Monday, July 9, 2018

தாய்லாந்தின் THAM LUANG குகை

அட்வென்சர் ஆர்வலர்களின் பிரதான தேர்வான தாய்லாந்தின் THAM LUANG குகை, இப்போது உலகின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. BBC முதல் பிரதான செய்தி சேனல்கள் அனைத்தும் குகையின் வாசலில் குடிகொண்டு விட்டன. குகை பற்றி வெளியாகும் தகவல்கள் ஒவ்வொரு நொடியும் பதைபதைப்பை கிளப்புகிறது. காரணம், குகையினுள் வெள்ளத்தில் சிக்கி கொண்ட பள்ளி மாணவர்கள் 12 பேர்.
ஜூன் 22ம் தேதி, கால்பந்தாட்டம் முடிந்தவுடன் பள்ளி மாணவர்கள்  தங்கள் பயிற்சியாளருடன் குகைக்கு ஒரு விசிட் போக, அந்த நேரம் பார்த்து பெருமழை பொழிய, குகைக்குள் இருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள் மாணவர்கள். நாட்கணக்கில்  விடாது பெய்த மழையினால் குகைக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட, நீரில் மூழ்கும் குகைக்குள் அனைவரும் சிக்கி கொள்கிறார்கள்.
THAM LUANG குகை மலைகளின் ஊடே மறைந்துள்ள ஒரு இயற்கை அதிசயம், பத்து கிலோமீட்டர் தொலைவும் 200 அடி  உயரங்களில் நீர்வீழ்ச்சிகள், சிறு மலை போன்ற குன்றுகள், கடற்கரை போன்ற மணற்பரப்புகள் அனைத்தும் குகைக்குள் அமையப் பெற்றிருக்கும். இதற்குள், வெள்ள பெருக்கு என்றால் பயங்கரத்தை சற்று நினைத்து பாருங்கள். பள்ளி மாணவர்கள் குகைக்குள் சிக்கி கொண்ட தகவல் தெரிந்த முதல் நாளே தேடுதல் வேட்டை துவங்குகிறது. மழை தொடர்ந்து பொழிகிறது. குகைக்குள் நீரின் வரத்து நின்ற பாடில்லை. தாய்லாந்து ராணுவம் களமிறங்குகிறது. கடற்படை SEAL வீரர்கள் குகைக்குள் நீந்தி தேடுகிறார்கள். பெற்றோர்கள், கிராம மக்கள், புத்த மத துறவிகள் என அனைவரும் குகை முன் குவிகின்றனர். பிரார்த்தனைகள் வழிபாடுகள் அரங்கேறுகின்றன. எந்த மதம் எந்த இனம் என்றெல்லாம் இல்லை, பசங்க உயிருக்கு எதுவும் ஆக கூடாது  என இறைவனை வேண்டுகிறார்கள்.
நாட்கள் நகர்கிறது. கடற்படை இணைகிறது. நீருக்குள் மூழ்கி இரவு பகலாக தேடுகிறார்கள். பத்து நாட்கள் ஆகியும் மாணவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. ஒரு 200 அடி உயரமுள்ள குகைக்குள் கடல் போல நிரம்பியுள்ள நீரில் மூழ்கி தேடுவது என்பது நினைத்து பார்க்க முடியாத காரியம். சேறு , குறுகலான வழிகள், கூரிய பாறைகள் என அனைத்து இடர்பாடுகளையும் கடந்து இடைவிடாமல் தேடுதல் பணி தொடர்கிறது. இதற்குள் இச்சம்பம் குறித்து உலகிற்கு தெரிய வருகிறது. பல நாடுகள் உதவிக்கு முன்வருகின்றன. லண்டன், சீனா, மியான்மர், அமெரிக்காவில் இருந்து உபகரணங்கள் மற்றும் நிபுணர்கள் குழுவாக களமிறங்குகிறார்கள், தேடித் தேடி இயந்திரங்களே சலித்து விட்ட வேளையில் இந்த இதயங்கள் ஒற்றுமையாக கைகோர்க்கிறது. ஒரு குழு மேலிருந்து குகையை குடைய ஆரம்பிக்கிறது. CAVE EXPERTS குழு மாணவர்கள் எங்கிருக்கலாம் என கணிக்கிறது. அமெரிக்க மாற்றும் தாய்லாந்து சீல் படைகள் மீண்டும் நீருக்குள் தேடுதல் வேட்டையை துவங்குகிறார்கள்.
மக்களின் கண்ணீருக்கு மனமிரங்குகிறது இயற்கை. 11 வது நாள், குகையின் ஒரு கடைக்கோடியில் தேடிக் கொண்டிருக்கும் ஒரு பிரிட்டிஷ் சீல் படை வீரரின், தெர்மோ ஹீட் சிக்னல் இயந்திரம் தொடர்ந்து ஒலி எழுப்புகிறது. உண்மையில் அது இயந்திரத்தின் ஒலி மட்டும் அல்ல !! இறைவனின் ஆனந்த சிரிப்பும் கூட ! ஆம், குகையின் நான்காவது கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு குன்றில் மாணவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.
மகிழ்ச்சியில், பிரிட்டிஷ்  கடற்படை வீரர் டார்ச் லைட் ஒளியை பாய்ச்சியபடி கேட்கிறார்.
HOW MANY OF YOU  ?
பத்துநாட்கள் உணவின்றி இருளில் தவித்து, உயிரை காக்க போராடி கொண்டிருக்கும் வேளையிலும் மாணவர்களிடமிருந்து ஒரு அட்டகாசமான பதில் வருகிறது.
We are thirteen,…. Brilliant !!!,
இந்த உயிர்ப்பான காட்சி வெளியே ஒளிபரப்பாகிறது. கூடியிருக்கும் மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், அனந்த கண்ணீர் வழிய ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொள்கிறார்கள். கவலையில் உணவு உறக்கமின்றி இடிந்து போயிருந்த பெற்றோர்கள், எல்லா மொழிகளிலும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள், எத்தனையோ அழைப்புகளை ஏற்று ‘பசங்க சேப், Yes they are really brilliant’ என மகிழ்ச்சியை பகிர்கிறார்கள். ஆனால் இங்கு இயற்கை இன்னொரு ட்விஸ்டை வைக்கிறது. சிறுவர்களை கண்டுபிடித்து விட்டாலும், அவர்களை வெளிக்கொணர குறைந்தது இரு மாதங்களாவது ஆகும் என்கிறார்கள்.
காரணம் ! நாலு கிலோ மீட்டர் உள்நீச்சல் நீந்தி வர மாணவர்களுக்கு பயிற்சி இல்லை, அந்த நிலையில் அவர்கள் உடல்நிலையும் இப்போது இல்லை. மேலும் குகையின் மிக குறுகலான வழிகளில் இவ்வளவு பேரும் நீந்தி வருவதில் ஆபத்துகள் அதிகம் என்கிறது சீல் படை. குகையை குடையும் முயற்சியும் தோல்வி பெற்றுவிட்டது. ஒன்று தண்ணீர் வடிய வேண்டும். இல்லை மாணவர்கள் உடல்நலத்தை கொஞ்சம் தேற்றி ‘ஸ்கூபா டைவிங்’ பயிற்சி அளித்து வெளியே அழைத்து வர வேண்டும். இதற்கு இன்னும் கொஞ்சம் நாட்களாகும் என கணித்துள்ளனர். எது எப்படியோ ! வெள்ள பெருக்கில் தப்பித்து, ஒரு சிறு குன்றின் மீது ஏறி , உணவு, இருள், சுற்றிலும் நீர், ஈரம் என அத்தனை இடர்களை சமாளித்து தாங்கள் வெளியேற போகும் கணத்திற்காக காத்திருக்கும் இந்த மாணவர்களின் உறுதியும் ஒற்றுமையும் துணிச்சலும் இருக்கிறதே. அதன் சக்தி நிச்சயம் அவர்களை காக்கும் !!
இந்த உறுதி இருக்கும் வரை, எத்தனை நாட்களானால் என்ன ? இவர்கள் மீண்டு வந்து, காத்திருக்கும் பெற்றோர்களை கட்டித் தழுவி, கண்ணீர் வழிய தங்கள் உயிர் போராட்ட கதைகளை  சொல்லும் காலம் தொலைவில் இல்ல. இந்த மாணவர்கள் விரைவில் மீட்கப்பட்டு, நலமுடன் வீடு திரும்ப நம் பிரார்த்தனைகளையும் இறைவனிடம் வைப்போம். நன்றி.

No comments: