Tuesday, December 25, 2018

மரி என்கிற ஆட்டுக்குட்டியும் பிரபஞ்சனின் கல்விச் சிந்தனைகளும்…

அற்புத மரி அப்படின்னு ஒரு பொன்னு… வயசு பதினெட்டு…  ஆனால் அப்பப்போ பெயிலாகி இப்போது பத்தாவது படிக்கிறாள். இப்பவும் அவள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை. எப்போதாவது வரும்போதும் சிக்குன்னு அப்படியே பிடிச்சமாதிரி பேன்ட் சட்டையோடு பள்ளிக்கு வருவாள். அப்படி பலநாட்களுக்குப் பிறகு பேண்ட் போட்டுக்கொண்டு சட்டையின் மேலிரண்டு பட்டன்களை திறந்துவிட்டுக்கொண்டு  ஒருநாள் பள்ளிக்கூடம் வந்தவள் மதிய இடைவேளையில் பள்ளிக்கு வெளியே தனது நான்கைந்து ஆண் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.
அப்போது அங்கு வரும் அவள் பள்ளி ஆசிரியர் ஒருவர் “இப்படியெல்லாம் பண்ணப்படாது அற்புத மரி உள்ளே வா” எனக் கூப்பிட,

“உங்களுக்கு என்ன பொறாமையா இருக்கா சார்” எனக் கேட்டுவிடுகிறாள்.

அதுபற்றி கேட்ட ஹெச்.எம்கிட்டயும்,

“இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்குறதுக்குத்தான் நீங்க பொறுப்பு, வெளியில நடக்குற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னை கட்டுப்படுத்த முடியாது சார்”

என முகத்தில் அடித்தது போல பதிலுரைக்கிறாள்.
அன்று சாயங்காலம் பி.டி மாஸ்டர் மரியிடம், “இப்படிப் பண்ணப்படாது, இப்படி வளையனும், இந்த மாதிரி கைய வச்சுக்கனும்” என தொட்டுச் சொல்லிக்கொடுத்தவர் எசகு பிசகா எங்கோ தொட்டுவிட, மரி

“சார்…. உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையா?"

எனக்கேட்டுவிடுகிறாள்.

இதையும் கேள்விப்படும் ஹெச்.எம் மரி வகுப்பாசிரியரிடம் மரிக்கு டி.ஸிகொடுத்துவிடலாம் எனத் தெரிவிக்கிறார். மனம் கேட்காமல் ஒருநாள் தனது மனைவியின் பேச்சையும் மீறி அவளையும் அழைத்துக்கொண்டு அற்புத மரியின் வீட்டுக்குச் செல்கிறார் அவளின் வகுப்பாசிரியர்.

அங்கே வீட்டுச் சூழல் சரிவர இல்லை. அப்பா மொத்தமாக அவளை விட்டுச் சென்றுவிட, அவள் அம்மா வேறு யாருடனோ சேர்ந்து வாழ்ந்து வருகிறாள். அவ்வப்போது மரியை வந்து பார்க்கிறாள். இந்தச் சூழலில் வாழும் மரியின் மீது அந்த ஆசிரியருக்கும் அவள் மனைவிக்கும் இரக்கம் பிறக்கிறது.

“மரி…. ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலா இருக்குமில்லே?”

“நான் யாருக்காக சார் படிக்கணும்?”

“உனக்காக” இது அவள் ஆசிரியர்.

“ப்ச்!” என்றாள் அவள்.

அதன்பிறகு அவர் எதுவும் கேட்கவில்லை.
அன்று அவளையும் அழைத்துக்கொண்டு பீச் செல்கிறார்கள். பின் அந்த ஆசிரியரின் வீட்டில் காலையும் மாலையும் மரி வளைய வருகிறாள். ஆசிரியரின் மனைவிக்கு உதவிகள் செய்கிறாள்.

சிலநாள் கழித்து அவள் ஆசிரியருடன் ஒரு உரையாடல்….

“சார் ஒன்னு சொல்லட்டுமா?”

“ஊகூம்…. ரெண்டு மூணு சொல்லு”

“சீரியஸா கேட்கிறேன் சார். நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?”

“சத்தியமாகக் கிடையாது”

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்.

“ஏன் சார்…. கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்லுகிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?”

“பைத்தியமே! உலகத்தில் யார்தான் கெட்டுப்போனவங்க? யாராலும் கெட முடியாது. தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை, உங்க அம்மாவும், அப்பாவும், யாரும் கெட்டவங்க இல்லே.”

“ எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்”

“எனக்குத் தெரியும்”

பத்து நாள் கழித்து மரிக்கும் அவள் ஆசிரியருக்குமான உரையாடல்…

“சார்…. நான் ஸ்கூலுக்கே வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கவில்லை?”

அவள் கண்களில் உருண்டுவிழத் தயாரான இரண்டு மணிகள்…. அவளே தொடர்ந்து…

“என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கனும் சார். அப்படி யாரும் என்னை கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்துறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?”

“உனக்கே அது தோணனும்னு தானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப் புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத்தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தன்னு வச்சுக்க. நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்” … இது அவள் ஆசிரியர்.

மரி, முகத்தை மூடிக்கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்…..

இது மரி என்கிற ஆட்டுக்குட்டி என்னும் எழுத்தாளர் பிரபஞ்சனின் கதை. இந்தக் கதையின் மூலமே எழுத்தாளர் பிரபஞ்சன் கல்வியாளர் பிரபஞ்சனாக எனக்குத் தெரிகிறார். தனது இளவயதில் இரண்டாண்டுகள் பள்ளித் தமிழாசிரியராக வேலை பார்த்திருக்கிறார். மரி போன்ற கதையை எழுதிட அவரது கல்வி பற்றிய புரிதலும் முக்கியக் காரணமாகும். இந்த மரி கதையில் “மரி பள்ளியில் இருந்து நீக்கப்பட வேண்டியவள்" என பள்ளி தீர்ப்பெழுதுகிறது. ஆனால் அவளைப் பற்றிப் புரிந்து அவளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க முயலும் அந்த ஆசிரியரின் உளவியல் பார்வை ஒவ்வொரு ஆசிரியருக்கும் தேவையானது.

மேலும் பிரபஞ்சனை ஒரு கல்விச் சிந்தனையாளராகப் பார்த்திட சிறகிசைத்த காலம் என்னும் புத்தகத்தில் தனது  பள்ளிப்பருவ அனுபவங்களோடு தனது கல்வி பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்திருப்பது உதவியாக உள்ளது… அவற்றில் சில..

• இந்தியாவில் மட்டும்தான் குழந்தைகள் ஆண் குழந்தைகளாகவும் பெண் குழந்தைகளாகவும் பிறக்கிறார்கள். உலகம் முழுக்க குழந்தைகள் குழந்தைகளாகப் பிறக்கிறார்கள். குழந்தைகளாக வளர்கிறார்கள். இந்தியாவில் மட்டும் தான் ஆண் குழந்தைகள் என்றும் பெண் குழந்தைகள் என்றும் பிரித்து வளர்க்கப்படுகிறார்கள். இதுதான் சோகம். இங்கே நடக்கிற அத்தனை கோளாறுகளுக்கும் இதுதான் காரணம். ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்துக் கொண்டே இருக்க கோளாறுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கும். இங்கே சேர்த்து வைத்தால் எதோ நடந்து விடும் என்கிறீர்களே. அதெல்லாம் நடக்கவே நடக்காது. நீங்க கவலையே பட வேண்டாம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தருக்கும் போலீஸ்காரர்களா இருக்க வேண்டாம்.

• குழந்தைகளைப் பாட்டின் மூலமும், ஓவியத்தின் மூலமும் மலரவைக்க முடியவில்லை என்றால் நீங்கள் மனிதர்களை உருவாக்கவே முடியாது என்று பொருள். குமாஸ்தாக்களை உருவாக்குகிறீர்கள் என்று பொருள். குழந்தையை மனிதனாக நீங்கள் பாவிக்க வேண்டும் என்றால் பாட்டையும் ஓவியத்தையும் கற்றுக் கொடுங்கள். இந்த இரண்டு கலைகள்தான் மனிதனை மனிதனாக மலரச் செய்யும் என்கிறான் பாரதி.

• பள்ளிக்கூடம்  எனக்கு எதையும் கற்றுத்தந்ததே இல்லை. அது மட்டுமல்ல, ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதே பொய். யாரும் யாருக்கும் கற்றுத்தர முடியாது. சில சந்தேகங்களை ஆசிரியர்கள் விளக்குகிறார்.

இதே போல கல்வி பற்றிய பல சிந்தனைகளை பிரபஞ்சன் முன் வைத்த மற்றொரு நூல் “கனவு ஆசிரியர்” என்பதாகும். இந்நூலில் குழந்தைகள், கல்வி பற்றிய பல கருத்துகளை பிரபஞ்சன் முன்வைத்துள்ளார்.

• ஒரு குழந்தையின் பேதமை அல்லது குழந்தைமை எப்போது அந்தக் குழந்தையிடமிருந்து விடுபடுகிறது. ஆசிரியர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கேள்வி இது. புத்தகப் பக்கங்களின் மத்தியில் தான் வைத்த மயிலிறகு குட்டி போடாது என்று எப்போது ஒரு குழந்தை புரிந்து கொள்கிறதோ, அந்தக் கணம் அந்தக் குழந்தை தன் குழந்தைமையிலிருந்து விழித்துக் கொள்கிறது. ஒரு குழந்தை சந்திக்கும் ஆகப்பெரிய இழப்பு அதுதான், சோகமும் அதுதான். அக்குழந்தை மிக நேர்த்தியாக தன் துன்பத்தை மற்றவர் கண்களிலிருந்து மறைத்து விடுகிறது. ஆனால், அதன் மனதுக்குள் ரத்தம் வடியவே செய்கிறது.

• என் ஆசிரியர் ஒருவர், கணக்கு வீட்டுப்பாடம் போடாமல் வந்தேன் என்ற காரணத்துக்காக, ‘ நீ எல்லாம் எதுக்குடா படிக்க வரே. மரம் ஏறி கள் விற்றால் பிழைச்சுக்கலாமே நீ என்றார். சக மாணவர்கள் சிரித்தார்கள். ஐம்பந்தைந்து வருடங்கள் கடந்த பின்னும் இன்று கூட என் மனம் வலிக்கிறது. கனி இருக்கக் காய் கவரக் கூடாது என்கிறார் வள்ளுவர். குறிப்பாக ஆசிரியர்கள்.

• ஒரு ஆசிரியர், வகுப்பில் தனக்கென்று கட்டமைக்கும் தொனி மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஒரு நல்ல ஆசிரியரின் குரலில் அதிகாரம் இருக்கக் கூடாது. இருந்தால் அவர் ஆசிரியர் இல்லை, போலீஸ்காரர். அன்பு ஒன்றே இருவழிப்போக்குவரத்து. அன்பைத் தரும் ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களால் நேசிக்கப்படுகிறார்கள். மாணவர்கள் ஆசிரியர்க்குப் பதிலாக அன்பைத் தருகிறார்கள்.

• ஆசிரியர்கள் என்பவர்கள், மூடிய கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். வெளிகளின் காற்றை உங்களுக்கு நமக்கு சுவாசிக்கக் கற்றுத் தருபவர்கள். எங்கள் இருட்டை அவர்கள் திறந்து எங்களுக்கு ஒளி தந்தவர்கள். அவர்கள் கைகளில் விளக்குகள் இல்லை. அவர்களே தீபங்களாக இருக்கிறார்கள், எரிகிறார்கள்.

• ஆசிரியர்கள் அனைத்தும் அறிநதவர்களாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தாம் கற்க இன்றும் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர்கிற மனம் இருந்தால் கூடப் போதுமானது. அந்த வகை கற்கும் மனோபாவம் இல்லாத ஆசிரியர்களாக இருக்கிறார்கள் பலரும். பாடப் புத்தகச் செய்திகளைத் திருப்பிச் சொல்பவன் ஆசிரியர் ஆக மாட்டார். மாறாக பாடங்களுக்கு மேல் பல செய்திகள் அறிந்திருக்க வேண்டும்.அப்படி அறிந்திருக்கக் கடமைப்பட்டவர்கள் ஆசிரியர்கள். நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான்; கற்கத் தொடங்குகிறவன் மாணவன், கற்றுக் கொண்டே இருக்கிறவன் ஆசிரியன்.

• பாடங்களின் உள்ளடக்கத்தின் முன்னும் பின்னும் அறிந்தவரே ஆசிரியர். அப்பாடம் குறித்த மேல் அதிகம் கொண்ட தயாரிப்புகளோடு தான் வகுப்புக்குள் நுழைய வேண்டும் ஒரு ஆசிரியர். தமக்காக உழைக்கிற, உண்மையாக உழைக்கிறவரைச் சட்டென்று அடையாளம் கண்டுகொண்டு மரியாதைதரும் சமுதாயம் மாணவ சமுதாயம். மாணவ சமுதாயம் கூரிய அறிவார்த்தம் உள்ள சமுதாயம் என்று நினைக்கிற ஆசிரியரே தம் பணியின் பெருமைகளை அடைகிறவராக இருப்பார். இருட்டு, மற்றுமொரு இருட்டையே உருவாக்குமே அல்லாமல் இன்னொரு வெளிச்சத்தை ஒரு போதும் உருவாக்கிட முடியாது.

• ஒரு நல்ல ஆசிரியர் தம் மாணவர்களை நேசிக்கிறவராக இருப்பார். தாயும் தந்தையும் தம் குழந்தைகளுக்காக மேற்கொள்ளும் துன்பப் மற்றும் உழைப்புகளுக்குச் சற்றும் குறையாத உழைப்பாளியாகவே ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். மாணவர் சமுதாயம் என்கிற நாளைய மனிதர்களை நேசிப்பதனால் மட்டுமே பேருழைப்பை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். அதனால்தான் அவர் மாதாவுக்கும் பிதாவுக்கும் நிகரான தெய்வமாக நினைக்கப்படுகிறார்.

மறைந்தது பிரபஞ்சனின் உடல் மட்டுமே…. மரி என்கிற ஆட்டுக்குட்டி கதையின் மூலம் கல்வியாளராக எப்போதும் வாழ்வார்…..

இதய அஞ்சலி....

நன்றி

No comments: