக்கல்களை எதிர்கொள்ள விரும்பாமல் உயிரை விடுவதைக் காட்டிலும், அவற்றை எதிர்கொண்டு உயிர்வாழ்வது சிறந்தது என்பது உரைக்கப்படுகிறது. வாழ்க்கையில் சிரத்தை எடுத்துக்கொண்டு வாழாவிட்டால் வாழ்க்கையே கிடையாது (சிரத்தை - அக்கறை). 

வெற்றி என்பது நாம் உட்கார்ந்த இடத்திலேயே வந்து கிட்டுவது அல்ல. அதை எட்டிப்பிடிக்க உழைப்பு வேண்டும்; முயற்சி வேண்டும் என்பது உரைக்கப்படுகிறது. இக்கதையில் இடம்பெறும் குருவி, தாய்க்குருவி தடுத்தும்கேளாமல், மழையில் இறந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் உயிர் வாழும் பொருட்டு வேறு இடம் நோக்கிச் செல்லும் முயற்சி அதன் வெற்றிக்கு வழிகாட்டுவதாயுள்ளது. ‘வயல்கள் எல்லாம் நீரில் மூழ்கிய நிலையில் உணவின்றி, நீங்கள் இப்போது உயிர்த்திருந்தாலும், இறக்க வேண்டித்தான் வரும்’ என்பதன் மூலம் கஷ்டப்படாமல் வெற்றி கிட்டாது என்பது அறிவுறுத்தப்படுகிறது. இக்கருத்து குருவிகளுக்கு மட்டுமல்லாமல் உயிர் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

No comments: