Sunday, June 18, 2017

அபுதாபியில் மசூதி ஒன்று அன்னை மரியாவுக்கு அர்ப்பணம்


ஜூன்,16,2017. ஐக்கிய அரபு குடியரசில் (EAU), ஒரு மசூதிக்கு, அன்னை மரியாவின் பெயரைச் சூட்ட, அந்நாடு தீர்மானித்திருப்பது, கிறிஸ்தவர்களுடன், முஸ்லிம்கள் கொண்டிருக்கும் நல்லுறவின் அடையாளமாக உள்ளது என, அராபியாவின் தென் பகுதி திருப்பீடப் பிரதிநிதி, ஆயர் Paul Hinder அவர்கள் கூறினார்.
அபுதாபியின் வாரிசு இளவரசரும், பாதுகாப்பு அமைச்சருமான Sheikh Mohammad Bin Zayed Al Nahyan அவர்கள், Al Mushrif மாவட்டத்தில் Sheikh Mohammad Bin Zayed என்ற பெயரிலுள்ள மசூதிக்கு, அன்னை மரியாவின் பெயரைச் சூட்டுவதாக, ஜூன் 14, இப்புதனன்று அறிவித்தார். மற்ற மதங்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதன் அடையாளமாக, இவ்வாறு தான் தீர்மானித்ததாக, Al Nahyan அவர்கள் கூறினார்.  
Sheikh Mohammad Bin Zayed மசூதி, "Mariam, Umm Eisa", அதாவது, மரியா, இயேசுவின் தாய் என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த மசூதி, புனித யோசேப்பு பேராலயத்திலிருந்து நடந்துசெல்லும் தூரத்தில் உள்ளது.
Al Nahyan அவர்களின் இத்தீர்மானம் குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, ஆயர் Paul Hinder அவர்கள், இத்தீர்மானம், இஸ்லாம்-கிறிஸ்தவ உரையாடலில் இந்நாடு கொண்டிருக்கும் ஆர்வத்தையும், திறந்த மனத்தையும் காட்டுகின்றது, மேலும், இது மத சகிப்புத்தன்மையின் அடையாளமாகவும் உள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி


No comments: