Monday, July 26, 2021

சோம்பல் நிறைந்த வாழ்க்கை...

சோம்பல் இப்போது நாகரீகமாக மாறி விட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்ய மாட்டேன்.!’ என்று சொல்வது இன்று பழக்கமாகப் போய் விட்டது.. 

ஆனால், சோம்பல் அத்தனை சுகமானது அல்ல. இந்த சோம்பல் நம் வாழ்க்கை முன்னேற்றத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், பலவகையான நோய்களையும் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.

புற்றுநோயைக் கைப்பிடித்துக் கூட்டி வந்து நம் உடலில் சேர்ப்பது மது, சிகரெட், புகையிலை என்ற மூன்று தான்.

இது ஓரளவு மருத்துவம் அறிவு உள்ள அனைவரும் அறிவார்கள். இந்தப் பட்டியலில் தற்போது புதிதாகச் சேர்ந்திருப்பது சோம்பல். 

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு அறிஞரை சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அவர் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக், டொக் என்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. 

அதைப் பார்த்த ஒரு மனிதன்,

"மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டு இருக்கிறாய்? இது வீண் வேலை அல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, 

""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். சோம்பேறியாக இருந்தால் எதுவும் கிடைக்காது...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கி இருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து,

மனிதனே, நீயும் தேடு... மரத்திலும்,, மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த அறிஞர்,அந்த மனிதனைப் பார்த்து.,

நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு.., உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமையும், நோயும் தான் உனக்குக் கிட்டும்'' என்றார்..

*ஆம்.,நண்பர்களே..,*

*உயிரோடு உள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல்..*

*சோம்பல் உங்களை ஏமாற்றாமல் காத்துக் கொள்ளுங்கள்!* 

*ஓய்வு என்பது சோம்பலின் நண்பன். ஓய்வை உள்ளே நுழைய விட்டால், சோம்பலும் வரும்.* 

*அடுத்த வேலை தான் ஓய்வு. இன்னொரு சவால் தான் இன்னொரு தினம்.......*

📣📣📣📣📣📣📣📣📣📣📣📣

No comments: