Sunday, October 1, 2017

கோபத்தை வெல்லும் வழி..


கோபம் வரும் பொழுது ஒரு ஷெல்பி எடுத்து அமைதியாக இருக்கும் பொழுது அதை நாம் ரசித்து பார்க்கவேண்டும். அப்பொழுது நாம் கோபப்படும்பொழுது எவ்வளவு அழகாக இருப்போம் என தெரிந்துவிடும். மக்கள் முன்னால் மலர்ந்த முகத்தோடு வருபவர்கள் தன்னுடைய தனிப்பட்ட கோபமான முகத்தை வெளியில் காண்பிக்க விரும்புவதில்லை.
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால்,கண்டிப்பாக குணம் இருக்குமிடத்தில் கோபம் இருக்காது. கோபம் எதனால் வருகின்றது. ஒன்று தன்னுடைய சுய விருப்பங்கள் நிறைவேறாத பொழுது, அடுத்து எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளிக்கும்பொழுது, இப்படி தன்னை புரிந்து கொள்ளாதவர்களின் சூழ்நிலை கோபத்தை உண்டு பண்ணுகின்றது.
நான் ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றேன் கோபப்படாவிட்டால் எப்படிவேலை நடக்கும்? கடு கடு என்றிருந்தால் தானே வேலை செய்கின்றனர் என்று கேட்போர் உண்டு. அப்படியானால், உங்கள் மனோநிலை மலர்ந்திருக்கின்றதா? வெளிமுகம் மட்டும்தான் அப்படி இருக்கின்றதா? இல்லை உண்மையிலே கோபம் வருகின்றதா? நீங்கள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து அந்த இடத்தில் கோபமில்லாமல் கம்பீரமாக இருந்து பாருங்கள் உங்கள் வேலை தன்னால் நடக்கும் இது ஒரு கலை.
கம்பீரம் வேறு கோபம் வேறு, தன்னுடைய உயர்ந்த நிலையில் நிலைத்திருப்பது கம்பீரம் தன்னுடைய சுய உணர்வே இல்லாமல் இருப்பது கோபம். கோபம் வரும் சூழ்நிலை வந்தால் அந்த இடத்தை விட்டு விலகிவிடுங்கள். ஒருவர் உங்களை புரிந்துகொள்ளாமல் பேசினால், திரும்ப பேசாதீர்கள் ஏனென்றால் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று கூறியுள்ளார்கள். அதனால் புத்தி இருப்பவர் கோபம் கொள்வதில்லை. கோபம் முதலில் நமக்கு வந்தால் நமது மனமும், உடலும் முதலில் பாதிக்கும் என்று உணருங்கள்.
பாரதி ரௌத்ரம் பழகு என்று சொல்லியிருக்கின்றாரே ஆனால் டாக்டர் கோபமில்லாமல் இருந்தால் தான் உனக்கு உயர் ரத்த அழுத்தம் வராது என்று சொல்லியுள்ளார் என்று மனதிற்கு படுகின்றது. பாரதி காலத்தில் நாட்டை சீர் குலைப்பவர்கள் மீதும், சுதந்திரவேட்கையிலும் அப்படி கூறினார் பாரதி காலத்தில் உணவும் வலிமை நிறைந்ததாக இருந்தது. அவர் காலத்தில் கோபம் என்பதே தெரியாமல் எவ்வளவு அன்போடு இருந்திருந்தால் பாரதி கோபப்பட பழகு என்று சொல்லியிருப்பார் யோசியுங்கள்,
ஆனால், இன்றைய துரித உணவின் காலத்தில் ஆரோக்கியத்திற்காக  எண்ணெய் விளம்பரமே இதை சாப்பிடுங்கள் அதை சாப்பிடுங்கள் என்று  வருகின்றது. என்றால் இன்றைய நிலையில் பாரதி இருந்தால் அன்பாக இருக்க பழகு என்று சொல்லியிருப்பார், உங்களிடம் கோபமிருந்தால் உங்களை வீழ்த்துவது எளிது என்பது உங்கள் எதிரிக்கும்கூட புரிந்துவிடும். கோபம் இருந்தால் அந்த இடத்தில் தன்னுடைய நண்பர்களான வஞ்சனை, பொறாமை இரண்டையும் அழைத்து வரும்.
பொறாமை தனது நண்பனை பழிவாங்கும் தன்மையை கொண்டுவரும், வஞ்சனை பழி பாவத்திற்கு அஞ்சாத நிலையை உருவாக்கி விடும். ஆவேசத்தை தனக்குள் அடக்கிவைப்பது  கோபமாக உருவெடுக்கின்றது. கடும் கோபம் கொள்பவரின் பிரபாவம் ஆறு மாதகாலத்துக்கு  அவரின் மனதை அவருக்கு தெரியாமலேயே பாதித்து கொண்டிருக்கும். கோபம் வெடித்து சிதறும் எரிமலையை போன்றது, ஆவேசம் அதில் கொதித்துக்கொண்டிருக்கும் எரிமலை குழம்பு போன்றது. இதனால் அந்த எரிமலை தனக்கும் அழிவை ஏற்படுத்தி தன்னை சுற்றி இருப்பவருக்கும் அழிவை ஏற்படுத்தும்.
கோபத்தில் சத்திரியனாய் இருப்பதை விட சாணக்கியனாய் இருப்பது மேல், சாத்வீக உணவை இறைவனின் நினைவில் உட்க்கொள்ளும் மனம் அமைதி அடைகின்றது. கோவப்பட்டு சமைப்பவரின் கையில் உணவு உட்க்கொண்டாலும் அதனுடைய பாதிப்பு அந்த உணவின் மீது கண்டிப்பாக ஏற்படும். கோபம் இருக்குமிடத்தில் தண்ணீர் பானை கூட காய்ந்து போய்விடும். கோபத்தின் முகம் யாருக்கும் பிடிப்பதில்லை. கோபத்தில் வரும் வார்த்தைகள் மனித வாழ்க்கையில் தீய விளைவுகளை உண்டாக்கிவிடும். கோபம் என்ற நெருப்பு மன அமைதிக்கு வைத்துக் கொள்ளும் வெடிகுண்டு. வெடிகுண்டு மனதில் வெடித்தால் வாயின் வழியாக பயங்கர சப்தம் வரும். கோபத்துடன் இருப்பவர் சாபத்தை தவிர எதுவும் தருவதில்லை, எனவே கோபத்தை விலக்கி கோபுரம் ஆவோம். அங்கே சமாதான புறாக்கள் குடிகொள்ளும்.

No comments: