Friday, July 6, 2018

கள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி?

ஆனந்த விகடன் தலையங்கம்
ஆசிரியர்
வரலாறு காணாத அவமானத்துடன் தமிழகத்திலிருந்து டெல்லி திரும்பியிருக்கிறார் நரேந்திர மோடி. 
ஆயுதக் கண்காட்சியைத் திறந்துவைக்க வந்த மோடிக்கு எதிராகக் கறுப்பு என்ற நிறத்தையே ஆயுதமாக ஏந்தியது தமிழகம். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசின் அலட்சியம், ‘ஸ்கீமா, காவிரி மேலாண்மை வாரியமா?’ என்ற வார்த்தை விளையாட்டு விளையாடிய வஞ்சகம், ஆறுவாரக் கெடு முடிந்தபிறகு உச்சநீதிமன்றத்தை அணுகிய மமதை, கர்நாடகத் தேர்தல் ஆதாயத்துக்காகத் தமிழர்களின் முதுகில் குத்திய துரோகம்... என எல்லாவற்றுக்கும் எதிராக எழுந்த எதிர்ப்புதான் கறுப்பாய் மாறியது.
ஒரு பிரதமர் பயங்கரவாதிகளுக்கு பயந்து பாதுகாப்பை நாடலாம். ஆனால், நரேந்திர மோடியோ சாதாரண மக்களின் உணர்வுகளை, கோபத்தை எதிர்கொள்ள பயந்து, ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் தன்னைத்தானே ஒளித்துக்கொண்டு தமிழகத்துக்கு வருகை தந்தார்.  காவிரி மேலாண்மை வாரியத்துக்காக எதிர்க்கட்சிகள் நடத்திய கடையடைப்பு மாபெரும் வெற்றி பெற்ற செய்தியைத் தமிழக பா.ஜ.க-வினர் சொல்லாமலா இருந்திருப்பார்கள்? ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் கிரிக்கெட் போட்டியே தமிழகத்தை விட்டு இடம்பெயர்ந்த செய்தி அவருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? அவ்வளவு ஏன், ‘நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எதிராக’ உண்ணாவிரதம் இருந்தாரே, அந்த நாடாளுமன்ற முடக்கத்துக்கான காரணங்களில் ஒன்றாக, காவிரிப்பிரச்னையை முன்வைத்து அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய முழக்கங்கள் அவர் செவிகளில் விழவே இல்லையா என்ன?
எதுவுமே நடக்காததைப்போல தமிழகத்துக்கு வந்து இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மோடி, காவிரிப் பிரச்னை குறித்து வழக்கம்போல் கள்ள மௌனம் சாதித்தது அநீதியின் உச்சம். இதற்கு முன்பு, ‘மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழா’வுக்கு வந்தபோதுகூட மேடையில் காவிரிப் பிரச்னை குறித்து வேண்டுகோள் வைத்த எடப்பாடி, இந்த இரண்டு விழாக்களின் மேடைகளிலும் அதுகுறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. அவமானத்தின் கறை மோடியின் முகத்தில் படிந்தபிறகு, சம்பிரதாயத்துக்கு ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத்திருக்கிறார்கள்.
மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களே! தமிழகமே கறுப்பாய் மாறியதைக் கண்டும்காணாமல் நீங்கள் கடந்துபோனாலும், உலகமே அந்த எதிர்ப்பை உற்றுநோக்கியது. #GoBackModi ( மோடியே திரும்பிப்போ) என்ற ட்விட்டர் ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டிங் ஆனது, உங்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்தின் உச்சம்; உங்கள் அவமானத்தின் உச்சமும்கூட.
இத்தனை அவமானங்களுக்குப் பிறகாவது கள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி? மே 3ஆம் தேதி, உங்கள் அரசு உச்சநீதிமன்றத்தில் என்ன மனு தாக்கல் செய்யப்போகிறது, எங்களுக்கான நீதி உறுதி செய்யப்படுமா என்று காத்திருக்கிறோம். மீண்டும் ஒருமுறை அவமானத்துக்குத் தயாராக மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

No comments: