Sunday, July 8, 2018

கலப்பு திருமணம் பற்றிய சில சட்டங்கள்

*சட்டம் என்ன சொல்கிறது*
நண்பர்களே தயவுசெய்து இந்த செய்தியை முழுவதுமாக படிங்கள் மற்றும் கண்டிப்பாக பகிருங்கள். கலப்பு திருமணம் அல்லது காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு 2.5 லட்ச ரூபாய் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை 2013 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் பெயர் ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்” என்பதாகும்.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 500 தம்பதியினருக்குஇந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.ஆனால் இதுவரை இந்த நிதி உதவியை பயன்படுத்திக் கொண்டவர்கள் வெறும் 19 பேர் மட்டும்தான். தமிழகத்தின் ஒருவர் கூட இல்லை.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டியவர்கள் :
ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கக்கூடாது. திருமணம் செய்து கொண்ட ஓராண்டிற்குள் இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும் என்று நிபந்தனைகள் இருக்கின்றன.
மேலும் சில விவரங்கள்:
கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன?
கலப்புத் திருணம் செய்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை உண்டு. இதற்கு தம்பதியரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருவருடைய குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், திருமண பதிவுச் சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் இரு நகல்கள் தேவை. வட்டாட்சியர் அளவில் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலை இணைத்து மனு எழுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் நீங்கலாக, அனைத்து சான்று நகல்களிலும் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். 
கலப்பு திருமணம் செய்வோர் அரசின் நிதியுதவி பெறுவது எப்படி?
கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது. திட்டம்-1, திட்டம்-2 என இரு வகைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
திட்டம் 1-ல் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.15 ஆயிரம் காசோலையாகவும், மீதமுள்ள ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. மேலும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ல் ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதில் ரூ.30 ஆயிரம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். திட்டம் 2-ல் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். வருமான, வயது உச்சவரம்பு எதுவும் இல்லை.
திருமணத்தின்போது 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். திருமணப் பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று, மணமகள் மற்றும் மணமகன் ஜாதிச் சான்று, வயதுச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். 
இந்நிதியுதவி மணமகள், மணமகனிடம் நேரடியாக வழங்கப்படும். அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும், ரூ.5 ஆயிரம் காசோலையாகவும் வழங்கப்படும். வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. 
திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமணத்தின்போது குறைந்தபட்ச வயது 20 ஆகவும், மணமகனின் வயது 40-க்குள்ளும் இருக்க வேண்டும். விதவைச் சான்று, மறுமண பத்திரிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுகலாம்.
சமூக நலத்துறையின் மூலம் ஐந்து வகை திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2014-15ல் 8747 பேருக்கு ரூ.33.48 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது.
1) மூவலுார் ராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவி
2) ஈ.வெ.ரா., மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி
3) அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி
4) கலப்பு திருமண நிதியுதவி
5) விதவை மறுமண நிதியுதவி
குறிப்பு:
முற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துக் கொண்டால் மட்டுமே கலப்பு மணமாக கருத முடியும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவருக்குள் நடைபெறும் திருமணம், கலப்புத் திருமணமாக கருத முடியாது. தமிழக அரசின் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் நலத்துறையின் கடிதத்தை (கடித எண்.1418/பிநசிபி/2001-1) படியுங்கள். அந்த கடிதத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினர் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம் கலப்புத்திருமணமாக அங்கீகரிக்கப்படவில்லை.

கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும்           குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் 
ஜாதி  அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். 
(அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)                                      
*பகிர்வு* ஆதிபோஸ்

No comments: