Thursday, November 23, 2017

சான்றோனாக வாழ வழி இதோ...

சான்றோர்  உயர்வானவற்றைச் சிந்திக்கின்றனர்; அவர்கள் சான்றாண்மையில் நிலைத்து நிற்பர்.
சான்றோர் என்றால்  மேன்மக்கள் அல்லது உயர்குடி மக்கள். சான்றோர் - உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள். சான்றோராக இருக்க வேண்டும் என்றால் உயர்வானவற்றைச் சிந்திக்க வேண்டும். எப்போதும் அவர்கள் மனதில் உள்ள எண்ணங்கள் எல்லாம் உயர்வானதாக இருக்கும். நிறைய பேர் நல்லவர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் சிந்தனைகள் உயர்வானதாக இருக்காது. உயர்வானது என்றால் பரிசுத்தமானது. பரிசுத்தமானதை சிந்திப்பவர்கள்தான் சான்றோர்கள்.
ஒரு மனிதனுடைய சிந்தனைகள் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் அவனுடைய வாழ்க்கையும் இருக்கும். சான்றோர்கள் உயர்வானவற்றையே சிந்திக்கின்றனர். அவர்கள் எப்போதும் மேன்மையானவற்றையே யோசிக்கின்றனர். நன்மையான காரியங்களை மட்டுமே அவர்கள் சிந்தனை செய்கிறார்கள். அப்படிச் சிந்திப்பதால் சான்றாண்மையில் நிலைத்து நிற்பார்கள். அதாவது பரிசுத்தத்தில் நிலைத்து நிற்பார்கள்.
பரிசுத்தமில்லாதவர்களின்  சிந்தனைகள் எப்பொழுதும் பாவத்தில் தான் இருக்கிறது. பாவத்தின் காரியம் தான் மனதில் இருக்கும். பாவத்தின் தளபதி சாத்தான். சாத்தானிடமிருந்தே சோதனை வருகிறது. சோதனை வரும் போது, 'இச்சோதனை கடவுளிடமிருந்து  வருகிறது' என்று  சொல்வது தவறு ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை.
நிறைய பேர் சர்வ சாதாரணமாக, ஆண்டவரே என்னை ஏன் இப்படி சோதனை செய்கிறீர் என்று கேட்டு விடுகிறார்கள். ஆண்டவர் யாரையும் சோதிப்பதில்லை ஏனெனில் சோதனை அவரிடம் இருந்து வருவதில்லை.
சோதிப்பது சாத்தானின் வேலை. அவனுக்குத்தான் சோதனைக்காரன் என்று பெயர். பாவம் செய்யக் கடவுள் யாரையும் தூண்டுவதில்லை. அது அவரின் வேலையும் கிடையாது.
கடவுள் யாரையும் அழவைத்து பார்ப்பது கிடையாது. நம்மை கஷ்டப்படுத்தி  ரசிப்பதும் கிடையாது. அந்த வேலை எல்லாம் செய்பவன் சாத்தானே.
ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். ஏன் ஒரு மனிதன் சோதிக்கப்படுகின்றான்? அவனுடைய சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றான். நமது சொந்தத் தீய நாட்டத்தினாலே தான் நாம் சோதிக்கப்படுகிறோம்.
நாம் விழித்திருந்து ஜெபிக்கும் பொழுது சோதனையிலிருந்து வெற்றி பெற முடியும். நாம் விழித்திருந்து ஜெபிக்கும் பொழுது சோதனைக்கு உள்ளாகாமல் இருக்கமுடியும்.
விழித்திருந்து ஜெபிப்பவர்களுக்குச் சோதனை இல்லை. ஜெபிக்காதவர்களுக்குச் சோதனை உண்டு. சாத்தான், மனிதனின் தீய நாட்டத்திற்குத் தீனி போடுகிறவன் போல வந்து சோதிக்கிறான். நமக்கு இருக்கக் கூடிய தீய நாட்டத்தினாலே தான் சோதிக்கிறான். தீய நாட்டத்தை மேற்கொள்ளத்தான், இயேசு விழித்திருந்து ஜெபிக்கச் சொன்னார்.
சான்றாண்மையில் நிலைத்து நிற்க, பரிசுத்தமாக இருக்க, சோதிக்கபடாமலிருக்க, உயர்வானவற்றை சிந்திக்க, மேன்மக்களாக இருக்க செபம் செய்ய வேண்டும்.

No comments: