Tuesday, December 5, 2017

பிறருக்காக செபிப்போம்...

இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம்.
அப்போது ஜெர்மனியில் இருக்கும் ஸ்டட்கார்ட் என்னும் பகுதியிலிருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்த பால்கனியில் இம்கார்ட் வூட் (Irmgard Wood) என்ற பனிரெண்டு வயது சிறுமியும் அவருடைய தாயும் அவருடைய சகோதரியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் வானத்திலிருந்து திடிரென்று ஒரு போர் விமானமானது எரிந்து கீழே விழுந்தது.  இதைப் பார்த்த அம்மூவரும் அந்தப் போர் விமானத்தில் இருந்த விமான ஓட்டிக்கு எந்தவொரு ஆபத்தும் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். அதன் பின்னர் அவர்கள் தங்களுடைய பணிகளைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள்.
இதன்பின்பு இம்கார்ட் வுட்டின் குடும்பம் ஸ்டட்கார்ட்லிருந்து அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா மாகாணத்திற்கு குடிபெயர்ந்து சென்றது. இம்கார்டின் தாய்க்கு கலிபோனியாவில் இருந்த ஒரு மருத்துவனையில் செவிலித் தாய் வேலை கிடைத்தது. அதனால் அங்கு அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒருநாள் இம்கார்ட்டின் தாயானவள் மருத்துவமனையில் நோயாளிகளிடம் பேசிய பேச்சையும், உச்சரிப்பையும் கவனித்த ஒருவர், “உங்களுக்கு சொந்த ஊர் ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட் தானே? “என்று கேட்டார். அதற்கு இம்கார்டின் தாய், “ஆமாம், எப்படிச் சரியாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். “உங்களுடைய உச்சரிப்பே நீங்கள ஸ்டட்கார்ட்டைச் சார்ந்தவர்கள் என்பதை மிகத் தெளிவாக வெளிபடுத்துகின்றது... 
சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்டட்கார்ட் பகுதியில் போர் விமானத்தில் நான் பயணித்தபோது, அது எரிந்து கீழே விழுந்தது. ஆனால், விபத்தில் எனக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை; பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டேன். அப்போது நான் நினைத்துக்கொண்டேன் ஸ்டட்கார்ட்டில் இருக்கும் யாரோ ஒருவரின் ஜெபம்தான் என்னைக் காப்பாற்றியது என்று. இந்த விபத்துக்குப் பிறகு ஸ்டட்கார்ட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தேன். அதனால் அங்கே இருப்பவர்களின் உச்சரிப்பு எனக்குத் தெரியும்” என்றார் அந்த மனிதர்.
“போர்விமானத்திலிருந்து கீழே விழுந்தபோது எந்தவொரு காயமும் இல்லாமல், பத்திரமாகக் காக்கப்பட்டதற்கு ஒருவருடைய ஜெபம்தான் காரணம் என்று சொன்னீர்களே, அந்த ஜெபத்தை எழுப்பியவர்கள் வேறுயாருமல்ல நானும் என்னுடைய பிள்ளைகளும்தான்” என்றார் இம்கார்டின் தாய். இதைக் கேட்ட அந்த மனிதரால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. அவர் இம்கார்டின் தாய்க்கு நிறைய பழங்களும் இனிப்புகளும் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஒருவர் மற்றவருக்காக எழுப்பும் ஜெபம் எத்துனை வல்லமை நிறைந்தது, அது எந்தளவுக்கு கடவுளின் அருளைப் பெற்றுத்தரும் என்கின்ற உண்மையை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. எனவே நாம் பிறருக்காக செபிப்போம். கடவுளின் அருளைப் பெறுவோம்.

No comments: