Thursday, November 23, 2017

தீமையை வெல்லும்போது வெற்றியே...

ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கபடுகின்றனர்.  அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது. தீய நாட்டம் அவர்களைக் முதலில் கவர்கிறது பின் மயக்குகிறது. ஒரு பாவம் மனிதனை முதலில் கவர்கிறது. பின்னர் மயக்குகிறது.
ஒரு மனிதனுடைய மனதை, பாவம் வசியம் செய்து விடுகிறது. பாவம் அதன் கட்டுபாட்டில் அவர்களை கொண்டு வருகிறது. அதனால் தான் டிவி பார்க்க வில்லை என்றால் அவர்களுக்கு தலை சுற்றுகிறது. ஒரு சிலருக்கு டிவி. மற்றவர்களுக்கு இன்னும் வேறு ஏதாவது ஒன்று.
தற்கொலை செய்து கொள்பவர்களுக்குக் கூட, அப்படித்தான் இருக்கும். கஷ்டத்தை எல்லாம் கண் முன் காட்டி இருப்பதை விட, சாவதே மேல் என்று காண்பிக்கும். அது அவர்களைக் கவர்ந்து, மயக்கி தன் வயப்படுத்தி விடும்.
தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் அவர்களை தன் வசப்படுத்தும் போது, அவர்கள் சிந்தனைகளை, கோழி முட்டையை அடைகாப்பது போல் அடைகாக்கிறார்கள். மனதில் தீய நாட்டத்தை அடைகாக்கின்றார்கள். அடைகாத்து பாவத்தைப் பெற்றெடுக்கின்றார்கள். இப்பொழுது தான் செயலில் பாவம் வருகிறது.
கோழி முட்டை அடைகாத்தால், கோழிக்குஞ்சு வரும். பாம்பு முட்டையை அடைகாத்தால் பாம்பு குட்டிதான் வரும். பாவம் செய்யும் மனிதன் சிந்தனையில் தீமையை வைத்தே அடைகாக்கிறான். அது கருவுற்று பாவத்தைப்  பெற்றெடுக்கின்றது. ஒரு அடைகாப்பதில் என்ன முட்டை வைக்கப்படுகின்றதோ அந்த முட்டை தான் பொரிக்கும். ஒரு மனிதனுடைய சிந்தனைகளில், என்ன எண்ணங்கள் இருக்கின்றனவோ, அது தான் அவனுடைய செயல்களில் வரும். எதை சிந்திக்கின்றீர்களோ, அது தான் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும். கருவில் இருப்பது தீமையாக இருந்தால், அது பாவத்தைப் பெற்றெடுக்கும் அது நன்மையாக இருந்தால், நற்செயல்களைப் பெற்றெடுக்கும்.
உயர்வானதைச் சிந்திக்கின்றவர்கள். உயர்வானதை அடைகாக்கின்றவர்கள். அவர்கள் உயர்வானதை பெற்றெடுக்கின்றார்கள். நிறைய பேர் கடவுளுடைய வார்த்தையை அடைகாப்பதற்கு பதிலாக, மனிதனுடைய வார்த்தைகளை அடைகாக்கின்றார்கள். வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது சொல்லி விட்டால், அதை அடைகாக்கிறார்கள். அதை அடைகாத்தால் செயல்களில் தீமை தான் வரும். அதற்குப் பதிலாக நன்மை தரும் எண்ணங்களை அடைகாக்க வேண்டும்.
கடவுளுடைய பிள்ளைகள் என்றால், கடவுளுடைய வார்த்தையை அடைகாக்க வேண்டும். இறை வார்த்தை என்பது ஆவிக்குரிய முட்டை. உலக பிரகாரமாக கோழி எப்படி அடைகாக்கின்றதோ, அதைப் போல் மனிதன் வார்த்தையை அடைகாக்கின்றான். அது நல்ல வார்த்தையாகவும் இருக்காலம். தீமையான வார்த்தையாகவும் இருக்கலாம்.
நிறைய பேர் மனதில், கடவுள் அவருடைய வார்த்தையைப் போடுகிறார். பிசாசு என்ன செய்கிறது? அதுவும் அதன் வார்த்தையைப் போடுகிறது. இரண்டு பேரும் வார்த்தையைப் போடுகிறார்கள். இதில் எந்த வார்த்தையை நாம், உள்ளே வைத்து அடைகாக்கின்றோம்.
எந்த வார்த்தையைத்  தூக்கிப் போடுகின்றோம். அது தான் முக்கியம். நாம் பிசாசு போடும் வார்த்தைகளைத் தூர போட வேண்டும். அப்படித்  தூக்கிப்  போடாமல், அடைகாக்கும் போது தான், ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பாவம் வருகிறது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில், பிசாசின் வார்த்தைகளைச்  சிந்திக்க ஆரம்பித்து விட்டான் என்றால், அவனுடைய செயல்களில் பாவம் வந்து விடும்.
உள்ளம் முழுவதையும் பாவத்திற்கு கொடுத்து விட்டு பாவத்தை எப்படி மேற்கொள்வது என்றால் சாத்தியமே இல்லை. ஒரு மனிதனுடைய யுத்த களம் அவனது மனது தான் ஒருவனுடைய வெற்றியோ, தோல்வியோ எங்கே இருக்கிறது? அது மனதிற்குள் இருக்கிறது. இங்கே தோல்வி அடைந்து விட்டீர்கள் என்றால், வாழ்க்கையிலும் தோல்வி தான். இங்கு ஜெயித்து விட்டால், வாழ்க்கையிலும் வெற்றிதான்.

No comments: