மகனைக் கொலை செய்தவரை ஆரத்தழுவி மன்னித்த தந்தை!
மகனைக் கொலை செய்தவரை மன்னித்து, ஆரத்தழுவிய இஸ்லாமியப் பெரியவருக்குப் பாராட்டு குவிகிறது.
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள வாஷிங்டன் என்ற நகரில், 2015-ம் ஆண்டு பீட்ஸா டெலிவரி செய்யும் இளைஞரை, அலெக்ஸாண்டர் ரெட்ஃபோர்ட் என்பவர் உள்ளிட்ட மூவர் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு விசாரணை, லெக் ஷிங்டன் நகர நீதிமன்றத்தில் நடந்துவந்தது. குற்றம் சாட்டப்பட்ட மூவரில் இருவர் விடுவிக்கப்பட்டனர். அலெக்ஸாண்டர் ரெட்ஃபோர்டுக்கு மட்டும் 31 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். கொலை செய்யப்பட்ட சலாலுதீனின் தந்தை அப்துல் முனிம் சொம்பத்தும் தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
தண்டனை விதிக்கப்பட்டதும் ரெட்ஃபோர்ட் கதறி அழ, அவருக்கு ஆறுதல் சொல்ல யாரும் முன்வரவில்லை. அந்தச் சமயத்தில் நடந்த வித்தியாசமான நிகழ்வைக் கண்டு அனைவரும் வியந்துபோனார்கள். மகனைப் பறிகொடுத்த தந்தை அப்துல் முனிம் சொம்பத், ரெட்ஃபோர்டை நோக்கி முன்னேறினார். அவரை நெருங்கித் தழுவி, கண்களில் வழிந்த நீரைத் துடைத்தார்.
''சலாலுதீன் மற்றும் அவரின் தாயார் ஆன்மாவின் பெயரில் உங்களை நான் மன்னிக்கிறேன். இஸ்லாம் ஒவ்வொருவரையும் மன்னிக்கவே சொல்கிறது. உங்களுக்கு வளமான வாழ்க்கை எதிர்காலத்தில் காத்திருக்கிறது'' என்று கூறினார். தன்னால் கொல்லப்பட்டவரின் தந்தை தன்னைக் கட்டியணைத்து கண்ணீரைத் துடைத்தது, ரெட்ஃபோர்டை மேலும் துடிக்கவைத்துவிட்டது. ''ஐயோ... நான் எவ்வளவு பெரிய பாவம் செய்துவிட்டேன்... உங்கள் மகனை எப்படி திருப்பித்தருவேன்...'' என அவர் மேலும் கதற, நீதிமன்றத்தில் இருந்தவர்களின் கண்கள் குளமாகின.
No comments:
Post a Comment