Wednesday, October 11, 2017

மனிதாபிமானம்

படித்ததில் இதயத்தைத் தொட்ட பதிவு..
சிக்னலைத் தாண்டி சென்று கொண்டிருந்து கார்.
"என்னங்க வண்டியை நிறுத்துங்க கொஞ்சம்..!"
எதற்கு நிறுத்தச் சொல்கிறாள் என்று புரியாத கணவர் "ஏன் என்னாச்சு..?" என்றார்.
"நிறுத்துங்க கொஞ்சம்.. சொல்றேன்..!"
சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்திய கணவன்..அவள் சொல்லும் பதிலுக்காக காத்திருந்து முகத்தைப் பார்த்தான்.
"இருங்க நான் போய் ஊதுபத்தி பாக்கெட் ரெண்டு அவர்ட்ட போய் வாங்கிட்டு வரேன்" என்று சாலையின் எதிர்ப்புறத்தைக் கைகாட்டினாள்.
அங்கே கருப்புக் கண்ணாடி அணிந்து சாலையின் ஓரத்தில் தோளில் பையும் கைகளில் பத்திப் பாக்கெட்டுகளுமாய் நின்று கொண்டிருந்தவரைக் காண்பித்தாள். கண் தெரியாதவர் என்பது புரிந்தது.
"நாம அந்தப் பக்கம் தானே வண்டியத் திருப்பிப் போகப் போறோம். அப்பிடியே உக்காரு. பக்கத்துலயே போய் வாங்கிக்கலாம்."           
"நாம அப்பிடி தான் போகப் போறோம்னு தெரியும் ங்க. ஆனாலும் இருங்க நான் ரோட்டைக் கிராஸ் பண்ணிப் போய் வாங்கிட்டு வரேன்" என்று கணவனின் பதிலுக்குக் காத்திராமல் சாலையைக் கடந்து அவரிடம் சென்று ஐந்து பாக்கெட் பத்திப் பாக்கெட்டுகளை வாங்கி வந்தாள்.
கணவனுக்கோ இவள் செய்கை குழப்பத்தையே தந்தது. திரும்பி வந்தவளிடம்
"இத அங்கயே போய் வாங்கியிருக்கலாமே.. மெனக்கெட்டு ரோட்டைக் கிராஸ் பண்ணி வாங்கி வரே..?"
"காரணம் இருக்குங்க. நான் பாக்க எப்பிடி இருக்கேன். அழகா இருக்கேனா..? பாத்தாலே வசதியான பேக்ரவுண்ட் புரியுமா..?
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?
"நான் கார்லேருந்து இறங்கி ரோட்டைக் கிராஸ் பண்ணி அவர்ட்டப் போய் பத்தி வாங்கினத ஒரு பத்து பேராவது பாத்துருப்பாங்களா..?!"
" பத்து பேரா? நூறு பேர் பாத்திருப்பாங்க. என்ன விளம்பரமா..? இந்த விளம்பரம் பண்ணி நீயென்ன அரசியலுக்காப் போகப் போறே..?!!       
"அவசரப் படுறீங்களே.. இது எனக்கான விளம்பரம் இல்லங்க. அவருக்கான விளம்பரம். அவர் கைல மொத்தமா மீறிப் போனா நானூறூ ரூபாய்க்கு தான் இருக்கும். அதை மொத்தமா வித்தாலே நூறு ரூபா லாபம் கிடைக்காது. அந்தக் காசுக்காக வியாபாரம் பண்றாரு. இருநூறு ரூபா லாபம் வேணும்னா ஒரு நாள் முழுசும் நிக்கணும். எல்லாராலயும் வாங்க முடியாது. ஆனா நம்மப் போல ஆட்கள் தாராளமா வாங்க முடியும். அதனால அவர் குடும்பம் பசி போகலாம். இப்ப சொன்னீங்கள் நூறு பேர் பாத்திருப்பாங்கன்னு அதனால தான் ரோட்டைக் கிராஸ் பண்ணிப் போய் வாங்கினேன். அதுல ரெண்டு பேர் வாங்க நான் காரணமாயிருந்தா அதான் எனக்கு வேணும்."
"வர வர நீ ரொம்பப் பாவ புண்ணியம் பாக்கறே..!"
"இது பாவ புண்ணியம் இல்லேங்க. மனிதாபிமானம்"
கார் சென்று U திருப்பமிட்டு அவரைக் கடக்கும் போது இருவர் அவரிடம் வாங்குவதை கணவனும் காண்கிறான். நீண்ட சுவாசத்தினூடே அவளின் கைகளைப் பற்றி புன்னகையுடன் பார்த்தான். அந்தப் புன்னைகையின் அர்த்தம் "தன் மன ஊனம் சரியாகி விட்டது"

No comments: