Thursday, October 19, 2017

இலங்கை வேந்தன் உயர் திரு. இராவண மகாராஜா - பகுதி 2

இராவணனின் கதை கி.மு 9050 காலப்பகுதியில்... அதாவது இலங்கைத் தீவும், தமிழகமும் இரண்டாம் கடற்கோளுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்திருந்த சமயத்தில் தொடங்குகிறது. இரண்டாம் கடற்கோளுக்கு முந்தைய பண்டைய தமிழகம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது.
பெருவளநாடு, தென்பாலி நாடு, திராவிட நாடு, சேர நாடு, சோழ நாடு.. என அவை ஐந்து நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கடற்கோள்களால் பெருவள நாடும், தென்பாலி நாடும் அழிந்து விட... பிற்பட்ட காலத்தில் இலங்கைத் தீவு தோண்றி ஈழ நாடு உருவாகியது. அன்றைய காலத்தில் அப்போது ஈழ நாட்டை ஆட்சி புரிந்த மன்னனே விச்சிரபாகு என்பவனாவான். மன்னன் விச்சிரபாகுவுக்கும், அவனது மனைவி கேகசிக்கும்... இராவணன், கும்பகர்ணன், பீடணன்... என்னும் மூன்று ஆண் குழந்தைகளும்... காமவல்லி என்கிற ஒரு பெண் குழந்தையும் பிறந்தார்கள்.
இதில் மூத்த குழந்தையாகப் பிறந்த இராவணன் சிறு வயதிலேயே மிகச் சிறந்த போர் வீரனாகவும்.. சிறந்த அற நெறியாளனாகவும் இருந்திருக்கிறான். பிற்காலத்தில் தந்தை விச்சிரவாகு இறந்து விட இராவணன் இலங்கையின் மன்னனாக தன்னை முடி சூட்டிக் கொண்டான். உறுதியான உடலமைப்பைக் கொண்ட இராவணன் மிகச் சிறந்த ஒழுக்க சீலனாகவும் இருந்திருக்கிறான்.. தனது ஒரே தங்கையாகிய காமவல்லி மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தான்.
அவன் காலத்தில் ஈழ நாட்டில் வாழ்ந்த மக்கள் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். சிங்கள மொழி ஈழத்தில் அக் காலத்தில் உருவாகியிருக்கவில்லை. அதைப் போல தமிழகத்திலும் இன்று இருக்கும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற திராவிட மொழிகளும் அக் காலத்தில் தோண்றியிருக்கவில்லை.. ராவணன் வாழ்ந்த காலத்தில் ஈழத்திலும், தென் இந்தியாவிலும் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்... தவிர, 9000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இலங்கை இப்போது இருக்கும் இலங்கையை விட பல மடங்கு பெரிதாகவும் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் மாறி மாறி வந்த கடற்கோள்களால் இலங்கையின் பல கரையோரப் பகுதிகள் அழிந்து போய் விட்டன.
இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆராய்ச்சி செய்த பல ஆராய்ச்சியாளர்களும் இதனை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை மன்னனான இராவணன் மலை வளம் காண்பதற்காக கடல் கடந்து தமிழகம் சென்று தனது தங்கையோடு குமரி நாட்டில் தங்கி இருந்திருக்கிறான். இப்போது இருப்பதைப் போல அவன் வாழ்ந்த காலப் பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஆழமான கடல் இருக்க வில்லை.. இலங்கையும் இந்தியாவும் கடற்கோள்களால் துண்டாடப்பட்டு தனித் தனியாக இருந்த போதிலும்.... தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைத்தபடி ஒடுங்கிய மணல் திட்டு ஒன்று இருந்திருக்கிறது.. காலப் போக்கில் அந்த மணல்த் திட்டு கடலுக்குள் அமுங்கி விட்டது. அதையே "ராமர் பாலம்" என்று இப்போது அழைக்கிறார்கள்.
இந்த மணல்த் திட்டு வழியாக்தான் இராவணன் தமிழகத்தின் குமரிக்குச் சென்றதும்.. இராமன் இலங்கைக்கு படை எடுத்து வந்ததும் நடந்திருக்கிறது.. அனுமன் போன்ற குரங்குகள் பாலம் கட்டிய கதை எல்லாம் பிற் காலத்தில் வான்மீகியாலும் கம்பனாலும் புனையப்பட்ட சாகசக் கதைகளே.. மன்னார் முனையின் வடிவமைப்பே இந்த மணல் திட்டு இருந்ததற்கான மிகச் சிறந்த உகாரணம் என்று பல அகழ்வாராய்சியாளர்களால் இன்றைக்கும் சுட்டிக் காட்டப்படுகிறது

No comments: