Friday, October 30, 2020

நான் தமிழ், இந்து அல்ல!

#எது_மத_அடையாளம் 

நான் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணை தாய்லாந்தில் சந்தித்தேன். அது ஒரு Starbucks காபி நிலையம். கருப்பாய் இருந்தாள். ஆனால் தோற்றத்தில் இந்தியப் பெண் மாதிரி இருந்தாள். சினேகமாய்ச் சிரித்தேன். அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

"இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?"

"இல்லை தென் ஆப்பிரிக்காவிலிருந்து"

என்றாள். எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அவளது கையில் ஒரு காபி, எனது கையிலும் ஒரு காபி.

"இங்கு உக்காரலாமா?"

"ஓ" என்று தலையசைத்தாள். 

அவள் தான் கால்நடை மருத்துவர் என்றும், உயிர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றும் சொன்னாள்.அவளது பணி, தாய்லாந்துக்கு வந்ததற்கான காரணம் போன்றவற்றைச் சுற்றி எங்களது உரையாடல் சென்று கொண்டிருந்த்தது.

மொழி பற்றி லேசாக உரையாடல் திரும்பியது.

"உங்கள் தாய் மொழி என்ன?"

"தமிழ்"

என்றாள். எனக்கு மேலும் ஆர்வம் பற்றிக்கொண்டது.

"உங்களுக்குத் தமிழ் தெரியுமா?"

"தெரியாது, தாத்தா, பாட்டி பேசுவார்கள். ஆனால் எனக்குத் தெரியவில்லையே என்று வருத்தமாக உள்ளது".

"ஏன் கற்றுக் கொள்ளாமல் விட்டீர்கள்"

"எனது பள்ளிப் பருவத்தில் வாய்ப்புகள் இல்லை. ஆனால் இப்பொழுது நிறைய தமிழ் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் தோன்றியுள்ளன. ஆகவே இளைய தலைமுறை தமிழை நன்கு கற்கும்" என்றாள். 

உள்ளத்தில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. மெதுவாய் எங்கள் பேச்சு மதத்தை நோக்கித் திரும்பியது.

"நீங்கள் இந்துவா?"

"இல்லை. நான் தமிழ்"

என்றாள். எனக்குச் சங்கட்டமாகப் போய்விட்டது. ஒருவரிடம் நீங்கள் என்ன மதம் என்று கேட்க வேண்டுமே ஒழிய நீங்கள் இந்த மதத்தைச் சேர்ந்தவரா என்பது நாகரீகம் இல்லை என்று எண்ணிக்கொண்டு

"மன்னிக்கவும், நான் நேரடியாகக் கேட்டிருக்கக் கூடாது. நீங்கள் தமிழ் தான். ஆனால் உங்கள் மதம் என்ன?"
என்று மறுபடியும் வினவினேன்.

அவள் மறுபடியும் "தமிழ் தான்" என்றாள். சொல்லிவிட்டு "ஏன் மறுபடியும் கேட்கிறீர்கள்? ஏதாவது தவறுதலாய்ச் சொல்லிவிட்டேனா?"

"இல்லை, தமிழ் என்பது இனம். ஆனால் மதமில்லையே? இந்தியாவில் எங்களைக் கேட்டால், தமிழன் என்று சொல்லுவோம். ஆனால் மதம் என்றால் இந்து என்றுதான் சொல்வோம்" என்றேன்.

"எங்கள் சமூகத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்லை. நாங்கள் தமிழ் என்றுதான் சொல்வோம். தென் ஆப்பிரிக்காவில் உள்ள சமூகத்தில் தமிழ், இந்துஸ்தானி, முஸ்லீம் என்று வேறுபாடு உள்ளது. நாங்கள் முருகன், காளி போன்ற தெய்வங்களை வணங்குபர்கள், இந்துஸ்தானியர்கள் போல் அல்ல ஆகையால் தமிழர்களை இந்துஸ்தானிகள் என்றோ, இந்து என்றோ சொல்வதில்லை, தமிழர்கள் என்றுதான் அழைப்பார்கள்" என்றாள். 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, விடை பெற்றுச் சென்றாள்.
எனக்கு ஏன் இந்தியாவில் மட்டும் தமிழர்கள் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்ற சிந்தனை வந்தது. ஏதாவது மத மாற்றம் நடந்திருக்குமோ?

அதன் பிறகு சமீபத்தில் எனக்கு தென் ஆப்பிரிக்காவின் டர்பனுக்கும், நாடேல் மாகணத்துக்கும் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பெண் சொன்னது உண்மையென்று நேரடியாக உணர்ந்தேன். அங்கு தமிழர்கள் முருகனையும், சிறு தெய்வங்களையும் வழிபட்டுக்கொண்டு தமிழர்களாகவே வாழ்கிறார்கள்.

அதேபோல் எனது அலுவலகத்தில் ஒரு பர்மியன் இருக்கிறான். அவனிடம்  வினவினேன். தான் ரங்கூனிலிருந்து வருகிறேன் என்றான். அங்கு தமிழர்கள் சிலர் வாழ்கிறார்கள் தானே என்றேன். ஆமாம் சிலர் அல்ல, பலர் என்றான். தமிழர்களுக்கென்று மன்றங்கள் எல்லாம் இருக்கிறது. தமிழர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் என்று தனித் தனியே மன்றங்கள் வைத்துள்ளார்கள் என்றான். எனக்கு மறுபடியும் ஆச்சரியம், இங்கும் தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை போல என்று உணர்ந்தேன். பர்மியன் மெதுவாய் என் காதருகே வந்து "என் உண்மையான பெயர் என்ன தெரியுமா, வடிவேலு" என்றான். முருகக் கடவுளின் பெயர். அவன் தந்தை தமிழராம். தாய் பர்மியராம்.

"நான் தமிழ், இந்து அல்ல!"

Abinaya KC

No comments: