Monday, February 25, 2019

பேசும் தேநீர் கோப்பை...

அது ஒரு மடாலயம். அந்த மடாலயத்தில் சீடர்களாகப் புதிதாகச் சேர்ந்திருந்த இளைஞர்களுக்குப் பாடம் எடுக்க, பேராசிரியர் ஒருவர் வெளியே இருந்து அழைக்கப்பட்டிருந்தார். அவர் வகுப்பெடுக்க வந்தபோது, கையில் அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு தேநீர் கோப்பையோடு வந்திருந்தார். சீடர்கள் எல்லாரும் பேராசிரியர் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது பேராசிரியர் சீடர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார், “அன்பார்ந்தவர்களே! என்னுடைய கையில் உள்ள இந்த தேநீர் கோப்பை சாதாரணமானது கிடையாது... பேசும் வல்லமை கொண்டது... அது என்ன பேசுகின்றது என்று கவனமாகக் கேளுங்கள்...பின்னர் நான் உங்களுக்கு என்ன கற்றுத் தரவேண்டுமோ, அதைக் கற்றுத் தருகிறேன்.” இவ்வாறு சொல்லிவிட்டு அவர், தன் கையில் கொண்டுவந்த தேநீர் கோப்பையை, தனக்கு முன்பாக் இருந்த மேசையின்மீது வைத்தார். அப்பொழுது அந்த அதிசயத் தேநீர் கோப்பை பேசத் தொடங்கியது:

“எல்லாருக்கும் வணக்கம்! உங்கள் முன்பாக பார்வைக்கு இனிதாய் இருக்கின்ற நான், திடீரென்று இப்படி ஆகிவிடவில்லை. தொடக்கத்தில் நான் எங்கோ ஒரு மூலையில் வெறும் களிமண்ணாகத்தான் கிடந்தேன். அப்பொழுது ஒருவர் வந்து என்னை ஒரு சாக்கினில் அள்ளிக்கொண்டு போய். ஒரு சமதளமான தரையில் போட்டு, என்மேல் தண்ணீர் ஊற்றி, மிதி மிதி என மிதித்தார். அப்பொழுது நான், ‘ஐயோ வலிக்கிறது... என்னை விட்டுவிடுங்கள், விட்டுவிடுங்கள்’ என்று கத்தினேன், அவரோ என்னிடம், ‘கொஞ்சம் பொறுத்துக்கொள்’ என்று சொல்லி நன்றாக மிதித்தார். பின்னர் அவர் என்னை ஒரு மேசையில் போட்டு, ஒரு வடிவாக  அறுத்தார். அப்பொழுதும் நான் வலிக்கிறது என்று கத்தினேன். அதற்கு அவர், முன்பு சொன்ன அதே வார்த்தைகளைச் சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.

அதன்பின்னர் ஒரு வடிவாக அறுக்கப்பட்ட என்னை, ஒரு சக்கரத்தில் வைத்து அழுத்திப் பிடித்துகொண்டே சுற்றினார். அப்பொழுது எனக்கு தலை சுற்றியது. அதையும் பொறுத்துக்கொண்டேன். பின்னர் அவர் என்னை அடுப்பில் வைத்து வேக வைத்தார். நானோ வேதனை தாங்கமுடியாமல் கத்தினேன். ஆனாலும் அவர், ‘சிறிது பொறுத்துக்கொள்’ என்று சொல்லி, நீண்டநேரம் என்னை அடுப்பில் வேகவைத்தார். அதன்பிறகு அவர் என்னுடலில் வண்ணங்கள் பூசினார். எல்லாவற்றையும் முடித்துவிட்டு என்னை உலரவைத்தார். அப்பொழுது என்னை நான் பார்த்தபோது, ‘இது நான்தானா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது’. அந்நேரத்தில்தான் அந்த மனிதர் என்னை ஏன் காலில் போட்டு மிதித்து, பலகையால் அறுத்து, தீயில் போட்டு சுட்டார் என்ற உண்மை புரிந்தது. நீங்களும் உங்களுடைய வாழ்வில் வரும் துன்பங்களையும் சோதனைகளையும் தாங்கிக்கொண்டீர்கள் என்றால், ஒருநாள் நீங்கள் என்னைப் போன்று எல்லாராலும் வியந்து பார்க்கப்படும் மனிதர்கள் ஆவீர்கள்.” 
  
அதிசயத் தேநீர் கோப்பை இவ்வாறு பேசி முடித்த பின்னர், பேராசிரியர் மாணவர்களிடம்,  “அன்பார்ந்தவர்களே! எல்லாவற்றையும் இந்த அதிசயத் தேநீர் கோப்பையே பேசிவிட்டது. அதனால் புதிதாக நான் எதையும் பேசப்போவதில்லை... ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்... இறைப்பணிக்காக வந்திருக்கின்ற நீங்கள் உங்களுடைய வாழ்வில் வரும் துன்பங்களையும் சோதனைகளையும் மனவலிமையோடு தாங்கிக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களால் எதிர்காலத்தில் இந்த உலகமே கண்டு வியக்கும் நல்லதுறவிகளாக வரமுடியும்” என்று சொல்லி தன் உரையை முடித்தார்.

No comments: