Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 22

பாபாசாகேப்பின் இறப்பிற்கு பின்னர் அவரது உதவியாளர் நானக்சந்த் ரட்டு சொன்னது என்னன்னா, இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாபாசாகேப்போட உடல்நிலை பேசக்கூட முடியாத அளவிற்கு மோசமாயிடிச்சி. பாபாசாகேப் எதையோ யோசிப்பதும், கண்ணீர் விடுவதுமாக இருப்பதை பார்த்த நானக்சந்த், ''ஐயா, ஏனய்யா எதையோ பறிகொடுத்தாற் போல் உள்ளீர்கள்?'' என்றபோது கோபப்பட்டார். இரண்டு, மூன்று நாட்களாகியும் அவர் அதே நிலையில் இருப்பதை பார்த்த நானக்சந்த் மெதுவாக அவரது கால்களை பிடித்து அமுக்கியபடி திரும்பவும், ''ஐயா, நீங்கள் என்னை திட்டினாலும், அடித்தாலும் பரவாயில்லை. ஏனய்யா அழுகிறீர்? தயவுசெய்து சொல்லுங்க'' என்று கேட்டதும், பாபாசாகேப் என்ன சொல்றாருன்னா, ''என் உள்ளம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. என் வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருந்தது. அது, என் மக்கள் சமத்துவத்துடன் அரசியலில் பங்கு பெற்று ஆட்சியாளர்கள் ஆவார்கள் என்பதை பார்க்கலாம் என்று இருந்தேன். இந்த லட்சியம் நிறைவேற வேண்டும் என்பதே என் சிந்தனையிலிருந்தது. அதற்காகவே நான் போராடினேன். ஆனால் எனது ஒட்டுமொத்த போராட்டத்தின் பலனை கிடைக்கப் பெற்றவர்களோ, படித்த அரசு ஊழியர்கள்தான். எந்த சமூகத்திலிருந்து வந்தார்களோ, அந்த சமூகத்தின் அவல நிலை கண்டும், ஈவு இரக்கமற்று இருக்கிறார்கள். என் லட்சியத்தையே உடைத்து விட்டார்கள். சமூகத்தை ஒருங்கிணைக்க ஒருத்தருமே தயாராயில்லை. பணத்திற்காகவும், தனது சொந்த லாபத்திற்காகவுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதோ, என் கோடானுகோடி பாமர மக்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால் என் உடல்நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. என் இறுதிகாலத்தை நெருங்கி விட்டேன் என்றே தோணுகிறது'' என உடைந்த நிலையில் சொன்னார்.

அதற்கு நானக்சந்த், ''உங்க வாழ்நாள் முழுவதையுமே இந்த மக்களுக்காக கொடுத்து விட்டீர்கள். நீங்கள் உங்களுக்காக எங்கே வாழ்ந்தீர்கள்? இனிமேலும் அவர்களுக்காக உழைக்கணுமா?'' என்றார்.

அதற்கு பாபாசாகேப், ''நான் சாவை கண்டு அஞ்சவில்லை. என்றைக்கானாலும் சாவு நிச்சயம். அதுவல்ல பிரச்சனை. நான் ரொம்பவே கஷ்டப்பட்டு, பெரிய பெரிய ஜாம்பவான்களையே எதிர்த்து, என் மக்களின் விடுதலைப்பயணம் என்ற தேரை இந்த அளவு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். இந்த தேரை, எனக்கு அப்புறமாக வரும் என் தளபதிகள் தொடர்ந்து இழுத்தால் இது கரைபோய் சேரும். முடியவில்லை என்றாலும் அந்த இடத்திலேயே விட்டுவிட வேண்டும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இதை பின்னோக்கி தள்ளும் வேலையை செய்யக்கூடாது. இதை நீ போய் என் மக்களிடம் சொல். அவர்கள் இதை கண்டிப்பாக சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள்''

என்று  ''தன் சமூக  விடுதலைப்பயணம்'' என்னும் தேர் கரையேறுவதை காண முடியாத ஏக்கத்துடன் கதறினார்.

தொடரும்

No comments: