Sunday, May 1, 2022

ஸ்ட்ரோக்/ பக்கவாதம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ???

நான்கரை மணிநேரத்திற்குள் 
பக்கவாதத்தை வெல்லலாம் 

எப்படி?

நம் வீட்டிலோ அல்லது அண்டை வீட்டில் நமக்கு தெரிந்தவர்களுக்கோ பின்வரும் அறிகுறிகள் தோன்றினால்  உடனே அதை பக்கவாதம் என்று கொள்ள வேண்டும் 

1.நிலை தடுமாற்றம் / சரியாக நடக்க இயலாமை/ தடுமாறி கீழே விழுதல் / சரியாக நடக்க முடியாமை / எழுந்து நடக்க அல்லது உட்கார இயலாமை 
( BALANCE) 

2. கண் பார்வை மங்குதல்/ கண் பார்வை தெரியாமல் போதல்/ கண் பார்வை இரண்டாகத் தெரிதல் 
( EYE )

3. முகம் ஒரு பக்கமாக தொங்கிப்போதல்/ ஒரு பக்கம் வாய் இழுத்துக் கொள்ளுதல் 
(FACE - one sided drooping) 

4. கைகளோ கால்களோ அசைவின்றி தொங்கிப்போதல்/ அல்லது வலு குறைந்தது போல் தோன்றுதல் 
( ARM WEAKNESS) 

5. பேச்சு குளறுதல்/ சுத்தமாக  பேச்சு தடைபடுதல்  ( Speech Difficulty ) 

மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றினால் 
உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு செய்து "பக்கவாதம்" ஏற்பட்டிருப்பதாக கூறுங்கள் (6. Time to call 108 ambulance) 

பக்கவாத அறிகுறிகள் தோன்றும் 
நான்கரை மணிநேரங்களுக்குள் 
அந்த பக்கவாதம் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து 

மூளையின் ரத்த நாள அடைப்பினால் பக்கவாதம் ஏற்பட்டது (80% பக்கவாதங்கள் ரத்த நாள கட்டிகள் மூலம் ஏற்படும் அடைப்பினால் உருவாகுபவையே ஆகும். மீதி 20% ரத்த நாளக் கசிவினால் ஏற்படுபவை) சிடி ஸ்கேன் மூலம்  உறுதி செய்யப்பட்டால்

உடனடியாக அந்த ரத்தக்கட்டியை கறைத்திடும் மருந்தான  ஆல்டெப்லேசை நான்கரை மணிநேரங்களுக்குள் செலுத்தினால் பக்க வாத அறிகுறிகள் முழுமையாக நீங்கி  மாயாஜாலம் போல மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்க்கான வாய்ப்பு அதிகம். 

எனவே யாருக்கேனும் பக்கவாத அறிகுறிகள் தோன்றுமானால் உடனடியாக 
108க்கு அழைத்து அருகில் இருக்கும் 
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்றிடுங்கள்.

அங்கு TAEI மையம் எனும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் உடனடியாக பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு முழுமையாக குணமாகலாம். 

தனியாருக்கு செல்ல விரும்புபவர்கள் 
மூளை நரம்பியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவமனைகளுக்கு உடனே செல்ல வேண்டும். 

மேற்சொன்ன சிறப்பு சிகிச்சை பெற இயலாத சிறு குறு மருத்துவமனைகளில் நேர விரயம் செய்யாமல் நேரடியாக 
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விரைவது பொன்னான நேரத்திற்குள் சிகிச்சை பெற உதவும். 

நன்றாக நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள் 

ஸ்ட்ரோக் என்றால் நான்கரை மணிநேரத்திற்குள் 
எவ்வளவு விரைவாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அடைய முடியுமோ அடைந்து 
சிடி ஸ்கேன் செய்யப்பட்டு 
அதற்குண்டான சிகிச்சையைப் பெற வேண்டும். 

நான்கரை மணிநேரத்திற்குள் 
பக்கவாதத்திற்கு சிகிச்சை செய்தால் 
முழு குணம் பெறலாம் என்பதை மறவோம்.

நன்றி 

Dr.A.B. ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

No comments: