Thursday, April 2, 2020

ட்ராகன், ஃபீனிக்ஸ், யாளி..

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு. வியாழம் என்ற தேசமாக தமிழ்நாடு இருந்தது. அதை ஆண்ட மன்னன் அலெக்ஸாண்டரைப்போல நெப்போலியனைப்போல செங்கிஸ்கானைப்போல Achilles போல மிக சிறந்த வீரனாக, மகா மன்னனாக இருந்தான். அதேசமயம், அதேபோல சீனாவையும் ஒரு மாமன்னன் ஆண்டுக்கொண்டிருந்தான். அதேசமயம் கிரேக்கத்தையும் ஒரு மாமன்னன் ஆண்டுக்கொண்டிருந்தான். இவர்கள் மூவருக்கும் ஒரே ஒற்றுமை மூவருமே வீரர்கள். ஜெகஜாலகில்லாடிகள். மூவரும் எதிர் எதிர் நின்று மோதினால் ஒருவரை ஒருவர் வெல்லவே முடியாது. அப்படியொரு போர் ஏற்பட்டால் அந்த போர் முடிவில்லாமல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
நீண்டுக்கொண்டே இருக்கும். அப்படியும் முடிவில் யாருக்குமே வெற்றி கிடைத்திருக்காது. அப்படியொரு சூழல் வந்துவிடக்கூடாது என்று மூன்று தேசத்து மக்களுமே இறைவனை வேண்டிக்கொண்டிருந்தார்கள். துரதிஷ்டமாக அப்படியொரு போர் மூண்டது. மூவரில் யார் சிறந்த மாவீரன் என்று நிரூபித்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் மூவருக்குமே ஏற்பட்டது.

மூன்று மன்னர்களும் தங்கள் நாட்டு படைவீரர்களிடமும் மக்களிடமும் உணர்ச்சிபொங்க பேசினார்கள். வேறுவழியின்றி அந்த மகா போர் தொடங்கியது. பலவருடங்கள் நடந்தும் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.
அப்போது சீன மன்னன் அந்த புதுவகையான ஆயுதத்தை வெளியே கொண்டுவந்தான். அதுதான் ட்ராகன்.  முதலில் கிரேக்கத்தை அழிக்க நினைத்து அந்த தேசத்தின் மீது ஆயிரக்கணக்கில் ட்ராகன்களை ஏவினான். ஆகாயத்தில் பறந்து பறந்து அது நெருப்பை கக்கியது. அதன் நெருப்பில் பல்லாயிரம் கிரேக்க வீரர்கள் இறக்க ஆரம்பித்தார்கள். சீன மன்னன் கொக்கரித்தான். இனி தான்தான் உலகத்தின் ராஜா என்று உறுமினான். அப்போது கிரேக்க மாமன்னன் சிரித்துக்கொண்டே அவன் அதுவரை மறைத்து வைத்திருந்த அந்த ஆயுதத்தை வெளியில் அனுப்பினான். அதுதான் ஃபீனிக்ஸ் பறவை. பல்லாயிரக்கணக்கில் வெளிவந்த ஃபீனிக்ஸ் பறவைகள் ட்ராகனின் நெருப்பில் வெந்து கருகி , மீண்டும் உயிர்ப்பித்து வந்து ட்ராகன்களை கொத்தி தின்ன தொடங்கின. சீன மன்னன் மிரண்டுபோனான். ஃபீனிக்ஸ் பறவைகளை அழிக்க வழித்தெரியாமல் தவித்தான். அதற்குள் ட்ராகன்களின் எண்ணிக்கை  குறைய தொடங்கின. 

இதை கவனித்துக்கொண்டிருந்த தமிழ் மன்னன் தனக்குத்தானே சிரித்துக்கொண்டே, தான் மறைத்துவைத்திருந்த ஆயுதத்தை வெளியே கொண்டுவந்தான். அதுதான் யாளி. சிங்கத்தின் உடல் தோற்றத்தையும் வேறு ஒரு புதிய முகத்தோற்றத்தையும் பறக்கும் திறனையும் கொண்டிருந்த யாளி பல்லாயிரக்கணக்கில் கிளம்பின. அதிலும் சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி என்று மூன்று வகையான யாளிகள் கிளம்பின. சிம்ம யாளிகள் ட்ராகனை அழித்தன. மகர யாளிகள் ஃபீனிக்ஸ் பறவைகளை அழித்தன. யானை யாளிகள் இரண்டு தேசத்து படைகளையும் அழித்தன. தமிழ் மன்னன் உலகத்திற்கே மாமன்னனான். 

இப்படி மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கலிபோர்னியாவில் முடிந்தபோது, பார்வையாளர்கள் மொத்தபேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். யாளியை பற்றி விசாரித்தார்கள். உலக நாடுகள் அனைத்தும் யாளி என்ற அந்த அரியவகை விலங்கைப்பற்றி பிரம்மிப்புடன் பேசிக்கொண்டன. அதன்பிறகு தமிழ் திரைப்படங்களில் யாளிக்கு பெரும் பங்கு கிடைத்தது. உலக அரங்கில் ட்ராகன் போல ஃபீனிக்ஸ் போல யாளிக்கும் பெரும் மரியாதை கிடைத்தது. 

இப்படியொரு கற்பனை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்படியொரு திரைப்படத்தை யார் எடுப்பார்கள். நாம் எடுக்க மாட்டோம். அதற்கான பொறுப்பு நமக்கு இருப்பதில்லை. ஆனால் ட்ராகன் பற்றி சைனா படம் எடுக்கும். இல்லாத ஒன்றை அல்லது தங்களது தொன்மை வரலாற்றில் அப்படியொரு உயிரினம் இருந்தது என்று நம்பும் அந்த சமூகம், அதை உண்மையென்று நம்பவைக்க திரைமொழி மூலம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். ட்ராகன் இருந்தது என்று உலகமே ஒப்புக்கொள்ளும்வரை விரட்டி விரட்டி ட்ராகனைவைத்து படங்களை எடுக்கும். அதேபோல டைனோசரின் DNA கிடைத்தது என்பதை வைத்து, ஹாலிவுட் டைனோசரை பற்றி உலக நாடுகள் பிரமிக்கும்வரை திரைப்படங்களை எடுக்கும். காட்ஸில்லாவை வைத்து ஜப்பான் படமெடுக்கும். அப்படியொரு விலங்கினம் வாழ்ந்த தடயங்கள் இல்லையென்றாலும் காட்ஸில்லா என்றால் ஜாப்பனீஸ் என்று தங்கள் பழமையை பறைசாற்ற படங்களை எடுத்துத்தள்ளும்.

ஆனால் நாம் யாளியைப்பற்றி வெளியே பேசுவதுகூட இல்லை. இன்னும் சொல்லவேண்டுமென்றால் யாளி என்றால் என்னவென்றே நம் சமூகத்திற்கு தெரியாது.

ஆமாம் யாளினா என்ன.? அது மிருகமா.? அது எப்படியிருக்கும்.?  இதுதான் பெருவாரியானவர்களின் கேள்வியாக இருக்கும்.

தமிழகத்திலிருக்கும் தொன்மையான அனைத்து கோவில்களிலும் சிங்க உடலுடன் ஏதோ ஒரு புதுவகையான முகத்துடன். யாளியின் கற்சிலை இருக்கும்  இரண்டு கால்களையும் மேலே உயர்த்தியபடி இருக்கும். அந்த யாளியில் சிங்க யாளி, மகர யாளி, யானை யாளி என்று மூன்று வகைகள்  இருந்ததாக கற்சிலைகளின் வடிவமைப்புகள் கூறுகின்றன. ஆனால் அதனுடைய தொன்மம் எவ்வளவு காலம் பழமையானது, அதன் வரலாறு என்ன. அப்படியொரு உயிரினம் வாழ்ந்ததா அல்லது கற்பனையா, அந்த கற்பனை எப்போது எந்த நூற்றாண்டில் யார் உருவாக்கினார்கள், எங்கையோ ஒருவருக்கு உருவான கற்பனை உருவம் எப்படி அனைத்து கோவில்களுக்கும் பரவியது என்று விளக்கமளிக்கும் எந்த வரலாற்று ஆவணங்களும் நம்மிடம் இல்லை. 

ஏனென்றால், தொன்மையான வரலாற்று உண்மைகளை தேடி கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிமையான செயல் அல்ல. அதனாலேயே பல வரலாற்று உண்மைகளை தேடி வரலாற்று ஆசிரியர்கள் அலைவதில்லை . ஏனென்றால் வரலாற்று உண்மைகள் என்று நம்பி அதனை தேடி பயணமாகி, அது வரலாற்றில் எங்கேயோ  உலவிய கட்டுக்கதை என்று புரியும்போது அந்த வரலாற்று பயணத்தில், அந்த வரலாற்று ஆசிரியர் கடந்த நீண்ட நெடிய பயணமும், அதற்காக அவர் மேற்கொண்ட சிரமங்களும் காற்றில் கரைந்த கற்பூரமாக போய்விடுகின்றன. அதனாலேயே உலகில் பல வரலாறுகளும் அதன் தொன்மங்களும் கண்டுபிடிக்க முடியாமலேயே கடலுக்குள் கிடக்கும் பெரிய பாறாங்கற்களைப்போல கிடக்கின்றன. 

இதனாலேயே தமிழனின் பல வரலாற்று உண்மைகள் இன்னும் நமக்கு கிடைக்காமலேயே கிடக்கின்றன. ராஜராஜ சோழனின் வரலாற்றை அறிந்துகொள்ள பெரிய கோவில் இருப்பதைப்போல பல்லவர்களின் வரலாற்றை அறிந்துக்கொள்ள மஹாபலிபுரம் கற்கோவில்கள் இருப்பதைப்போல வேறு பல சரித்திர உண்மைகளை அறிந்துகொள்ள போதுமான தகவல்களும்  சான்றுகளும் இல்லாமல்  இருப்பதாலேயே பல வரலாறுகள் முழுக்க முழுக்க துல்லியமான உண்மை என்பதைப்போல நம்மால் உணர முடிவதில்லை. 

அதுவுமில்லாமல் அதைப்பற்றிய தேடலும் நம்மிடம் இல்லை. ஏனென்றால் நமது பழமையை அறிந்துகொள்ளவேண்டிய ஆர்வமும் நோக்கமும் நம்மில் பெருவாரியானவர்களுக்கு இருப்பதில்லை. நமக்கு  தெரிந்த பழமை 
என்றால் நமது தாத்தா பாட்டி பெயர்கள் மட்டும்தான். அதிலும் நமக்கு நம் கொள்ளுத்தாத்தா பாட்டன் பூட்டன் பெயரெல்லாம்கூட தேவையில்லாத அனாவசியம்தான். அதனாலேயே நாம் எதிர்காலத்தை நோக்கிக்கூட ஓடாமல் நிகழ்காலத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம். 

-விஜய் தேசிங்கு

No comments: