Friday, November 24, 2017

எல்லாரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது...

முன்பொரு காலத்தில் சீனாவில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் தீவிர இசைப்பிரியன்.
அவனுடைய அரசசபையில் எப்போதும் இசைக் கச்சேரிகள் நடந்தவண்ணமாக இருக்கும்.
நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் இசைக்குழுக்கள் வந்து, அரசனுக்கு முன்பாக இசைக்
கச்சேரிகள் நிகழ்த்தி, ஏராளமான பரிசுகள் பெற்றுச் சென்றார்கள். 
அந்நாட்டில் சோம்பேறி ஒருவன் இருந்தான். அவன் நோகாமல் பணம் சம்பாதிக்க நினைத்தான். எனவே அவன் அரசசபையில் இசைக் கச்சேரிகள் நிகழ்த்துகின்ற இசைக்குழு ஒன்றில் புல்லாங்குழல் வாசிப்பவன் போன்று சேர்ந்து, அரசசபையில் புல்லாங்குழல் மீட்டுவது போன்று பாவ்லா காட்டிக்கொண்டு, பணம் சம்பாதித்து வந்தான்.
இசைக் கலைஞர்கள் கூட்டமாக இசைக்கருவிகளை மீட்டியதால், அவன் புல்லாங்குழல் வாசிப்பது போன்று வெறுமென வாயை மட்டும் அசைத்துக் கொண்டு எல்லாரையும் ஏமாற்றிவந்தான்.
அந்த சோம்பேறியின் ஏமாற்று வேலை நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப ஒருநாள் அரசன் சேர்ந்து இசைக்கருவிகளை வாசித்துவந்த  இசைக் கலைஞர்களை தனித்தனியாக வாசிக்கச் சொன்னான்.
இதைக் கேட்ட சோம்பேறிக்கு குலைநடுங்கிப் போனது. ‘புல்லாங்குழல் வாசிக்கத் தெரியாத நாம், தனியாக வாசித்தால் நம்முடைய ஏமாற்று வேலை தெரிந்துவிடுமே’ என்று பயந்து, அவன் தற்கொலை செய்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டான்.
சோம்பேறி உயிருக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டதை அறிந்த அரசன் இறந்த அவனுடைய உடலைக் கழுவில் ஏற்றி கழுகுகளுக்கு இரையாக்கினான்.  
இது உண்மையோ அல்லது கற்பனைக் கதையோ தெரியவில்லை. ஆனால், இது நமக்குச் சொல்லும் உண்மை மிக ஆழமானது. இந்த உலகத்தில் நாம் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம்.
ஆனால், மறுவுலகத்தில் கடவுளை ஏமாற்ற முடியாது, அவர் வழங்கும் தீர்ப்பிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்பதை  இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக் கூறுகின்றது.

No comments: