Thursday, January 4, 2018

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே

முறம், சல்லடை இந்த இரண்டும் ஒரே விஷயத்தைத்தான் செய்கின்றன. ஆனால், அப்படிச் செய்வதில் இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
ஒரு பொருளைச் சல்லடையால் சலித்துப் பாருங்கள்; அதையே முறத்தால் புடைத்துப் பாருங்கள். தேவையானது எதுவோ அது கீழே போய், கசடுகள் அனைத்தும் சல்லடைக்குள் தங்கிவிடும். ஆனால், முறத்தில் ஒரு பொருளைப் போட்டுப் புடைத்தோமானால், தேவையற்ற பொருட்கள் எல்லாம் முறத்தில் இருந்து சட்சட்டென்று வெளியே தெறித்து விழுந்துவிடும். தேவையானவை எதுவோ அது அப்படியே முறத்தில் தங்கிவிடும்.
நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதில் நாம் முறம் போல் இருக்கிறோமா, அல்லது சல்லடையாக இருந்து விட்டுவிடுகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது.
ஒரு செயலைச் செய்து முடிப்பதில் தீவிர முயற்சியும் சரியான திட்டமிடலும், செயல்பாட்டில் நேர்த்தியும் வந்துவிட்டால், நமது காரியம் யாவிலும் துணையிருந்து வெற்றியையே தேடித் தருவான் பகவான். சந்தேகமே இல்லை.
‘செயலைச் செய்தது நான்தானே? அப்படியெனில் பலனை உனக்கு ஏன் தரவேண்டும்’ என்று அர்ஜுனன் கேட்டதற்கு பகவான் சொல்கிறார்… ‘நல்ல பலன் என்றால் எனக்குத் தந்துவிடு என்றா சொல்கிறேன். கெட்டதோ நல்லதோ… பலன் எதுவாக இருந்தாலும், அதை என்னிடம் கொடுத்துவிடு என்கிறேன். இதில் என்ன தவறு அர்ஜுனா?
தவிர, இன்னொரு விஷயம். நீ சரீரன். உன்னால் மட்டுமே விளைந்தது இல்லை இது! ஐந்து பேர் ஒன்றுகூடவேண்டும். அதாவது ஆத்மா, தேகம், பஞ்சபூதங்கள், பரம்பொருள், இந்திரியங்கள் ஆகிய ஐந்தும் இணைந்தால்தான் செயலைத் திட்டமிடவோ, முனைப்புடன் செயல்படவோ முடியும். ஆகவே, செயலைச் செய்வது மட்டுமே உன் வேலை. அதில் எப்போதும் கவனம் செலுத்துவாயாக! பலனைப் பற்றி அலட்டிக் கொள்ளாதே!’ என்கிறார் பரந்தாமன்.
அதாவது, ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பதாகும்.
எனவே, பலனை எதிர்பாராமல் கண்ணும் கருத்துமாக நமது கடமைகளைச் செய்துகொண்டே போவோம். அவற்றுக்கான பலன் நிச்சயம் நம்மை வந்து அடைந்தே தீரும்!

...

No comments: