Monday, October 5, 2020

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...

இங்கே சினிமாதான் எல்லோருக்கும் உயிர்மூச்சு.  அப்படியே இருக்கட்டும்.  எழுத்தாளர்களாகிய நீங்களும் ஏன் ஐயா அதில் கிடந்து நாறுகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி.  நான் என்ன பாடும் நிலாவைக் கேட்கக் கூடாது என்றா சொன்னேன்?  ஏன் இந்த ஹிஸ்டீரியா என்றுதான் கேட்கிறேன்.  ஆப்ரஹாம் பண்டிதர் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  அவருடைய கருணாமிருத சாகரம் என்ற மிகப் பெரிய நூலில் (ஆறு தொகுதிகள், உண்மையிலேயே அது சாகரம்தான்) அவர் தமிழ் இசையிலிருந்துதான் இந்திய இசையே பிறந்தது என்பதை மிக வலுவான ஆதாரங்களோடு 2000 பக்கங்களில் விளக்கியிருக்கிறார்.  இதற்கு அவர் காலத்து சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞர்கள் அத்தனை பேரும் ஒப்புதல் அளித்து முன்னுரை அளித்திருக்கிறார்கள்.  மகா வைத்தியநாத சிவன் மட்டுமே முரண்படுகிறார்.  இந்தப் புத்தகத்தை நாம் வெறுமனே படிக்க முடியாது.  கற்க வேண்டும்.  உதாரணமாக, ஸ்வரம், சுருதி என்று வந்தால் ஸ்வரம் என்றால் என்ன, சுருதி என்றால் என்ன என்று தெரிந்து கொண்டுதான் அடுத்த வாக்கியத்துக்குப் போக வேண்டும்.  இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட ஒரே மொழி உலகிலேயே தமிழ் ஒன்றுதான் என்கிறார் பண்டிதர்.  ஆதியிலே வார்த்தை இருந்தது என்று வேதாகமம் சொல்கிறது அல்லவா?  அந்த வார்த்தை நாதப் பிரம்மம்தான்.  ஆதியிலே நாதம் இருந்தது.  அதை இந்த உலகிலேயே முறைப்படுத்தியவன் தமிழன் மட்டுமே என்று 2000 பக்கங்களில் நிறுவியிருக்கிறார் பண்டிதர்.  அது உண்மைதான் என்று இன்னொரு சங்கீத மேதை – வீணை எஸ். ராமநாதன் தனது சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம் என்ற நூலில் நிறுவுகிறார்.  ராமநாதனின் நூலுக்கு மூல நூல் பண்டிதரின் சாகரம்தான்.  நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் பிரம்மராஜனின் மீட்சி இதழில் ராமநாதனின் சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம் நூலுக்கு மதிப்புரை எழுதியிருக்கிறேன். 

இப்போது நாம் எல்லாரும் சினிமா பாட்டு ஜிம்குஜிப்பா பாடி டப்பாங்குத்து ஆடிக் கொண்டிருக்கிறோம்.  ஆடுவோம்.  நம்முடைய பாரம்பரியம் யாழும் தமிழ் இசையும் அழிந்தது போல் அழிந்து போகட்டும். 

பின்குறிப்பு: என்றாவது ஒருநாள் அந்த கருணாம்ருத சாகரத்தின் சுருக்கத்தையாவது உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல இறையருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.  மிக மிக விஞ்ஞானபூர்வமாக ஒவ்வொரு ஹிந்துஸ்தானி ராகத்தையும் எடுத்து வைத்து அதற்கு இணையான தமிழ் ராகத்தை சிலம்பிலிருந்தும் அதன் உரைகளிலிருந்தும் பழந்தமிழ் நூல்களிலிருந்தும் எடுத்து முன்வைக்கிறார்.  ஏதோ இயற்பியல் நூலைப் படிப்பது போல் இருக்கிறது.  ஆறு ஏழு அகில இந்திய சங்கீத மாநாடுகளைத் தஞ்சாவூரில் நடத்தி, தன்னுடைய ஆய்வுகளை இசை அறிஞர்களின் முன்னே நிரூபித்தார்.   வைத்தியர் என்பதால் இதற்கெல்லாம் அவர் நல்ல வசதியானவராக இருந்ததால் நிறைய செலவும் செய்ய முடிந்தது.  எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரையும் மதிக்கத் தெரிந்தவராகவும், கிறிஸ்தவராகவும், தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும், எந்த சமூகத்தின் மீது வெறுப்பு இல்லாத பண்பாளராகவும், அதிசயக்கத்தக்க ஒரு மேதையாகவும் விளங்கியதால் எல்லோரும் அவரோடு மிக இயல்பாக விவாதிக்கவும் செய்தனர்.

பதிவு#சாரு நிவேதிதா

No comments: