Thursday, October 19, 2017

இலங்கை வேந்தன் உயர் திரு. இராவண மகாராஜா - பகுதி 3

இலங்கை வேந்தன் இராவணன் குமரியில் தங்கியிருந்த சமயத்தில் குமரி நாட்டை சான்றோர் குலத்தவனாகிய "மயன்" என்பவன் ஆண்டு வந்தான். இராவணன் குமரி நாட்டு மன்னன் மயனின் மகளாகிய மண்டோதரியைக் கண்டு... அவளது அழகில் மயங்கி காதலுற்று... பிறகு அவளது தந்தையின் அனுமதியோடு அவளை திருமணம் செய்து கொண்டான். இராவணனுக்கும், மண்டோதரிக்கும் "சேயோன்" என்கிற ஆண் குழந்தை பிறந்தது. இராணவனின் தம்பி "பீடணன்" இலங்கையை ஆள... இராவணன் பல ஆண்டுகள் குமரியில் தன் மனைவி மாமனாரோடு தங்கி இருந்தான்.
இந்த சமயத்தில்தான் இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்து ஆரியர்கள் தமிழகத்தின் எல்லைப் பகுதியான விந்திய மலைக் காடுகளில் குடியேறத் தொடங்கி இருந்தனர். ஆரியர்கள் வேள்விகளில் மனித உயிர்களை பலியிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். விந்திய மலைக்காடுகளில் வாழ்ந்து வந்த பூர்வீகத் தமிழர்கள் ஆரியர்களின் இந்த உயிர் பலியை எதிர்க்க ஆரம்பித்தனர்.
அச் சமயத்தில் விந்திய மலைக் காடுகள் அமைந்திருந்த இடை வள நாட்டை ஆண்ட தமிழ் அரசியாகிய தடாகையின் வேண்டுகோளை ஏற்று... குமரி நாட்டில் தங்கி இருந்த ராவணன் தனது படைத் தளபதிகளாகிய சுவாகு என்பவனையும், நரகாசுரனையும்... விந்திய மலைக்கு அனுப்பி... அங்கே இருந்த ஆரிய அந்தணர்களையும், முனிவர்களையும் அடித்து விரட்டி... "புலை வேள்வி" எனப்படும் உயிர் பலியைத் தடுத்து நிறுத்தினான்.
வேள்வி தடைப்பட்டதால் மனம் வருந்திய "கோசிகன்" எனப்படுகின்ற ஆரிய முனிவன்... வட இந்தியாவில் உள்ள அயோத்திக்குச் சென்று அக் காலப் பகுதியில் வட இந்தியாவை ஆண்ட இராமன், லக்குவன் எனப்படுகின்ற அரசர்களிடம் முறையிட்டான். அக் காலப்பகுதியில் வட இந்தியா முழுவதும் பரந்து வாழ்ந்த ஆரியர்களின் மன்னனான.. இராமனும், அவனது தம்பி லக்குவனனும்.. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தெற்கே தமிழகத்தை நோக்கிப் படை எடுத்து தமிழகத்தையும் ஈழத்தையும் தமது கட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்தார்கள்.
இதன் படி ஆரிய முனிவன் கோசிகனின் வேண்டுகோளை ஏற்று.. இராமனும் லக்குவனும் விந்திய மலைக்கு படை எடுத்து வந்து இடை வள நாட்டின் அரசியாகிய தடாகையைக் கொன்று... அதன் பின்னர் இடைவள நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். அங்கே இருந்தபடியே தெற்கே இருக்கும் குமரி நாட்டையும், ஈழ நாட்டையும் கைப்பற்றுவதற்கான திட்டங்களைத் தீட்டத் தொடங்கினார்கள்.
இடை வள நாட்டின் அரசி தடாகையை காப்பாற்ற இராவணனால் அனுப்பப்பட்ட இராவணனின் படைத் தளபதியாகிய "சுவாகு" போரில் கொல்லப்பட்டான். இன்னொரு படைத் தளபதியாகிய" நரகாசுரன்" மட்டும் உயிர் தப்பி... அடர்த்தியான விந்திய மலைக் காடுகளில்... தக்க தருணத்தை எதிர்பார்த்து தனது படைகளுடன் பதுங்கிக் கொண்டான் .
தனது படைத்தளபதிகளின் ஒருவன் இறந்ததையும் இன்னொருவன் தலைமறைவாகி விட்டதையும் கேள்விப்பட்ட ராவணன்.. அக்காலப் பகுதியில் இடைவள நாட்டில் இருந்த தனது தங்கை காமவல்லியின் பாதுகாப்பின் பொருட்டு "கரன்" எனப்படும் இன்னொரு படைத் தளபதியை இடைவள நாட்டிற்கு அனுப்பி வைத்தான்.
ஆனாலும் இராம லக்குவனர்கள் கரனை கொன்றதோடு மட்டுமல்லாமல்... இராவணனின் தங்கை காம வல்லியை இராமனின் தம்பி லக்குவனன் மான பங்கம் செய்து உடல் உறுப்புகளை அறுத்துக் கொலை செய்தான்.
தனது தங்கையும் படைத் தளபதிகளும் இறந்த செய்தி கேட்ட இராவணன்.. துடித்துப்போய்.. தன் தங்கையின் சாவுக்கு பழி வாங்கும் பொருட்டு.. மாறு வேடம் பூண்டு.. இடை வள நாடு சென்றான்.. தனது தங்கை மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு தண்டனையாக.. ராமனின் மனைவி சீதையை கடத்தி வந்து.. குமரியில் உள்ள "மீஞ்சிறை" என்னும் இடத்தில் அவளைச் சிறை வைத்தான்.
தனது மனைவி இராவணனால் கடத்தப்பட்டு மீஞ்சிறையில் சிறை வைக்கப் பட்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட இராமன்... தனது மனைவி சீதையை மீட்க.. பெரும் படையோடு குமரி நாட்டுக்கு படை எடுத்து வந்தான். வந்த ராமனுக்கும், ராவணனுக்கும் குமரி மீஞ்சிறையில் பெரும் யுத்தம் மூண்டது.
போரில் ராமனின் கை ஓங்குவதை உணர்ந்த ராவணன் சீதையையும் தனது மனைவி மண்டோதரியையும் அழைத்துக் கொண்டு.. தனது தாய்நாடான இலங்கைக்கு பின் வாங்கிச் சென்று.. சீதையை அசோக வனத்தில் தனது மனைவி மண்டோதரியோடு தங்க வைத்தான். சீதைக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் இராவணனின் மனைவி மண்டோதரி அசோக வனத்தில் அவள் கூடவே இருந்து கவனித்து வந்தாள்.
இந்த நேரத்தில் இலங்கையை அக் காலப் பகுதியில் ஆட்சி புரிந்த இராவணனின் தம்பி பீடணன்... இராவணன் சீதையை சிறைப் பிடித்து வந்தது பிடிக்காமல்.. தனது அண்ணன் இராவணனின் இந்தச் செய்கையால்... இலங்கை அழிந்து விடுமோ என அஞ்சி... தனது அண்ணனுக்கு எதிராக சதித் திட்டங்களைத் தீட்டத் தொடங்கினான்.
பின்னர் பீடணன் இராணவனின் போர்கலங்கள், போர் முறைகள்.. மற்றும் படைபலம் பற்றிய குறிப்புகளோடு... குமரி நாடு சென்று இராமனிடம் போய் சரணடைந்தான்.. இராவணன் தம்பி பீடணன் மூலம் இலங்கை பற்றி அத்தனை விபரங்களையும்... இராவணனின் போர்த் தந்திரங்களையும் அறிந்து கொண்ட இராமன் ... அதன் பின்னர் பீடணனோடும் தனது தம்பி லக்குவனோடும் சேர்ந்து பெரும் படையைத் திரட்டி... அக்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்த மணல் திட்டு வழியாக இலங்கை வந்து... இராவணனோடு போர் தொடுத்தான்.

No comments: