Monday, November 9, 2020

படைப்போம் மகிழ்வோம்...

*நாம் செய்யும் பணியில் அலுப்பும், சலிப்பும் சேரும்போது நம்மையும் அறியாமல் நம் உள்ளத்தில் சோகம் குடியேறிவிடுகிறது. சோக சக்கரத்தில் சுழல்பவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். தம்மை சுற்றி, அவர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் விரக்தி வளையம், அவர்கள் பக்கத்தில் இருப்பவர்களையும் பரிதவிப்பில் ஆழ்த்தி, பச்சாதாபப்பட வைத்துவிடும். நாம் அனைவரும் கலகலப்பானவர்களையும், உற்சாகமூட்டுபவர்களையுமே சந்திக்க விரும்புகிறோம்.*

*அவர்கள் அறையில் இருந்து வெளியே வரும்போது, சிறிது நேரமாவது அந்த உற்சாக நறுமணம் உடல்மீது வீசுவதை நம்மால் உணர முடியும். எந்தப் பணியில் படைப்புத்திறனுகாண வாய்ப்பு இருக்கிறதோ, அதைச் செய்பவர்கள் கலைப்படைவதில்லை. நடுத்தர வயதில் பலர் பணியை மாற்றிக்கொள்வது வெளிநாடுகளில் சகஜம். அதுவரை செய்து வந்த பணியில் இருந்து, முற்றிலும் மாறுபட்ட பணியை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். கணினி இயக்கிக் கொண்டிருந்தவர், கழனியை நிர்வகிக்க போய்விடுவார்.*

*பரிசோதனைக் கூடத்தில் பணியாற்றுபவர், இசை நிகழ்ச்சி நடத்தவோ, பாடல் எழுதவோ சென்றுவிடுவார். அது அவர்களுக்குள் புதிய உத்வேகத்தை அளிக்கும். ஓய்வு பெறுபவர்கள் தன்னார்வ வழிகாட்டிகளாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் பணியாற்றுவார்கள்.*

 *இவற்றுக்கான நிகழ்வுகள் நம் நாட்டில் மிகவும் குறைவு. நம்நாட்டில் பணி, மனைவியைப் போல விட்டுச் செல்வது விவாகரத்துப் போல. பணியை காதலியாக எண்ணினால் நேசிக்கவும் முடியும், சுகமான நினைவுகளுடன் வலம்வர முடியும். செய்யும் பணியிலேயே நீடிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நாம், மகிழ்ச்சி நம்மை மையமிடச் செய்ய வேண்டிய செயல் படைப்பாக்கம்தான்.*

*'படைப்பாக்கம், என்றால் சிற்பத்தை செதுக்குவது, ஓவியத்தை தீட்டுவது, கவிதை எழுதுவது, காவியம் படைப்பது என்பது பொருளல்ல. எதையும் நேர்த்தியாகவும்,  அழகுடனும்,  அர்ப்பணிப்புடனும்,  இதய ஈடுபாட்டுடனும் செய்தால் அதுவே சிற்பம். அதுவே ஓவியம், காவியம்.*

 *அன்று கிராமப்புறங்களில் ஓடம் ஓட்டுபவர், ஏர் உழுபவவரும், நாற்று நடுபவர்களும் பாடிக்கொண்டே பணியாற்றினார்கள். அவர்கள் சொற்ப வருமானத்தையும் மீறி மகிழ்ச்சியுடன் வேலை செய்ததற்கு காரணம் அந்தப் பணியை படைப்புப் பணியாக கருதியதுதான். நாற்று வளர்க்கும் செயலை மரகதக் கம்பளம் நெய்கிற ஆர்வத்துடன் செய்வதால், உடல் வலியையும் மீறி பாட முடிகிறது. அப்படி ஏற்றம் இறைப்பவன் பாடிய, 'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே.... என்கிற வரிகள் கம்பருக்குள்ளும் விடுகதையாக வேரூன்றியது. முதுகு வலியை மீறி நாற்று நடுபவர்களும் உற்சாகத்துடன் இருந்ததற்கு, அவர்கள் உருவாக்கும் திறனே காரணம்.*

  *பெருக்கும்போது துடைப்பத்தையே தூரிகையாக்குபவர்களும், சவுக்காரத்தையே உளியாக்கி துணியை வெளுப்பவர்களும், சமைக்கும்போது மஞ்சள்தூளையும், மிளகுத்தூளையும், ரங்கோலியாக்கி ரம்மியம் சேர்ப்பவர்களும் பணியினால் தளர்ச்சி அடைவதில்லை.*

*வளர்ச்சி அடைகிறார்கள்.அயற்சியடைவதில்லை, நவிற்சியடைகிறார்கள். என் பணியில் எந்த படைப்புத்திறனுக்கும் வாய்ப்பே இல்லை' என்று சொல்பவர்களுக்கும் உபாயம் உண்டு.*

 *ஏதேனும் ஒரு பயனுள்ள உருவாக்கும் செயலைச் செய்ய முற்பட்டால், அது பெரிய விடுதலையாக மாறும். அடுத்தவர்கள் பாராட்டுவதற்காக எழுத ஆரம்பித்தால், பதற்றமே ஏற்படும். நம்முடைய மகிழ்ச்சிக்காக அதை மேற்கொண்டால் அது குற்றால குளியலாக குதூகலம் தரும்.*

*தமிழக மரபே படைப்புத்திறனுடன் தொடர்புடையதாகவே பின்னப்பட்டிருக்கிறது. காலையில் கோலம் போடுவதிலிருந்து, ஒவ்வொரு திருவிழாவின் போதும் செய்கிற பலகாரங்கள் வரை அனைத்திலும் படைப்புத்திறன் அடங்கியிருக்கிறது.*

*மாவிலைத் தோரணம் கட்டுவதில் இருந்து, கதவு ஜன்னல்களுக்கு மஞ்சள் பூசுவது வரை எல்லாமே நேர்த்தியும் அழகும் இயைந்த பயிற்சியாக மலர்கின்றன.*

*சிறந்த படைப்புகளை உருவாக்கியவர்கள் பலர், அவற்றை முழு நேர தொழிலாக மேற்கொண்டவர்கள் அல்லர். அவற்றை மாற்று பணியாக செய்ய ஆரம்பித்து, பின்னர் அதிலேயே தங்களை கரைத்துக் கொண்டவர்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் படைப்புத்திறன் ஆன்மீகமயமாகிவிடும்.*

*அவர்கள் உடலும், உள்ளமும், ஆன்மாவும் அந்த பணியாகவே ஆகிவிடும்போது, திடீரென, அதில் மின்னலைப் போன்ற படைப்புகள் பளிச்சிடும். அது உன்னத படைப்பாக ஒளிரும். மேலும், அது படைப்பாளியின் தலையில் பாரத்தை ஏற்றி தள்ளாட வைக்காமல், பொறுப்பை ஏற்றிப் புரிய வைக்கும். நீண்டநாட்கள் வாழ்பவர்கள் பலர், பணியோடு இன்னொரு படைப்பு திறனையும் கையாள்பவர்கள், எதுவுமே செய்ய முடியாவிட்டாலும், நண்பனுக்கு அன்புடன் கவிதை எழுதுவது மாதிரி கடிதம் எழுதினால், தளர்ந்த உள்ளம் சுருதி சேர்ந்த வீணையாக விளங்கும். பாட முடியாவிட்டால், நல்ல இசையை ரசிப்பது கூட நமக்குள் உற்சாக ஊற்று உற்பத்தியாக தேவையான உந்துதலை ஊட்டும். இளைப்பாறுதலுடன், நல்ல புத்தகத்தை வாசிப்பது கூட நமக்குள் காட்சிவட்டத்தை ஏற்படுத்தும். படிக்கும்போது, காட்சிகள் மனத்திரையில் விரியும்போது ஏற்படும் உணர்வுகள் கூட படைப்பதற்கு இணையான வையே.*

*படைக்கும்போது ஏற்படும் பெருமிதம் நமக்குள் பரிணாம வளர்ச்சியை பரிமாறுகிறது. நான் உற்றுப் பார்த்திருக்கிறேன்....*


*வீணை வாசிப்பவர்களுடைய விரல்களே தந்திக் கம்பிகளாக பரிமளிப்பதை இசை வல்லுநர்கள் வீட்டுக்குள் நுழைந்தபோது, இல்லம் முழுவதும் இனிய நாதம் எதிரொலிப்பதை உணர்ந்திருக்கிறேன். அவர்கள் உலகமே இசைமயமாகிவிடும். அவர்களின் பெருமூச்சுக்கூட மத்தளமாகும்; சிரிப்பில் கல்யாணி களைகட்டும்;*

*பூரிப்பில் பூபாளம் பூக்கும்; கண்ணீரில் முகாரி முகாமிடும். கவிஞர்கள் சிலரை கண்டிருக்கிறேன்... அவர்கள் பேச்சில்கூட எதுகையும் மோனையும் குதித்து வரும். சந்தமும் சிந்தும் சிதறி ஓடும். அவர்கள் கவிதை நூல்களுக்குளேயே அமிழ்ந்துவிடுவார்கள். வறுமை அவர்களை இம்சிப்பதுமில்லை; செழுமை அவர்களை சிதைப்பதுமில்லை. பழங்காலத்தில் நடந்த சம்பவம்.......*
 
*அரண்மனைத் தெருவில் புல்லாங்குழல் வியாபாரி ஒருவன் இருந்தான். வித்தியாசமான புல்லாங்குழல்களை வைத்து விற்க முயற்சி செய்தான். ஆனால், அவற்றின் விலையும் அதிகம். அதனால் யாருமே வாங்க முன்வரவில்லை.*
 
*இசைக் கருவிகளிலேயே விலை குறைவானது. புல்லாங்குழல் தான். மிக எளிமையான மனிதர்களிடம் மகத்தான திறமைகள் மறைந்து கிடக்கும் என்பதைப் புலப்படுத்தும் புல்லாங்குழல் குறியீடு. எனவே, அதிக விலை கொடுத்து வாங்க யாரும் தயாராக இல்லை. அப்போது ஒரே ஓர் இளைஞன் ஒரு புல்லாங்குழலை மாத்திரம் வாங்கினான்.*

 *'இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறானே' என்று எல்லோரும் வியந்தபோது, "நாளை காலை இந்த புல்லாங்குழலை கோட்டையின் முன்வாசலில் வாசிக்கப்போகிறேன். அபூர்வமான ராகங்கள் வரப்போகின்றன" என்று அவன் அறிவித்தான். 'என்ன ராகம் வாசிக்க போகிறானோ' என்று எல்லோரும் மிகுந்த ஆவலுடன் அடுத்த நாள் அங்கு கூடினார்கள். அவன் புல்லாங்குழலை எடுத்தான். சுந்தர ராகத்தை வாசித்தான். அனைவரும் அசந்து போனார்கள்.*

 *"நான் நிறைய படித்திருக்கிறேன். இந்த ராகத்தைவிட நன்றாக பணியாற்ற முடியும். எந்த வேலையையும் அழகாகவும், இனிமையாகவும் செய்ய முடியும். என் திறமை வெளிப்பட வாய்ப்புத் தாருங்கள் என்றான்." அங்கே நின்று கொண்டிருந்த மிகப்பெரிய பணக்காரர், அவனை தன்னுடன் அழைத்துச் சென்று பணியில் அமர்த்தினார்.*

 *அவன் உண்மையான ஊழியம் செய்து உயர்வடைந்தான். அவரும், அவனால் செல்வாக்குப் பெற்றார் அவன் சொல்வாக்கு மெய்யானதால். படைப்புத்திறன் பணிக்கு ஜரிகை சேர்கிறது. பதற்றம் ஏற்படுத்தும் அலுவலகப் பணியில், ரத்த அழுத்தம் ஏற்படுத்தாமல் காப்பாற்ற நம் படைப்புத்திறனே வடிகால்: திறமை வழிந்தோட வாய்க்கால்; கற்பனை வளர நாற்றங்கால். சாமானிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும், படைப்புத்திறனே பதக்கம் அணிவித்து மகிழ்ச்சி அளிக்கிறது.*

*படைப்பில் இன்புற்று இருப்பவர்கள் பரிசுகளையோ,  அங்கீகாரத்தையோ, பாராட்டுவதையோ செய்வதில்லை. சில தினங்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலில் சோழர்கால ஓவியங்களை நண்பர் 'குடவாயில்' பாலசுப்பிரமணியம் அவர்களுடன் பார்க்க நேர்ந்தது. பெரிய கோயிலை அவருடைய துணையுடன் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.*

 *அப்போது அவர் காட்டிய ஒரு ஓவியத்தில் திரிபுரம் எரித்த சிவனின் தோற்றம் முகத்தின் மேல் பகுதியை மாத்திரம் பார்த்தால் ருத்திரம் தெறிக்கும். மேல் பகுதியை மூடி மூக்குக்கு கீழ் பகுதியை மட்டும் பார்த்தால் சிரிப்பு தெரியும். அப்படி ஒரு கலைப்படைப்பு.*

*அதைப் பார்த்த ஃபிரஞ்சுக்  கலை ஆர்வலர் ஒருவர், 'இது நூறு மோனோலிசாக்களுக்கு சமம்' என்றாராம். ஆனால் அதை தீட்டிய ஓவியர் பெயர் தெரியாது. தன் பெயரைக் காட்டிலும் கலை மேம்பட்டது என அந்தக் கலைஞன் எண்ணியதால் தான், அது ஆயிரமாண்டுகள் கடந்தும் அதிசயமாக நீடிக்கிறது. படைப்பாளி மறைந்து படைப்பு நிற்க வேண்டுமென நினைப்பதே உண்மையான கடவுள் தன்மை.*

 *வலியைப் போக்கும் அருமருந்தாகவும் படைக்கும் மனம் விளங்கும். எனக்குத் தெரிந்த ஒருவருக்கு காலில் விபத்து. மூன்று மாத படுக்கை. வலிக்கும் போதெல்லாம் எழுத ஆரம்பித்து விடுவார்.*

*புதிய புதிய சிறுகதைகள், நல்ல கட்டுரைகள், நிறைய நாள் சிந்தித்து எழுத முடியாத நாடகம் எல்லாமே அவருடைய பேனாவில் இருந்து கசிந்து வந்தன. அந்த வலியின் உச்சத்தில் அவரால் நகைச்சுவை நாடகம் ஒன்று எழுத முடிந்தது. எங்களின் இனிய பாடல்கள் அனைத்தும் துயரத்தை சொல்பவை என்கிற ஷெல்லியின் வரிகள் உண்மைதான்.*

*அவருடைய சிறுகதைகள் அவரை சீக்கிரம் குணமடைய வைத்தன. படித்தவர்கள் பட்ட வலி வேறுவிஷயம். இறைமையை உணர இசையும், பாட்டும், அலங்காரங்களும் ஊடகமாக ஆனதற்கு முக்கிய காரணமே, படைப்பதன் மூலம் படைப்பவன் கிடைப்பான் என்பதால்தான்.*

 *இன்று பல இளைஞர்கள் வேலை கிடைத்தும், 'இனி எதுவும் படிக்க வேண்டியதில்லை; இனி எதுவும் எழுத வேண்டியதில்லை' என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் துரித உணவகங்களிலும், கேளிக்கை மையங்களிலும் வாழ்வை இழந்து விடுகிறார்கள்.*

 *ஒரு கட்டத்தில் அவர்களின் சம்பளமோ, வசதிகளோ அவர்களை திருப்திப்படுத்த முடியவில்லை. எல்லாப் பணிகளிலும் ஏற்ற-இறக்கங்கள் உண்டு. இறக்கங்கள் வரும்போது, கிரக்கங்கள் ஏற்படாமல் நம் ரசிப்புத் தன்மையே நம்மை காப்பாற்றுகிறது. என் வாழ்வில் பணியில் சாரமில்லாதபோது, சாரமான படைப்புகளில் என் கவனத்தை செலுத்தி, என் உள்ளத்தை இனிப்பாக்கினேன்.*

*அப்போது நிறைய எழுத முடிந்தது; என் வாழ்வில் புதிய புதிய ஜன்னல்கள் திறந்தன. கற்றுக்கொள்ள வயது தடையல்ல. கற்றுக் கொள்பவன் இளமையிலேயே இருப்பதாக உணர்வான். மாணவ மனம் நரை முடியை கறுப்பாக்கும் இயற்கை மையாக இருக்கும்.*

 *கற்றுக்கொள்ள தயாராக இல்லாதபோது வயோதிகம் நம்மை அரவணைக்க ஆசைப்படும். நல்ல படைப்பு ஒன்றை உருவாக்கும் போது, நமக்குள் ஊற்றெடுக்கும் இன்பத்தை எந்த சொற்களாலும் விளக்க முடியாது. அவரவர்கள் அளவில் அனைவருமே படைப்பாளர்களாக பரிணமிக்க முடியும்.*

*இன்றும் உலகம் நம்பிக்கைக்கு உரியதாக இருப்பது படைப்பாளிகள் இருப்பதால்தான். விஞ்ஞானத்திலும் படைப்புத்திறனே நம் குறைகளை தீர்க்க சாத்தியக்கூறுகள் ஆயின.*
 
*படைப்பவர்கள், பேதங்களை தாண்டுவார்கள்; எல்லா இடங்களிலும் நீராக நிரப்புவார்கள். அவர்களின் இன்பத்தை யாராலும் திருட முடியாது.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*    

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*

No comments: