Tuesday, December 22, 2020

கோபம் நல்லது தான்...

கோபத்தால் இழந்ததை விட அதிகம் சாதித்தோர் கோபம் மீது ஒருபோதும் கோபம் கொள்வதில்லை...

கோபத்திற்கு நாம் ஆட்படுவதும் கோபம் தன்னுள் நம்மை உட்படுத்துவதும் சராசரி வாழ்க்கையில் அன்றாடும் நடைபெறும் நிகழ்வு தான்...

கோபத்திற்கு அடிமையாகாமல் அதைக் கடப்பது தான் பெரும் திறமை...

கோபத்தைக் கலைப்பது வேறு, களையெடுப்பது வேறு.கோபம் கொடியது. ஆனால் சாபத்திற்கு ஆட்படுவதல்ல...

கோபம் தான் அடிமைத் தளைகளை தகர்த்தெறிந்தது. கோபம் தான் மக்களாட்சியை உருவாக்கிக் கொடுத்தது...

கோபம் தான் கோழைத்தனத்தை கொச்சைப்படுத்தி வீரத்தை வெளிப்படுத்தியது...

கோபம் தான் அறியாமையை களையெடுத்து. அறிவை சுத்திகரித்தது. உரிமைகளை உரக்கப் போராடி பெற்றுத் தருவது கோபமே...!

கோபம் இருவகை:

உண்டாகும் கோபம்….! உண்டாக்கப்படும் கோபம்...!!

முன்னது தவிர்க்கக் கூடியது. பின்னது தக்க வைத்துக் கொள்ள வேண்டியது...

ஒன்று அவசிய கோபம். மற்றொன்று அவசியமற்ற கோபம்...

அவசிய கோபம் உணர்வுகளில் வேரூன்றி விவேகமாய் வெளிப்படுகிறது...

அவசியமற்ற கோபம் உணர்ச்சிகளுக்கு பலியாகி, சுய' காவுக்கு வித்திடுகிறது. கோபம் கூட ஒரு வரப்பிரசாதம் தான். நம் கட்டுப்பாட்டுக்குள் அதை வைத்திருக்கும் வரை...

கடிவாளம் கழண்டு விழுவதையும் உணராதவாறு படும் கண்மூடித்தனமான கோபம் தான் பயணப் பாதையை சிதறடித்து நம்மை விபத்துக்குள்ளாக்குகிறது...

உண்டாக்கப்படும் அவசிய கோபத்தை அணை கட்டிப் பராமரித்து வந்தால அதன் மதகுகளுக்குள் இலகுவாய் நாம் வெளியேற நம் வடிகால்கள் தயாராய் தளும்பி நிற்கும்...

அதிகாரத்தை மூலமாக வைத்து கண்மூடித்தனமாய் கட்டவிழ்த்து விடும் கோபத்தை விட, அதிகாரத்தை எதிர்த்து நிதானமாய் வெளிப்படும் கோபத்திற்குத் தான் சக்தி அதிகம்...

பொறுமை சிதறினால் கடலினும் பெரிதெனில், அந்தப் பொறுமை மலையில் பனிக்கட்டியாய் கோபம் உறைந்துள்ளது என்று தானே பொருள்...

இருக்கும் இடம் தெரியாமல் சாந்தமாய் ஒளிந்திருக்கும் அந்த நன்கோபம் தான் முழு வல்லமை படைத்தது...

தணிந்த நிலையில் கனன்று கொண்டிருக்கும் அந்தக் கோபத்தை எவராலும் நுட்பமாய் அடக்கி விட முடியாது. வெற்று சமரசங்களுக்கும் அது அடங்காது...

இலக்குகளை கோர்வையாய் அணிவகுத்த வண்ணம் துடிப்புடன் காத்திருந்து என்றாவது ஒருநாள் நம் செயல்களை சாதித்துக் கொள்ள வழி கோலும்...

புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் உயிர்ப்புடன் வைத்திருக்க அவசியம் நமக்குக் கோபம் தேவை...

நாம் துன்பப்பட்டுக் கடக்கும் சூழ்ச்சி, துரோகம், வக்ரம், பாகுபாடு, குரூரம், நன்றி கெட்டத்தனம் இவற்றை மறுபடி, மறுபடி எதிர்கொள்ள நேரும்போது அவற்றை தைரியமாய் உள்வாங்கி நேர்த்தியாய் எதிர்த்தடிக்க. அணையா அடுப்பாய் கோபம் நம்முள் கனன்று கொண்டு இருந்தால் தான் சாத்தியமாகும்...

அவசியமற்ற, உண்டாக்கிக் கொள்ளும் கோபத்தை நிச்சயம் தவிர்க்க இயலும்...

மாறாக, அந்தத் தருணங்களில்… நாம் கட்டாயமாக நமக்குள் அமைதியை வர வைத்துக் கொண்டு, கோபம் கொந்தளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

அவ்வாறு கடக்கும் போது, வகையாக நம்மை வீழ்த்த வந்த ஒரு எதிரியிடம் பலியாகாமல் லாவகமாய் தப்பித்த ஒரு பெருமிதம் உள்ளுக்குள் ஏற்படுவதை உணரலாம்...

தலைக்கு வந்தது, தலைப்பாகையைக் கூடத் தொடாமல் போய் விடும்...

மின்விசிறியின் சுழற்சி தழுவ தழுவ, வியர்வை பிசுபிசுப்பு குறைவது போல படிப்படியாய் கோபம் நம்மை விட்டு விலகுவதை உணரப்படும்...

தெளிவான சிந்தனையில் முழுமையான மனம் பக்குவப்படுவதை உணரலாம்...

கோபத்தை மனைவி, மக்களிடம் கொட்டி விடுவதால்,  நம் கோபம் கொஞ்சமும் தணிந்து போய் விடுவதில்லை...

மாறாக, அவர்களும் மனத்தாக்குதலுக்கு உள்ளாகி கலகலப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் இல்லம்...

நம் கோபத்தின் வெளிப்பாட்டால் இக்கட்டான நிலைக்கு அவர்களை உள்ளாக்கி விட்டோமே என்ற அங்கலாய்ப்பு நம்மை மேலும் வருத்தங்களுக்குள்ளாக்கும்...

மருத்துவ அறிவியல் படிப்பினையானது, வயதாகயாக  தன்னிச்சையாய்க் கோபம் தலையெடுத்து சிறுகச்சிறுக வளரலாகும் எனக் கூற வருகிறது...

ஆம் நண்பர்களே...!

 கோபம் தொடர்பான இதுபோன்ற மருத்துவத் தகவல்களையும், செய்திகளையும் நமது அறிவார்ந்த கவனத்தில் பதித்து வைத்திருந்தாலே போதும். எச்சரிக்கையுடன் எதிர்கொள்ளலாம் கோபத்தை...!

 கோபம் கடத்துவது வலிமையற்றது; கோபத்தைக் கடப்பது வலிமை. கோபம் கொள்வது மடமை; கோபம் கொல்வது திறமை...!!

கோபப்படாமல் இருந்து கோபத்தை கோபப்படச் செய்யுங்கள்...!

No comments: