Wednesday, September 19, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 20

தமிழ்நாட்டில் இருக்கிற மூப்பனார், செட்டியார் ஆந்திராவில் இல்லை, ஆந்திராவில் உள்ள ரெட்டி, நாயுடு கர்நாடகாவில் இல்லை, கர்நாடகாவிலுள்ள கவுடா தமிழ்நாட்டில் இல்லை. கேரளாவிலுள்ள நாயர், குஜராத்தில் இல்லை, குஜராத்தில் உள்ள படேல் ஒரிஸாவிலில்லை, ஒரிஸாவிலுள்ள பட்நாயக் உத்தர பிரதேசத்தில் இல்லை, உத்தரப்பிரதேசத்திலுள்ள யாதவா காஷ்மீரில் இல்லை, காஷ்மீரிலுள்ள ஜாதவா பீகாரில் இல்லை, பீகாரில் உள்ள யாதவ் பஞசாபில் இல்லை, பஞ்சாபிலுள்ள ஜாட் இமாச்சல், அஸ்ஸாம், மணிப்பூரில் கிடையாது. ஆனால் பட்டியலினத்தவர் இல்லாத இடமே இந்தியாவில் கிடையாது. ஏன்னா நாம் தேசிய இனம். இந்த தேசம் அழியாம இருக்கிறதும் நம்ம இனத்தால் மட்டுமே. ஆக இந்த தேசத்தைக் கட்டி காக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது. இப்படியான தேசிய இனத்திற்கு ஒரு தேசிய கட்சி இருக்கணும், ஒரு தேசிய தலைமை இருக்கணும், அந்த தலைமைக்கும், நமக்கும் ஒரே கொள்கைதான் இருக்கணும். அதாவது, ''ஒரு தேசிய கட்சி, ஒரு தேசிய கொள்கை, ஒரே தலைமை'' என ஒருங்கிணைப்பா இருக்கணும். எப்படி? அம்பேத்கரியர்களாக. இந்த அமைப்பிற்குதான் ''பீம மார்க்கம்'' என்று பெயர். அதனால்தான் நாம் சொல்கிறோம் ''ஜெய் பீம்'' என்று. இதைப்போல நம் மக்களை ஒருங்கிணைத்து, ஒரே மாதிரியாக சிந்திக்க தூண்டுவது நம் கைகளில்தான் உள்ளது.  பாபாசாகேப் பார்வையில் ''ஜெய் பீம்'' அர்த்தம் என்பது இதுதான். இந்த மாதிரி நாம் எல்லோரும்  சிந்தித்தா, குறைந்தது 5 வருடம், அதிகபட்சம் 10 வருடங்களில் இந்த தேசமே நம் கைகளில்தான் இருக்கும். நம் கைக்கு வந்ததும் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக அமல் படுத்தினால் இந்த நாட்டில் சாதி ஒழியும், வறுமை ஒழியும், இந்தியா வல்லரசாகும். சரி செய்ய வேண்டியது யார்?

இதை நடைமுறைப்படுத்த வேண்டியது நிச்சயமாக படித்த அரசு ஊழியர்களையே சாரும். இங்கே யாராவது அரசு ஊழியர்கள் இருக்கிறீர்களா? எல்லோருக்கும் தெரிந்த கதை ஒன்று.
ஒரு நாட்டின் அரசன் புதிதாய் ஒரு அரண்மனை பளிங்கு மாதிரி கட்டி அத்துடன் ஒரு குளம் அமைத்தான். அரண்மனை போல் குளத்தின் தண்ணீரும் வெள்ளை நிறத்தில் இருக்க விரும்பினான். அதற்காய் நாட்டு மக்கள் அனைவரும் பாலை கொட்டி குளத்தை வெள்ளையாக மாற்ற நினைத்து மக்களிடம் அறிவித்தான். மக்களும் அவ்வாறே செய்த மறுநாள் குளத்தை பார்வையிட்ட அரசன் அதிர்ச்சியானான். ஏன்னா பாலுக்கு பதிலாய் அனைவருமே தண்ணீரையே ஊற்றி நிரப்பியிருந்தார்கள். அதாவது ''நாம் மட்டும்தானே தண்ணீர் ஊற்றுகிறோம்'' என எல்லோருமே நினைத்து தண்ணீரை ஊற்றியிருந்தனர்.
இந்த கதையை போல் 'நான் மட்டும்தானே செய்யாமல் இருக்கிறேன். மற்றவர்கள் செய்வார்கள்'' என்று ஒவ்வொருமே நினைத்து எல்லாருமே செய்யாமல் இருப்பதுதான் நமது இந்த இழிநிலைக்கு காரணம். அதாவது ''எல்லாரும் சேர்ந்தா நானும் செய்ய தயார்'' என நினைப்பதும், ''நான் ஒருத்தன் என்ன செய்வது?, ''எல்லாரும் சேர்ந்தா பார்ப்போம்'', ''எனது அரசு வேலைக்கு இதனால் ஏதேனும் பங்கம் வந்திடுமோ?'' என்கிற மாதிரியான சிந்தனை நமக்கு இருக்கக் கூடாது. இதுதான் சேரி புத்தி, தலித் புத்தி. அப்ப சிந்தனை எப்படி இருக்கணும்? ''எவன் இதை பண்ணுகிறானோ, இல்லையோ, எனக்கு பாபாசாகேப்பினால்தான் கல்வியிலும், வேலையிலும் ரிசர்வேசன் கிடைச்சது. அதனால நான் அந்த நன்றியுணர்வோடு இந்த சமூகப்பணி பண்ணுவேன்'' என்ற சிந்தனைதான் இருக்கணும். அப்படி முடிவெடுக்கலைன்னா, ''யாருமே வாங்காத ரிசர்வேசனை நான் ஏன் வாங்க வேண்டும்? என்றாவது சிந்திக்க வேண்டும்.

ரிசர்வேசனை மட்டும் தனியா வாங்குகிற நாம், சமூகப்பணி என்றால் மட்டும் ''எல்லாரும் சேர்ந்தா, நானும் பண்ணுவேன்'' என்பதில் என்ன லாஜிக் இருக்கு? வேலைக்கு முயற்சிக்கையில், எவன் வந்தாலும், வரலைனாலும் நான் எப்படியாவது முதலில் வந்து, எனது வேலையை உறுதி செய்வேன் என்று முயற்சி செய்கிறோமோ, அதைப்போல்தான் இதிலும் செயல்பட வேண்டும். என்றைக்குமே லீடர் என்பவன் தனிதான். ''யார் யார் வருகிறார்களோ எப்படியோ, எனக்கு இது சரின்னு படுது, அதனால் நான் முடிவு பண்ணிட்டேன். இனி என் தலைமையில்தான் ஒருங்கிணைப்பு நடைபெறும்'' என்பதாக ஒரு லீடர் உருவாக வேண்டும். லீடர் என்பவன் ஆட்கள் நிறைய இருந்து, அதிலிருந்து உருவாவதில்லை. தனியாய் நின்று நிறைய ஆட்களை உருவாக்கி காட்டுறவனே உண்மையான லீடர். பாபாசாகேப் அப்படித்தான் நடத்திக் காட்டினார். ஆனால் அவர் யாரை அதிகம் நம்பினாரோ, அவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்கு பாபாசாகேப்பின் ரிசர்வேசனை எடுத்துக் கொண்டார்களே ஒழிய, போராட்டத்தில் அவருடன் இல்லை. இந்த சமூகத்தில் படித்தவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அதாவது இந்த திரளான சமூகத்தில் 5% பேர்தான் படித்த அரசு ஊழியர்கள் உள்ளனர். படித்து சரியான வேலையில்லாதோர் 15% பேர் இருக்காங்க. ஆனால் மிச்சமிருக்கிற 80% திரளான ஜனம் படிப்பும், வேலையும் இல்லாமல் வெறுமனே கூலி வேலைதான் செய்துக் கொண்டே, நொந்து, வறுமையோடே காலத்தை கடத்திட்டிருக்காங்க. ஆனால் இந்த மக்களுக்கு பாபாசாகேப் மேலே பக்தி இருக்கு. ஆனா அவரோட பாதை என்னன்னு தெரியாது. ஆனால் இந்த 15% படித்தவர்களுக்கு பாபாசாகேப் மேலே பக்தியும், நேரமும் இருக்கு. பாதையும் தெரியும். ஆனால் தெம்புதான் இல்லை. தெம்புன்னா என்ன? பணபலம். அதுதான் இல்லை.

5% சதவீத படித்த அரசு ஊழியர்களுக்கு பாபாசாகேப் பாதையும் தெரியும், நேரம், பணபலமும் இருக்கு. ஆனால் இவர்கள்தான் தங்கள் சமூகத்தை முற்றாகத் துறந்து, தங்கள் அடையாளத்தை மறைத்து, நம் சமூகத்திற்கு வழிகாட்டாமல், தங்கள் பணிகளில் உயர, உயர போவார்கள். முக்கிய கட்டத்தில் பெருத்த அடி விழும்போது தன்னை காப்பாற்றத்தான் இந்த சமூகத்தை நோக்கி ஓடி வருவார்கள். நான் அனைத்து துறை அரசு ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பதால் நிறைய உதாரணங்களை குறிப்பிட முடியும். உ.ம் 1. ஒருவர் தன் வாழ்நாள் உழைப்பை முதலீடு செய்து ஷாப்பிங் காம்ளக்ஸ் கட்ட முக்கியமான இடத்தில் வாங்கியிருந்த இடத்தை ஒரு முன்னாள் அமைச்சர் அபகரித்துக் கொண்டதால் எங்களிடம் கண்ணீர் விட்டு உதவுமாறு வேண்டினார். உ.ம் 2 ஒரு இன்சினியர் வேலையில் உச்சநிலையில் இருக்கும்போது சமூகத்தொடர்பு எதுவும் இல்லாமல் பார்த்துக்கொண்டதால் அவர் கொலை செய்யப்பட்ட போது நீதி விசாரணைக்கு கூட எந்த அசோசியேசனும், அமைப்பும் கோரவில்லை, இன்னைக்கும் கொலையாளியை பிடிக்கவில்லை. இப்படி இந்த சமூகத்தை விட்டுவிலகி வேலைகளில் உயர்நிலையை அடைந்தாலும் விழும் அடிகளால் தாங்கள் சம்பாதித்த பணம், உயிர் இழந்து, மானத்திற்கு அஞ்சி, எஞ்சிய காலங்களை வருத்தத்தோடே கழிக்கிறார்கள். இவர்கள்தான் சமூக ஒருங்கணைப்பு பணிகளை செய்யாமல் கலாம், பாரதி, காந்தி, வைரமுத்து,  கீதை, பைபிள், தமிழ்தேசியம், உலக நீதி, etc...  என எதையெதையோ பகிர்ந்து, தான் மட்டுமல்லாமல் இந்த சமூகத்தையும் corruption ஆக்கிக்கொண்டிருப்பவர்கள். ஆனால் பாபாசாகேப் இவர்களை கூப்பிட்டுதான் சொன்னார் ''இதுதான் பாதை'' என்று. அன்று போனவர்கள்தான் இதுவரை அவரை திரும்பி பார்க்கவேயில்லை. மராட்டியத்தில் 1955ல் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது.

தொடரும்

No comments: