Monday, December 10, 2018

பத்து கேள்விகள் மற்றும் பளிச் பதில்கள்...

1. கொழுப்புக் கட்டிகள் என்றால் என்ன?

தோல் சுத்தமாக இல்லையெனில், தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில், பலவித கட்டிகள் ஏற்படக் கூடும். அவற்றில் ஒரு வகை தான், கொழுப்புக் கட்டி. தோலில் கட்டிகள் உருவாவதற்கு, கிருமித் தொற்று தான் காரணம்.

2. அடிக்கடி மக்களை பாதிக்கக்கூடிய கட்டிகள் எவை?

வியர்வைக் கட்டி, கொழுப்புக் கட்டி, வெப்பக் கட்டிகள். புற்றுநோய் கட்டிகள், மரபியல் காரணங்களாலும், சில பழக்க வழக்கங்களாலும் ஏற்படும்.

3. அவை தோன்றக் காரணம் என்ன?

சுகாதாரமற்ற சூழலில் வசிப்போர், சர்க்கரை நோயாளிகள், உணவுக் கட்டுப்பாடு இல்லாதோர், அடிக்கடி தொற்றுநோயால் அவதிப்படுவோர், உடலுழைப்பு இல்லாதோர், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளோருக்கு, முதுகு, இடுப்பு, அக்குள், தொடை, கை, கால் போன்ற இடங்களில், அடிக்கடி கட்டிகள் வரலாம்.

4. கொழுப்புக் கட்டிகள் ஏற்பட காரணம் என்ன?

பிறவியிலோ, திடீரென்றோ இந்தக் கட்டிகள் வரலாம். அதிக உடல் எடை, உடல் பருமன், கொழுப்பு போன்ற காரணங்களால், கொழுப்புக் கட்டிகள் வருகின்றன என்பதற்கான, ஆதாரம் எதுவும் இல்லை. இவை, மரபியல் காரணங்களாலும் ஏற்படலாம்.

5. கொழுப்புக் கட்டிகளை எவ்வாறு அறிவது?

சாதாரண கட்டி போலத்தான் தோற்றமளிக்கும். இந்த கட்டி இருக்கும் இடத்தில், தோல் தளர்வாக இருக்கும்; அழுத்தினாலும் வலிக்காது. இதனால், பெரிய பாதிப்பு இருக்காது. சிலருக்கு திடீரென, கை மற்றும் கால்களில் கொழுப்புக் கட்டிகள் உருவாகலாம். வலி அதிகம் இருந்தாலோ, நரம்புகள் பாதிக்கப்பட்டாலோ சிகிச்சை மேற்கொள்ளலாம். தோலின் அடிப்பகுதியில், கொழுப்பு தங்கியிருக்கும். இப்படி தங்கும் கொழுப்பு, ஒரே இடத்தில் தங்கியிருந்தால், அதை, 'லைப்போமா' என்று சொல்வோம்.

6. நரம்புகள் மூலமாக கொழுப்புக் கட்டிகள் உருவாகுமா?

நரம்பு மூலமாக உருவாகி, தோலில் தெரியக்கூடிய கட்டியை, '#நியூரல் #பைரோலிபோமா' என்று அழைப்பர். நரம்பிலிருந்து ஏற்படும் கட்டியை, தொட்டுப் பார்த்தால், கடினத் தன்மையுடன் இருக்கும். சில நாட்களுக்கு பின், தானாகவே இதன் வளர்ச்சி நின்று விடும்.

7. வியர்வைக் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன?

குளித்து, தூய்மையாக இல்லாவிட்டால், உடலிலுள்ள உப்பு படிமம், தோலில் அடைப்பை ஏற்படுத்தி, வியர்வை வெளியேறுவது தடுக்கப்படும். இதனால், தோலில் கிருமித் தொற்று ஏற்பட்டு, வியர்வைக் கட்டிகள் ஏற்படுகின்றன.

8. வியர்வைக் கட்டிகளுக்கு சிகிச்சைகள் என்ன?

வியர்வைக் கட்டிகள் ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே போதும். சிலருக்கு, கட்டி இருக்கும் இடத்தில், கடுமையான அரிப்பு ஏற்படும். பின், இவை புண்ணாக மாறி, அதில் சீழ் கோர்த்துக் கொள்ளும். அப்போது, சிறு அறுவை சிகிச்சை செய்தாலே போதும்; சரியாகி விடும். உடல் பருமனாக உள்ளோருக்கும், குழந்தைகளுக்கும் வியர்வைக் கட்டிகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

9. வெப்பக் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன?

வெயில் காலத்தில், உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும். இதனால் உடலில், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் வெப்பம் அதிகரித்து, கட்டிகளாக தோலில் வெளிப்படும். கட்டிகள் வந்தால், பாதிப்பாக பசி எடுக்காது.

10. உடலில் வியர்வைக் கட்டிகள், கொழுப்புக் கட்டிகள் மற்றும் வெப்பக் கட்டிகள் வராமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?

நீர்க் காய்கள், குளிர்ச்சியான பழங்கள், நீர் மோர், இளநீர் போன்றவற்றை, தொடர்ச்சியாக உண்ண வேண்டும். தண்ணீர் போதிய அளவு குடிப்பதன் மூலம், உடல் வெப்பம் தணிந்து, உடம்பில் கட்டிகள் ஏற்படாமல், பார்த்துக் கொள்ளலாம்.

No comments: