Tuesday, July 16, 2019

மற்றவரை மகிழ்விக்கும் எளிய வழி எது தெரியுமா?

ஒருவரால் பெற்ற நன்மைக்காக, அவருக்குத் தெரிவிக்கிற மரியாதைதான் நன்றி.

முதலில், நமக்கு இந்த உடலையும் உயிரையும் தந்து, அதைப் பேணி வளர்த்து வளமோடு வாழ்வதற்குத் தேவையான இயற்கை வளங்கள் நிறைந்த இந்த உலகையும் தந்தருளிய இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

பெற்றெடுத்த பெற்றோர், கற்பித்த ஆசிரியர், ஊதியம் அளிக்கும் முதலாளி, உறுதுணையாக இருக்கும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், நோய் தீர்க்கும் மருத்துவர் என நாம் நன்றி சொல்ல வேண்டியவர்களின் பட்டியல் நீளமானது.

நன்றி என்பது, நேர்மறையான உணர்வு.

தினமும் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளிலும், கண்ணுக்குத் தெரியாத பலரின் உழைப்பு மறைந்திருக்கிறது அவர்கள் அனைவரும் நமது நன்றிக்கு உரியவர்கள்.

நன்றியை நன்றிக் கடன் என்று சொல்வர்.

கடன் என்ற சொல்லுக்குத் திருப்பித் தரவேண்டிய பணம் என்பது மட்டுமல்ல, கடமை என்றும் ஒரு பொருள் உண்டு.

உணவு, உடை, அந்தஸ்து, நல்வாழ்வு போன்றவற்றைக் கொடுத்தவர்களுக்குத் தங்கள் உயிரையும் கொடுத்து நன்றிக்கடன் செலுத்துவோர் இருக்கிறார்கள்.

மகாபாரத கர்ணனின் செஞ்சோற்றுக் கடன், நன்றியின் வெளிப்பாடே ஆகும்.

பயணச் சீட்டு கொடுக்கும் நடத்துனராகட்டும், கடிதத்தைக் கொடுக்கும் தபால்காரராகட்டும், அவர்களிடம் நன்றி என்று சொல்லிப் பாருங்கள் அவர்கள் முகம் ஒரு விநாடி மகிழ்ச்சியில் மின்னுவதைக் காணலாம்.

*மற்றவரை மகிழ்விக்க எளிய இனிய வழி, நன்றியை மனதாரச் சொல்வதுதான்.*

மனித உறவுகளை மேம்படுத்துவதிலும், மனத்தைத் தெளிவுறச் செய்வதிலும், நன்றி எனும் பண்பு அதிகம் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடவுள் ஒருவனிடம் கண்ணை தானமாகப் பெற்றார். அவன் கண்ணப்பன். அவன் அன்பின் வடிவம்.

கடவுள் ஒருவனிடம் ரத்த தானம் பெற்றார். அவன் கர்ணன். அவன் நன்றியின் வடிவம்.

கடவுளிடம் யாசிக்கின்ற மனிதர்களின் நடுவே, கடவுளையே யாசிக்க வைத்த மனிதப் புனிதர்கள் இவர்கள்.

இவர்களின் மூலம் கடவுள் நமக்கு வலியுறுத்திய ஆன்மிகம், அன்பு, நன்றி ஆகியவைதான்!.

*நன்றி சொல்வது சிறப்பு ஆனால், அதை உதட்டளவில் சொல்லாமல் மனத்தின் ஆழத்திலிருந்து பகிர்வதே சிறப்பைத்தரும்.*

*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*

No comments: