*நோ சைடு ஸ்டாண்ட்!*
* மழை நேரங்களில் வாகனங்களை பார்க் பண்ணும்போது, தயவுசெய்து இதைப் பண்ணாதீர்கள். அதாவது, பைக்குக்கு சைடு ஸ்டாண்ட் போடுவது. சைடு ஸ்டாண்ட் போடுவதுதான் இந்த நேரத்தில் ஈஸியான விஷயம். ஆனால், இது பைக்குக்குப் பிடிக்காத விஷயம். சைடு ஸ்டாண்ட் போட்டு பைக்குகளை பார்க் பண்ணும்போது, உங்கள் ஹேண்ட் பார் வழியாக கேபிள்களில் தண்ணீர் பயணம் செய்து, கார்புரேட்டரில் உங்களுக்குத் தெரியாமல் மழை நீர் சேகரிப்பு நடந்துகொண்டிருக்கும். திடீரென உங்கள் பைக் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கு இதுதான் முக்கியக் காரணம். மேலும், சைடு ஸ்டாண்ட் போடும்போது பேட்டரிக்குள்ளும் கெமிக்கல் மாறுதல்கள் நடந்து, பேட்டரியின் ஆயுளும் குறையும். சிரமம் பார்க்காம சென்டர் ஸ்டாண்ட் போடுங்க! ப்ளீஸ்!
*ஹெல்மெட் வைஸரை இறக்குங்க!*
* மழையில் பைக் ஓட்டும்போது, விஸிபிளிட்டி ரொம்ப முக்கியம். ஹெல்மெட் போட்டு தலை நனையாமல் பாதுகாப்பதெல்லாம் ஓகே! அதேநேரத்தில், உங்கள் ஹெல்மெட்டின் வைஸரைத் தயவுசெய்து ஏற்றிவிட்டுப் பயணியுங்கள். ஏனென்றால், வைஸர் வழியாகத் தண்ணீர் திட்டுத் திட்டாக இறங்கி, உங்களுக்கு வெளிச்சாலை தெரிவதில் சிக்கல் இருக்கும். அதேபோல், ஸ்பெக்ட்ஸ் அணிவதையும் தவிருங்கள். ஹாயாக மழை நீரை முகத்தில் வாங்கியபடி ரைடு போவதில் தப்பொன்றுமில்லை.
*டேங்க் கவர் முக்கியம் பாஸ்!*
* சில பைக்குகளில் பெட்ரோல் டேங்க் மூடிகள் ஃப்ளிப் டைப், ஹாப்-அப் டைப் என்று வெரைட்டியாக இருக்கும். இந்த மூடிகளை எல்லா நேரங்களிலும் நம்ப முடியாது. மழை நேரங்களில் பெட்ரோல் டேங்க் வழியாகவும் தண்ணீர் இறங்கும் அபாயம் நடக்கிறது. நட்ட நடுரோட்டில் ஒருவர் பைக் ஸ்டார்ட் ஆகாமல் திணறிக்கொண்டிருக்க, என்னவென்று பார்த்தால் பெட்ரோல் டேங்கில் தண்ணீர்! மறுபடியும் டேங்கில் உள்ள எல்லா பெட்ரோலையும் டிரெயின் செய்துவிட்டுத்தான் பயணம் தொடர வேண்டும். எனவே, பைக்கின் டேங்குக்கு கவர் ரொம்ப அவசியம்.
*மாங்கு மாங்குனு கிக்கரை மிதிக்காதீங்க!*
அதையும் தாண்டி பள்ளத்தில் பைக் கவிழ்ந்து இன்ஜின் ஆஃப் ஆகும் பட்சத்தில், உடனே பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிடத் துடிக்காதீர்கள். பக்கவாட்டில் கவிழ்ந்தால் ஏர்-லாக் ஆக வாய்ப்புண்டு. எனவே, உடனே பைக் கிக்கரை மிதி மிதி என மிதித்து, செல்ஃப் ஸ்டார்ட்டைப் படுத்தி எடுக்காதீர்கள். எனெர்ஜி வேஸ்ட். 100 விநாடிகள் வரை ரிலாக்ஸ் பண்ணுங்கள். வேக்யூம் லாக் ஆகியிருப்பதால், பைக்குக்குக் கொஞ்சம் ரெஸ்ட் தேவை. கொஞ்ச நேரம் கழித்து பைக் தானாக ஸ்டார்ட் ஆகும். அடுத்த பள்ளத்திலாவது பார்த்துப் போங்க!
*சைலன்ஸர் மூழ்குகிறதா?*
* இப்போது வரும் பைக்குகளில் சைலன்ஸர் ஏற்றமாக இருப்பதால் பிரச்னை இல்லை. அதையும் மீறி சைலன்ஸர் மூழ்கும் அளவு நீரில் பயணிக்க வேண்டிய பட்சத்தில், அலார்ட் ஆறுமுகமாக இருக்க வேண்டும். அதாவது, தொந்தரவுகள் இல்லை என்று உறுதிசெய்து கொண்டபிறகு, உங்கள் பைக்கின் கியரிங் செட்-அப்புக்கு ஏற்ப முதல் அல்லது இரண்டாவது கியரிலேயே கிராஜுவலாகச் செல்லலாம். நீங்கள் ஆக்ஸிலரேட்டரை முறுக்க மறந்த ஒரு விநாடியில் சைலன்ஸருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உண்டு. விட்டு விட்டு ‘டர் புர்’ என முறுக்கினால், இறங்கித் தள்ள வேண்டியதுதான். எனவே, ஆக்ஸிலரேஷனில் ஜென்டில் மேனாக இருக்க வேண்டும்.
*ஸ்பார்க் பிளக் இருக்கிறதா?*
* ஒரு பைக்கின் ஸ்டார்ட்டிங் ட்ரபுளுக்கு உற்ற நண்பனும், சிம்ம சொப்பனமும் ஸ்பார்க் பிளக்தான். குளிர் நேரங்களில் பைக் ஓடும்போது, குளிரும் வெப்பமும் சேர்ந்து ஸ்பார்க் பிளக்கின் தன்மைக்கு எதிராக மோதிப் பார்க்கும். சில பிளக்குகளைக் கழற்றிப் பார்த்தால், பாயின்டுகள் தேய்ந்திருக்கும். இந்த நேரங்களில்... ம்ஹூம்.. பைக் நிச்சயம் ஸ்டார்ட் ஆகாது. எனவே, எக்ஸ்ட்ரா ஸ்பார்க் பிளக் கைவசம் வைத்திருப்பது, சிக்கலான நேரத்தில் கைகொடுக்கும். ஒரு ஸ்பார்க் பிளக்கின் விலை 100 ரூபாய்தான்.
*நல்ல டயர் நல்லது!*
* சிலர் பைக்குகளின் டயரைத் தேய்ந்து போகும் அளவு ஓட்டுவார்கள். டியூபைக் கழற்றினால், ‘குருதிப்புனல்’ கமல்போல், மிமீ-க்கு ஒரு டேமேஜ் ஆகி, பஞ்சர் ஒட்டப்பட்டிருக்கும். மழை நேரம் வருகிறது என்று தெரிந்ததும், உங்கள் டயரைச் சோதனை இடுங்கள். சிலருக்கு ஈரத் தரையில் ஸ்லிப் ஆகும், பள்ளங்களில் கிரிப் கிடைக்காது. செக் செய்தால், டயர்களின் பட்டன்கள் தேய்ந்திருக்கும். எனவே, மழை நேரத்தில் புது டயரை மாற்றி ஓட்டிப் பாருங்கள். அத்தனை தன்னம்பிக்கை கிடைக்கும்.
*லோ பேட்டரியில் பைக் ஓட்டாதீர்கள்!*
* இப்போது வரும் பைக்குகளில் பேட்டரியில் சார்ஜ் இல்லையென்றால், ஸ்டார்ட் ஆகாது; ஹார்ன் அடிக்காது; கரன்ட் வராது. சிலர் லோ பேட்டரி வார்னிங் வந்தபிறகும், செல்ஃப் ஸ்டார்ட் பண்ணுவார்கள்; ஹார்ன் அடிப்பார்கள்; ஹைபீம் லைட் போட்டு சீன் போடுவார்கள். இது பெரிய சிக்கலில் கொண்டு போய்விடும். திடீரென ஃபுல் சார்ஜும் இறங்கியபட்சத்தில்... மெக்கானிக்கே கைவிரித்து விடுவார். வேறு வழியே இல்லை; புது பேட்டரி மாற்றினால்தான் பைக்கை ஸ்டார்ட் பண்ணவே முடியும்.
*செயின் ஸ்ப்ரே அடியுங்கள்!*
* மழை முடிந்ததும் சில பைக்குகளில், ‘கற கற’வென பின் பக்கம் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். பைக் ஓட்டும்போது செம எரிச்சலாக இருக்கும். இது மசகுத் தன்மை குறைந்ததால், செயின் ஸ்ப்ராக்கெட்டுகளில் இருந்து வரும் சத்தம். செயின் ஸ்ப்ரே ஒன்று கைவசம் வைத்திருந்தால், சூப்பர்! (இது செயின் கார்டு இல்லாத பைக்குகளுக்கு மட்டும்தான்!)
ரொம்ப முக்கியம் - மழை விட்டவுடன் ‘இப்போதானே ஆயில் மாத்தினோம்; அதுக்குள்ள எதுக்கு?’ என்று காசு பார்க்காமல், பைக்கை ஒரு தடவை ஆயில் சர்வீஸ் விட்டு விடுங்கள்!
*ஹேப்பி ஜர்னி!*
No comments:
Post a Comment