வர்த்தக மயமான வாழ்க்கை எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள்.
நவீனம் நடத்தும் பொருளாதாரப் பந்தயத்தில் ஓடுவதற்கு சொந்த ஊர் சுமையாக இருந்தது அதை உதறி வீசினார்கள், வேகம் மேலும் கூடியது.
பந்தயம் மேலும் கடினமான போது தாய்மொழி சுமையாக இருந்தது அதையும் வீசினார்கள் இன்னும் வேகம் அதிகரித்தது.
பின்னர் அறச்சிந்தனைகள் பெறும் சுமையாயின அவை அனைத்தையும் உதறி விட்டு ஓடினார்கள்.
இறுதியில் உறவுகள் யாவும் சுமையாகிப் போயின அவற்றையும் கழற்றி வீசி விட்டு பொருளாதாரப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நவீன மனிதர்கள்.
இப்போது பொருளாதாரம் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை என்ற வெறி மட்டும் எஞ்சி உள்ளது இனி வீசி எறிய எதுவுமில்லை.
குடும்பங்கள் யாவும் சிதறிக் கிடக்கின்றன. மடிக்கணினி திரை வழியாக பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் பெரியவர்கள் உருவாகி விட்டார்கள் பிறந்தப் பிள்ளையின் பசிக்கு பால் ஊட்டவும் மலத்தைக் கழுவவும் கூட நேரம் இல்லாத இளம் அம்மாக்கள் உருவாகி விட்டனர்.
மனைவி அடிவயிற்று வலியால் துடித்தாலும் அரவணைத்து தட்டிக் கொடுக்கும் பக்குவம் இல்லாத இளம் கணவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
பல பெரியவர்களுக்கு பிள்ளைகளைப் பார்க்காத ஏக்கத்திலேயே இதயம் வலிக்கிறது.
பிள்ளைகளால் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப முடிகிறது வந்து பார்க்க வழியில்லை.
எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்கள் விழுங்கி விட்டன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன மனித மாண்பு வெகுவாகச் சுருங்கி விட்டது.
மூன்றே வயது நிரம்பிய பிள்ளைகள் மழலைக் காப்பகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்தக் கால கல்வி முறையில் பிள்ளைகள் முழுமையாக வீட்டில் இருப்பதே ஐந்து வயது வரைக்கும் தான், அதன் பின்னர் ஓடத்தொடங்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதற்கும் நிற்பதற்கு வழியே இல்லை அந்த ஐந்து வயது வரைக்குமாவது பெற்றோருடனும் உறவினருடனும் வாழும் உரிமை குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை.
தொடக்கத்தில் கூட்டுக் குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக பிரிந்தன. இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள்.
பெற்றப் பிள்ளைகளை ஐந்தே ஐந்து ஆண்டுகள் கூடப் பார்த்துக் கொள்ள முடியாத சமூகத்துக்கு மழையும் காற்றும் சீராக வழங்கப்படுமா என்ன..?
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி -இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை, மனித இனம் தனது அழிவுக்கான ஒரு வழிப்பாதையில் ஓடத் தொடங்கி விட்டது, இனி இதைத் தடுப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
மாறுவோம்... மாற்றுவோம்... மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்குவோம்.
வாழ்க வளமுடன். சிந்தித்து செயலாற்றுங்கள்..
No comments:
Post a Comment