Saturday, November 11, 2017

கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது

வில்லி ஹோப்சும்மர் (Willi Hoffsuemmer) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் சொல்லக் கூடிய கதை இது.
முன்பொரு காலத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் பாடல்கள் பாடிக்கொண்டே செருப்புத் தைத்துக்கும் தொழிலைச் செய்து வந்தார். இதனால் அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்காகவே சிறுவர் சிறுமியர் அவருடைய வீட்டுவாசல் முன்பாக வந்து நின்றார்கள்.
அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் வீட்டுக்குப் பக்கத்தில் பெரும் செல்வம் படைத்த செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் இரவு முழுவதும் தன்னிடம் இருக்கின்ற பணத்தை எண்ணிவிட்டு, அதிகாலையில்தான் தூங்கச் செல்வார். அப்படியிருந்தும் அவருக்குத் தூக்கம் வருவதே கிடையாது. அவர் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு ‘நம்மிடம் இவ்வளவு பணம் இருக்கின்றது, இருந்தாலும் நம்மால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை, ஆனால் இந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் பணமே இல்லை. அப்படியிருந்தும் அவன் நிம்மதியாக இருகின்றானே’ என்று. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினார்.
ஒருநாள் அவர் செருப்புத் தைக்கும் தொழிலாளியை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்தார். அவரிடத்தில் ஒரு சிறிய பையைக் கொடுத்து, இதை வைத்துக்கொள் என்று சொன்னார். செருப்பு தைக்கும் தொழிலாளியும் அதை அன்போடு வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். வீட்டிற்குச் சென்று செல்வந்தர் கொடுத்த அந்த பையைத் திறந்து பார்த்தபோது செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு பேச்சு மூச்சு வரவில்லை. ஏனென்றால், அந்தப் பை முழுவதும் தங்க நாணயங்கள் இருந்தன. தன்னுடைய வாழ்நாளில் இவ்வளவு தங்க நாணயங்களை அவர் பார்த்ததே இல்லை. அவர் அந்தப் பையில் எவ்வளவு தங்க நாணயங்கள் இருக்கின்றன என்று எண்ணத் தொடங்கினர். இதனை அவருடைய வீட்டிற்கு, அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்கு வரும் சிறுவர் சிறுமியர் பார்த்துவிட்டனர். இதனால் அவர் தங்க நாணயங்கள் தன்னிடம் இருக்கின்ற செய்தியை குழந்தைகள் தெரிந்துகொண்டு விட்டார்களே என்று பயமுற்றார். எனவே, அவர் தங்க நாணயங்களை தன்னுடைய படுக்கையறையில் கொண்டுபோய் வைத்தார்.
படுக்கையறையில் தங்க நாணயங்கள் இருப்பது யாருக்கும் தெரிந்துவிடுவோ என நினைத்து அதனை மொட்டைமாடியில் கொண்டுபோய் வைக்கத் திட்டமிட்டார். மொட்டைமாடியும் சரியான இடம் கிடையாது என நினைத்த அவர் அவற்றை சமையற்கட்டில் வைக்கலாம் என்று திட்டம் தீட்டினர். அதுவும் சரிபட்டு வராது என நினைத்த அவர்,  கொல்லைப்புறத்தில் ஒரு குழிதோண்டி அதைப் புதைத்து வைத்தால் யாரும் தெரியாது என நினைத்தார். அதன்படியே அவர் செய்தார். அப்போதும் அவர் மனம் அமைதி கொள்ளவில்லை. அவர் செருப்பு தைக்கும் தொழிலை விட்டுவிட்டு, பாடல் பாடுவதையும் விட்டுவிட்டு எப்போதும் தங்க நாணயங்களைக் குறித்தே நினைத்துக்கொண்டிருந்தார். இதனால் அவர் நிம்மதியின்றித் திரிந்தார். அவருடைய வீட்டிற்கு பாடல்களைக் கேட்க வரும் குழந்தைகளும்கூட வரவே இல்லை.
ஒருநாள் அவர் தான் எதற்கு இப்படி நிம்மதியின்றி இருக்கின்றோம், இதற்குக் காரணம் என்ன? என்று ஆற அமர யோசித்துப் பார்த்தார். அப்போது அவர் தங்க நாணயங்கள்தான் தன்னுடைய நிம்மதியின்மைக்குக்  காரணம் எனப் புரிந்துகொண்டு, கொல்லைப்புரத்தில் புதைத்து வைத்திருந்த தங்க நாணயங்களை எடுத்து, அவற்றை செல்வந்தரிடம் கொடுத்து, “இவற்றை நீரே வைத்துக்கொள்ளும்” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினார். இப்போது அவரால் நிம்மதியாக பாடல்களைப் பாடிக்கொண்டு செருப்பு தைக்க முடிந்தது. முன்பு அவருடைய வீட்டிற்கு பாடல்களைக் கேட்பதற்காக வந்த சிறுவர் சிறுமியரும் வரத்தொடங்கினார்.
கதையில் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி பணமில்லாதபோது நிம்மதியாக இருந்தார். பணம் வந்த பின்பு அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பணத்திற்கும் நிம்மதிக்கும் – நிம்மதியைத் தரும் கடவுளுக்கும் – வெகு தூரம் என்பதை இந்த கதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
பணம் எப்போதும் ஒருவனுக்குள் தன்னலத்தை மட்டுமே வருவிக்கும்; இவ்வுலகம் தொடர்பாகவே சிந்திக்கத் தூண்டும். இப்படிப்பட்டவர் கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் கடவுளுக்கு உண்மையாகப்  பணிவிடை செய்யும் ஒருவர் பணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டார். ஆனால், அப்படி இறைப்பணி செய்யும் ஒருவருக்கு எல்லா ஆசிர்வதங்களுக்கும் நிரம்பக் கிடைக்கும் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதனால்தான் இயேசு அப்படிச் சொல்கின்றார்.
எனவே, நமக்கு நிலையான, நிறைவான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும் கடவுள் ஒருவருக்கு மட்டுமே பணி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

No comments: