Wednesday, January 29, 2020

பெருமை

உயரமான மலை ஒன்றின் மேல் ஒரு புனித ஸ்தலம் இருந்தது.   வருடத்திற்கு ஒருமுறை சில நாட்கள் மட்டும் அதைப்  பார்வையாளர்கள் வந்து ஜெபித்துவிட்டுப் போகும்படித் திறந்து வைத்திருப்பார்கள் . திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருநாளும் வேத வசனத்தைத் , தலைசிறந்த போதகர்கள் வந்து போதிப்பார்கள். வேதத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் கூடப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமையாகவும் , ஆழமாகவும் போதிப்பார்கள். 
             அங்கே ஒரு அருவியும்,  அழகான தோட்டங்களும் இருந்ததால் மக்கள் ஒரிரு நாட்கள் அங்கேயே தங்கி இருந்து வசனத்தை தியானித்து , ஜெபித்து , சுற்றிப் பார்த்துவிட்டு, சமைத்துச் சாப்பிட்டுச் செல்வது வழக்கம். 
           மலை சற்று உயரமாக இருந்ததால் சமையல் பொருட்களையும் , பாத்திரங்களையும் மக்கள் மேலே எடுத்துச் செல்வதற்காக நிறையக் கழுதைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன . சுமையைத் தூக்க முடியாதவர்கள் கழுதைகளைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார்கள். வாழ்நாளில் பலமுறை அங்கே வந்து செல்வது ஒரு பெருமைக்குரிய செயலாகவும்  கருதப்பட்டது. 
          ஒரு நாள் அந்த மலையடிவாரத்தில் ஒரு இளைஞனும் , பெரியவரும் சந்தித்துக்கொண்டார்கள். இருவருமே மலை ஏறுவதற்கு முன் சிறிது நேரம் தண்ணீர் குடித்துவிட்டு தன்னை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்திலேயே சில கழுதைகளும், அதன் உரிமையாளர்களும் அமர்ந்திருந்தார்கள்.
           பெரியவர் இளைஞனிடம் கேட்டார்,
" உனக்கு என்ன வயசு ஆகுது தம்பி ? "
அவன் சொன்னான் ,
"எனக்கு 28 ஆகுதுங்க ஐயா".
பெரியவர் "எத்தனை தடவை இந்த மலையில் ஏறி இருக்க ? ".
 இளைஞன் ,
" இது நாலாவது தடவை ஐயா ".
பெரியவர் சிரித்துவிட்டார். 
" எனக்கு வயது 60 ஆகுது. ஐம்பது தடவை இந்த மலையில் ஏறிட்டேன். நீ நேரம் 18 தடவையாவது ஏறி இருக்கணும். என்னப்பா வாழ்க்கை இப்படி வீணடிச்சுட்டே ? " என்றார் கேலியாக.
          இளைஞன் கேட்டான்,
" எதுக்கு ஐயா இப்படிச் சொல்றீங்க ? "
பெரியவர் இளக்காரமாகச் சொன்னார் ,
" இந்த மலைக்கு வர்றது அறிவை வளர்த்துக்கத்தான். 10 தடவை இந்த மலைக்கு வந்து போனா நூறு புத்தி சொல்ற அளவுக்கு ஞானம் வளரும் . நான் 50 தடவை வந்து போய் இருக்கேன்னா பாத்துக்கயேன் , எனக்கு எவ்வளவு ஞானம் வளர்ந்திருக்கும்னு " . அவர் முகத்தில் இளைஞனை மட்டம் தட்டிவிட்ட வெற்றிப் புன்னகை.
         இளைஞன் கோபப்படவில்லை . 
" நீங்க சொல்றது உண்மைதான் ஐயா. இங்கே வந்து பிரசங்கம் கேட்க கேட்க தான் எனக்கே கொஞ்சம் கொஞ்சமா அறிவு வருது " என்றான்.
                பெரியவர் விடவில்லை ,
" இருந்தாலும் வாழ்க்கையில இத்தனை வருஷத்தை வீணாக்கிட்டியேப்பா . இன்னும் அஞ்சு வருஷமாவது இந்த மலையில் ஏறினாதான் அரைகுறையாகவாவது ஞானம் வரும் " என்றார். 
          இப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கழுதைக்காரர் பெரியவரிடம் பேசினார். 
" ஐயா அம்பது தடவை ஏறி இறங்கி இருக்கீங்க. அப்படின்னா 5000 பேருக்காவது புத்தி சொல்லுவீங்க" என்றார். 
         பெரியவர் முகத்தில் பெருமிதம். கழுதைக்காரர் தொடர்ந்தார்,
" இங்கே இருக்கிற ஒவ்வொரு கழுதையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து தடவையாவது மேலே ஏறி இறங்குது . ஆலயம் திறந்து இருக்கிற 10 நாளில் ஒரு நூறு நூத்தம்பது தடவையாவது ஏறி இறங்குது. இப்ப இந்த கழுதைக்கு ஆறு வயசு ஆகுது. 500 தடவைக்கு மேலே ஏறி இறங்கிடுச்சு. இது எத்தனை பேருக்கு புத்தி சொல்லும் சொல்லுங்க? " என்றார். 
       பெரியவர் முகம் சுருங்கிப் போனது. துண்டை காணோம் துணியை காணோம் என்று மலை மீது ஏறத் துவங்கிவிட்டார்.

செல்லமே!
வேதப் புத்தகத்தை எத்தனை முறை படித்து முடித்தோம் என்பது முக்கியமல்ல. அது நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்களைக் கொண்டு வந்தது என்பது தான் முக்கியம். 

No comments: