Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 21

மராட்டியத்தில் 1955ல் ஒரு கூட்டத்தை கூட்டுகிறார் பாபாசாகேப். அந்த கூட்டத்தில் 5 லட்சம் பேர் பாமர மக்கள் கலந்து கொண்டார்கள். படித்த அரசு ஊழியர்களோ அதில் சொற்பமான பேரே கலந்து கொண்டனர். அப்பொழுது அங்கு வந்திருந்த மக்களிடம் நிருபர்கள் கேட்டார்கள் ''எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?'' என்று. அதற்கு அவர்கள், ''எங்கள் கடவுளை பார்க்க வந்திருக்கிறோம்'' என்றார்கள். ''அம்பேத்கர் கடவுளுன்னா, அவரிடம் என்ன கேட்க வந்திருக்கிறீர்கள்?'' என்றதும், ''நாங்க கடவுளிடம் என்ன கேட்பது? எங்க கடவுளுக்கு தெரியும், எங்களுக்கு என்ன தேவையென்று, அவர் எங்களுக்கு கொடுப்பார்''. சிலரோ, ''எங்கள் கடவுள் இனிமேல் எங்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. எங்களுக்கு தன்மானத்தையும், மரியாதையையும் ஏற்படுத்தி தந்தார். அதுவே போதும்'' என்றார்கள். அதைப்போல் அங்கு வந்திருந்த அரசு ஊழியர்களிடம், ''நீங்கள் என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள்?'' என்பதாக கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''10 வருஷமா கிளர்க்காகவே இருக்கேன். புரமோசனே வரலை'',

''ஒரு சின்ன தப்பால சஸ்பெண்ட் ஆயிட்டேன். அதான் அய்யாவை பார்க்க.....''

''அய்யாவின் புண்ணியத்தில் நான் வங்கி மேலாளர். இப்ப என் மகனும் படிச்சிட்டான். அவனுக்கும் வேலை ஏற்பாடு செய்யலாம்னு......''
இப்படியாக தங்கள் சுயநல அஜெண்டாவுடன் வந்திருந்தார்கள். இதையெல்லாம் கவனித்த பாபாசாகேப், ''நான் இந்த பாமர மக்களுக்காக எதுவும் செய்யலை. இன்னிக்கும் அடுத்தவர் நிலங்களில் கூலி வேலைதான் செய்திட்டிருக்காங்க. அவர்கள் 5 லட்சம் பேர் என்னை பார்க்க வந்திருக்காங்க. ஆனால் என் 40 வருட போராட்டத்தில், மொத்த லாபமெல்லாம் கிடைச்ச இந்த அரசு ஊழியர்கள் வெறும் 250 பேர்தான், அதுவும் சொந்தநலனுக்காக வந்திருக்காங்க''.

ஆனால் நான் எதிர்பார்த்தது, படித்த அரசு ஊழியர்கள் என்னை மாதிரி சிந்திச்சி, இந்த பாமர மக்களுக்கு ஏதாவது செய்வாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனால் இந்த அரசு ஊழியர்கள் என் முதுகில் குத்திட்டாங்க. இவர்களுக்கு ஒரு காலத்தில் குடிக்க தண்ணீர் கூட கிடையாது. இன்றைக்கு குடிக்க தண்ணீரோடு பாலும் கிடைச்சிருக்கு. ஆனா 'இந்த பாலை குடிச்சி, குடிச்சி வெறுத்திட்டோம். அதனால கொஞ்சம் நெய், வெண்ணெய் கிடைச்சா நல்லாயிருக்கும்' என்றுதான் யோசிக்கிறாங்க. 80% என் மக்கள் இன்னும் தண்ணீர் குடிக்கலையே என்பதை ஒருத்தனும் கூட சிந்திக்காம போயிட்டாங்களே'' என வருத்தப்பட்டார்.

மேலும், ''என் உழைப்பின் பயனை பெற்ற இந்த அரசு ஊழியர்கள் மேலே வந்தால், என் பாமர மக்களையும் உயர்த்த உழைப்பார்கள் என்று நினைத்து, இனி ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கலை. இனி என் இறுதி மூச்சிருக்கும் வரை இந்த பாமர மக்களுக்காக உழைப்பேன், போராடுவேன்'' என முடிவெடுத்தார். ஆனால் அதற்கு முன்பே அவர் கைகளில் தடி வந்திடிச்சி.

''நான் தடியை பிடித்து முன்னேறி சென்று கொண்டேயிருப்பேன். நீங்கள் என்னை பின்தொடர்ந்து வாருங்கள். இந்தியாவில் எத்தனை அரசு நிலமிருக்கோ அது நமது பூர்விக நிலம்தான். அதை கைப்பற்ற நான் 2 வருடம் உயிரோட இருந்தால் போதும். உங்கள் கஷ்டமெல்லாம் போயிடும். என் பின்னே நீங்கள் வந்தால் திறக்காத கதவையெல்லாம் திறக்க வைப்பேன். நீங்கள் என்னை நம்பித்தான் ஆகணும். ஒரு மிஷனரியாக என் பின்னே வாருங்கள். நம் பாதை வெற்றியடையப்போகிறது'' என்றார் பாபாசாகேப்.

ஆனால் அதை நடப்பிப்பதற்கு முன்பே அவர் தன் இன்னுயிரை இழந்தார்.

தொடரும்

No comments: