மனைவி எட்டுமாத கர்ப்பிணி.. வேலைக்கு சென்ற கணவன் இரவு வீடு திரும்பும் வழியில் அண்ணாநகர் அருகே காட்டுத்தனமாக வண்டி ஓட்டிச்சென்ற ஒரு மிருகத்தால் இடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
அவ்வளவுதான்.. ஒரு நாள் நள்ளிரவில் அவர்களின் வாழ்வு தலைகீழாக புரட்டிப்போடப்பட்டது. வயிற்றில் இருந்த குழந்தைக்கு இப்போது ஐந்து வயது.. அப்பா இல்லாத பையனாக வளர்கிறான்..
அந்த பெண் அழுத அழுகையை இன்றும் மறக்க முடியாது.
மீண்டும் அந்த அழுகையை இன்று நினைவு கூறவைத்துவிட்டது மாசிலன் ஆதல் என்ற குறும்படம். நாதன் ஜி (Nathan G ) என்பவர் இயக்கியிருக்கிறார்.
கும்பகோணம் மகாமக குளத்தில் குளித்துவிட்டு வெளியேறும் ஒருவன், ஏன் அங்கு குளித்தான்.. அவன் செய்த பாவம் என்ன.. என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்திருக்கிறார்..
படத்தில் அதிக வசனம் இல்லை.. காட்சியின் ஊடாகவே நம் மனதில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறது கேமரா.. பாவத்தை தொலைக்க அலைபவராக நடித்திருப்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தின் இறுதி காட்சி ஒன்றில் தன்னை அடித்த அம்மாவிடம் அந்த குட்டிப்பெண், ``"இரு இரு அப்பா வரட்டும்" ..” என்று அழுவார்..
நிஜமாகவே நம் மனதை கலங்க வைத்துவிடும் காட்சி அது.
உண்மையில் சாலைகளில் அதிவேகமாக அதுவும்.. வளைந்து நெளிந்து பைக்கில் பறக்கும் பயங்கரவாதிகளுக்கு இந்த படத்தை போட்டு காட்ட வேண்டும்..
பள்ளி செல்லும் குழந்தைகளுடன்.. மாசமாக இருக்கும் மனைவியுடன்.. வயதான அம்மா அப்பாவுடன்.. என்று சாலையில் எவ்வளவோ பேர் பயணம் செய்வார்கள் என்ற எந்த அறிவும் இல்லாமல், அதிவேகமாக நம்மை கடந்து செல்லும் அந்த பயங்கரவாதிகளிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய கதைகள் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் சென்னைவாசி உட்பட ஒவ்வொரு பெருநகரவாசிகளிடமும் இருக்கும்..
இடது பக்கம் திரும்ப வேண்டும் என்று நினைத்திருப்போம். அடுத்த நொடி பயங்கரமாக உருமிய படி ஒரு 200 சிசி பைக் பறக்கும். ஒரு கணம் நம் இதயம் நின்றுப்போய் மீண்டும் இயங்கும்.
அவர்கள் 200 சிசி பைக் வைத்திருப்பதோ வேகமாக ஓட்டுவதோ அல்ல நம் பிரச்சினை.. அதற்கு ரேஸ் நடக்கும் இடத்தில் சென்று ஓட்ட வேண்டும். பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் ரோட்டை அலசியபடி வளைந்து நெளிந்து சென்று தினமும் யாரையாவது கொன்றுக்கொண்டிருக்கிறார்கள்.
நன்கு கவனித்துப்பாருங்கள்.. அப்படி அதிவேகமாக வண்டி ஓட்டு அந்த மிருகங்கள் அனைத்தும் பக்கா பாதுகாப்புடன் ஹெல்மெட் உள்ளிட்டவைகளை அணிந்தபடிதான் வண்டி ஓட்டுவார்கள். யாரையாவது இடித்துவிட்டாலும் நிற்க மாட்டார்கள். கீழே விழுந்தவர் உயிரோடு இருக்காரா.. அவருக்கு என்னவானது.. எதுவும் அவர்களுக்கு தெரியாது. அதைப்பற்றிய எந்த குற்ற உணர்ச்சியும் அவர்களுக்கு கிடையாது.
உண்மையில் அவர்கள் மன நோயாளிகளாக மட்டுமே இருக்க முடியும்..
அப்படியான மனநோயாளி பிள்ளைகளுக்கு ``dad gift mom gift’’ என்று அதி வேக பைக்குகள் வாங்கி கொடுக்கும் அந்த அன்பான அம்மா அப்பாக்களை கெஞ்சி கேட்கிறோம்..
உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் கொடுக்கும் பைக் சாவி என்பது ஊரான் வீட்டு தாலியை அறுக்கும் கத்தி என்பதை புரிந்து கொள்ளுங்கள்..
இப்போது இந்த பதிவு எழுத காரணமான `மாசிலன் ஆதல்' என்ற இந்த குறும்படத்தை பார்த்துவிடுங்கள்..
https://www.youtube.com/watch?v=NwJ6jaFdgJY
(அந்த கர்ப்பிணி பெண்ணின் வாழ்வை புரட்டிப்போட்ட மரணம் குறித்த பதிவு முதல் கமெண்டில் இருக்கிறது.. )
No comments:
Post a Comment