“நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள்....” - கலா.5:15
நம் வாழ்வில், அனுதினமும் நிகழும் சிறு சிறு நிகழ்வுகளை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொருத்தே வாழ்வின் சுவாரசியம் அடங்கியிருக்கிறது. மேலும் நம் குடும்பத்தில் நடக்கும் அன்றாட விஷயங்களே, “நம்மை யார்?” என்று நமக்கு காட்டுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அணுகுமுறை சரியாக இல்லாவிட்டால் அது குடும்ப உறவையே பாதிக்கும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்து இப்பகுதியில் சிந்திப்போம்.
ஒரு குடும்பத்தினர் காலை சிற்றுண்டிக்காக சாப்பாட்டு மேஜையின் முன் வந்து அமர்ந்தனர். கணவன் சாப்பிட்டு முடித்தவுடன் அவருக்கு காபியை வைத்தாள் மனைவி. தெரியாமல் அவர்களது குட்டி மகள் காபி கப்பைத் தட்டிவிடவே அது அலுவலகத்திற்கு டிப்டாப்பாக வெள்ளை சட்டை-டையுடன் கிளம்பியிருந்த கணவனின் சட்டையில் பட்டு கறையாகிவிட்டது. கோபத்துடன் மகளை ஒரு அடி அடித்துவிட்டு சட்டையை மாற்றி கிளம்பினார். மகள் இன்னும் சாப்பிடாமல் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தபோது, “ஸ்கூலுக்கு நேரமாகவில்லையா?” என்று கோபத்தில் கத்தினார். தன் மனைவியிடம், “உனக்கு அறிவிருக்கிறதா? காபியை ஏன் மேஜை முனையில் வைத்தாய்?” என திட்டினார். அதற்குள் ஸ்கூல் பஸ்-ம் போய்விட்டது. கோபத்துடன் மகளை காரில் ஏற்றி அதிவேகமாக ஓட்டிச்சென்றார். அதனால் போலீஸ் பிடித்து அபராதம் போட்டனர். ஒரு வழியாக மகளை பள்ளியில் இறக்கி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கு மேனேஜர் File-ஐ கேட்டார். அப்போதுதான் அந்த File இருந்த சிறிய சூட்கேஸை வீட்டில் வைத்துவிட்டு வந்தது தெரிந்தது. டென்ஷன் தலைக்கு ஏறி தலையே சுற்றியது அவருக்கு!
யார் இந்த நாளை துக்கநாளாக மாற்றியது? அவருடைய மகளா? மனைவியா? போலீஸா? மேனேஜரா? அந்த சம்பவம் நடந்தவுடன் சட்டையைக் கழற்றி விட்டு வேறே சட்டையை மாற்றிவிட்டு ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அப்போதே பிரச்சனை முடிவுக்கு வந்து சமாதானம் உண்டாயிருந்திருக்கும் அல்லவா? நம்முடைய குடும்ப வாழ்விலும் இதேபோன்று பிரச்சனைகள் அனுதினமும் வந்து கொண்டேதானிருக்கும். அப்பிரச்சனையை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதே முக்கியம். நம் வாழ்வை பரலோகமாக்குவதும், நரகமாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது. அனுதினமும் ஜெபித்து, வேதம் வாசிக்கிற நபர்களாக நீங்கள் இருப்பீர்களானால், எந்த பிரச்சனையையும் நிதானமாய் கையாளுவீர்கள். உங்கள் குடும்பமே பரலோகமாயிருக்கும்.
For more good messages visit whatsapprecords.blogspot.com
No comments:
Post a Comment