நம்முடைய வார்த்தைகள் பிறரை வாழ்த்துவதாக அமைய வேண்டும். பேச்சுக்கள் மற்றவர்களின் துயரைப் போக்க வேண்டும்.
பதறிய உள்ளங்களை சாந்தப்படுத்த வேண்டும். வார்த்தைகள் சொல்லப்படும் போது உணர்ச்சியுடன் சொல்லப்பட வேண்டும். அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும்.
கனிவான வார்த்தைகள் உயிரைக் காக்கும். கருணையான வார்த்தைகள் மற்றும் காலம் அறிந்து சொன்ன வார்த்தைகள் துன்பத்தைத் தவிர்க்கும்.
தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும். நகைச்சுவை வார்த்தைகள் மனஇறுக்கத்தைத் தளர்த்தும்.
பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடும். பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டும். பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டும் மேலும் மன அழுத்தத்தைக் குறைக்கும். வாழ்த்துகின்ற வார்த்தைகள் வசந்தத்தைக் கொடுக்கும்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்கவும் முடியும் முடித்து வைக்கவும் முடியும். சில வார்த்தைகள் கசக்கும். சில வார்த்தைகள் இனிக்கும்.
சில வார்த்தைகள் இருட்டைப் போக்கும். சில வார்த்தைகள் மயில் இறகு போல் இதமாக இருக்கும்.
இலக்கிய மேதை லியோடால்ஸ்டாய் ஒரு நாள் மாஸ்கோ நகர வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவருக்கு எதிரே வந்தார் ஒரு பிச்சைக்காரர்.
அவர் அய்யா,'' எதாவது உதவி செய்யுங்கள், உணவு சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டது'' என்று கூறினார் .
ஆனால் அப்போது அவரிடமோ சோதனையாக ஒரு காசு கூட இல்லை. உடனே அவரைப் பார்த்து மிகவும் கனிவான குரலில்,
அன்புச் சகோதரனே,'', உனக்கு உதவி செய்வதற்கு என்னிடம் பணம் எதுவும் இப்போது இல்லையே என்றார்''.
அவரது வார்த்தையைக் கேட்ட பிச்சைக்காரர் அவர் மேல் கோபம் கொள்ளவும் இல்லை. தன் நிலையை எண்ணி நொந்து கொள்ளவும் இல்லை.
அதற்கு மாறாக முகமலர்ச்சியோடு, நன்றி ஐயா, தாங்கள் போய் வாருங்கள் என்றான்.
அவரது முகப் பூரிப்பைப் பார்த்த டால்ஸ்டாய், "நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால், நீங்கள் மகிழ்ச்சியோடு எனக்கு நன்றி செலுத்துகிறீர்களே?எதற்காக என்று அவரிடம் வியப்பாகக் கேட்டார்.
ஐயா,''நான் இது நாள் வரையில் என்னை எல்லோரும் வெறும் பிச்சைக்காரனாக நினைத்து விரட்டி இருக்கிறார்கள்.
நீங்கள் ஒருவர் தான் என்னைப் பாசத்தோடு சகோதரனே என்று சொல்லி அன்போடு அழைத்துப் பரிவாகப் பேசி இருக்கிறீர்கள்.
அந்த அன்பு ஒன்றே போதும்.நீங்கள் என் மீது காட்டிய இரக்கம் ஒன்றே போதும்,வேறு எந்த உதவிகளும் எனக்குத் தேவை இல்லை அய்யா, என்று மனம் உருகிச் சொன்னான்.
வார்த்தைகளை உபயோகிக்கும் போது யோசித்துப் பேசுவது நல்லது.
அன்பான வார்த்தைகள் உறவின் இடைவெளியைக் குறைக்கின்றன. உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.
No comments:
Post a Comment