Tuesday, March 6, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 5

சேர,சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களை வென்றதற்கான பெரிய போர் ஒன்றும் வரலாற்றில் பதிவாகலை. ஏன்னா அப்படி எதுவுமே நடக்கலை. நடந்தது எல்லாமே துரோகத்தின் வரலாறுதான். துரோகம் எப்படி என்பதற்கு புராணமே சாட்சி. எப்படி? பெரிய தூண்ல இருந்து நரசிம்மன் வந்தாரு. ஆமையா, மீனாய், பன்றியா வந்தாருன்னு புளுகிட்டான். இதெல்லாம் எப்படிடா நடக்கும்ன்னு கேட்டா, ''இதெல்லாம் கடவுள்டா''ன்னு மேலே கைய தூக்கி காட்டுவான். கடவுள் பேரை சொன்னதால நம்ம ஜனங்களும் பயந்து, கடவுளாலதான் எல்லாமே ஆகமுடியுமேன்னு நம்பிட்டாங்க. ஆக கடவுளையே தனக்கு சப்போர்ட்டுக்கு இழுத்து நம்மை முட்டாளாக்கிட்டாங்க. இதைத்தான் பாபாசாகேப் சொல்கிறார். ''இந்த நாகர் இனத்தை எதிர்த்து, போராடி வெற்றி கொண்ட வரலாறு எங்கேயுமே கிடையாது. ஏன்னா இவங்க பராக்கிரமசாலிகள். போரினால் அல்ல. துரோகத்தால்தான் அழிக்க முடியும்.  ஆரியன் எத்தனையோ அரசர்களுக்கு தங்கள் மகளை கட்டிகொடுத்து, அரசன் அசந்த நேரம் காலி செய்திருக்கிறார்கள். போரில் ஜெயித்ததில்லை. உதாரணமா, கேரளத்தில் மகாபலி சக்கரவர்த்தி அந்த வட்டார அரசர்களுக்கு அரசர். அவர் நோற்றவிதத்தை பார்க்கலாம். ஒரு பிச்சைகாரன் வந்து 3 அடி நிலம் கேட்டு முதலடி பூமியையும், இரண்டாமடி வானத்தையும் மூணாம் அடி மாபலி தலையிலும் வைத்ததால பூமிக்குள்ள போயிட்டானாம். எப்படி இருக்கு இந்த கதை. ''இது நம்புற மாதிரி இல்லையடா''ன்னா, ''கடவுள், கடவுளால எல்லாம் முடியும்'' அவ்வளவுதான். முடிந்தது. முதலடி பூமியில் என்றாலே இவன் தலை காலுக்கு கீழேதானே? ன்னு கேட்டால் ''மூச், கடவுளையே சந்தேகபடுறியா''? என்பதில் முடிந்தது. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அவன் கூட இருந்த மந்திரிங்க, சேனாதிபதியை கையில் போட்டு அரசனை கொன்னுட்டாங்க ஆரியன்.
ஆனா அதை எப்படி சமாளிச்சாங்கன்னா, ''மாபலி வருஷம் ஒருநாள் வருவாரு, அன்னைக்கு கோலமிட்டு, பாட்டு பாடி கொண்டாடுங்க. மறுபடி உள்ளே போயிடுவாறு, இதுதான் ஓணம்'' என கதை விட்டானுங்க. இப்ப நாம கொண்டாடுடுற பண்டிகை எல்லாம் நாகர் வம்ச அரசர்களை வதம் செய்த நாளைத்தான். ஆயுத பூஜை என்பது நம் அரசர்களை வதம் செய்த ஆயுதத்திற்கு பூஜை. நரகாசுரனை வதம் செய்த தீபாவளி, மகிசாசுரனை வதம் செய்த நாளை வடநாட்டில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள், மாபலி சக்கரவர்த்தி- ஓணம், நம் 10 அரசர்களை கொன்றதே தசரா. தஸ் என்றால் இந்தியில் பத்து. தசராதான் ஆரியர்களின் பொற்கால யுகம். அதைத்தான் பாபாசாகேப் சொல்கிறார். ''புராணங்களில் யாரையெல்லாம் பழி வாங்கினார்களோ அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்கள். அந்த அரசர்களின் மொழி தமிழ். இந்த அரசர்களின் மதம் என்றால் அது பெளத்தம். பெளத்தத்திற்கு முன்பு இந்த மன்னர்களிடம் மதமாக எதுவும் இல்லை. சாஸ்தா கோவில் வழிபடுபவர்கள் (முனி - மாமுனிவர்) அனைவருமே பெளத்தர். சாஸ்தாவை பார்பனர் வழிபட மாட்டான். ஆரியனுக்கு முந்தைய காலத்தில் காட்டில் தவமியற்றி வந்த சித்தர் வழியிலே அரசன் ஆட்சி நடத்தினார்கள். இந்த சித்தர்கள் சமத்துவத்தை கொள்கையாக கொண்டவர்கள். அதனால்தான் புத்தர் ''எனக்கு முன்பே 80 புத்தர் இந்த நாட்டிற்கு வந்திருக்கிறார்கள்'' என்றார். இந்த சித்தர்களின் வழிவந்த தென்னக மூவேந்தர்களும் நியாயமாய் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
நம் அரசர்கள் சூழ்ச்சி செய்து தோற்கடிக்கபட்ட பின்னரும் திரும்ப ஆட்சியை கைப்பற்ற பிரயத்தனம் செய்தும் இயலாததால், 'சரி வேலைக்கே போகலாம்' என்று முயற்சி செய்யும்போதுதான், ''அப்படி வா வழிக்கு, மாடு மேய்க்க போ, வயலில் இறங்கு' என சொல்ல, காலப்போக்கில் வாங்கும் இடத்தில் இவனானதால் குரல் தாழ்ந்து, கொடுக்குமிடத்தில் அவனிருந்ததால் அவனுக்கு கம்பீரமாயும் ஆனது. அவன் சொன்னது உண்மையும், சத்தியமுமாய் ஆனது. அவன் சொன்னது வேதமானது. 2000 வருஷமா திருத்தி புதுப்பித்து எழுதிக்கொண்டேயிருந்தான். எப்ப இவன் சாம்ராஜ்யம் அழிந்ததோ அப்போதே இவன் வாரிசுகள் தங்கள் வரலாற்றை தேடாமல் ஆரியன் சொன்ன கதையை, புராணங்களை நம்ப ஆரம்பித்து விட்டார்கள். இந்த நவீன உலகிலும் இதை நம்பும் இந்த மண்ணின் மைந்தர்களை என்னவென்று சொல்வது? கடைசியில் எது தனது உரிமையோ அதை தனக்கான பிச்சையாக பார்த்தார்கள். இது நடந்து 400, 500 வருடங்கள்தான் ஆகிறது. ஆனா அதுக்குள்ளே நம்ம வரலாற்றை நாம மறந்துட்டோம். அதனால்தான் பாபாசாகேப் இந்த புத்தகத்தை எழுதினார். புத்தம், சமணம், சைவம், சித்தர், நாட்டார் போன்ற சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட 90% பெரும்பான்மை சமுகத்தை சிறுபான்மை 10% வைணவ பார்ப்பன மதம் 'இந்து' என்ற பெயரில் கட்டி வைத்துள்ளது. அந்த வைணவ தலம் கூட புத்த விகார்தான் என்பதுதான் அதிர்ச்சி. அயோத்திதாசரின் சிந்தனைகள் நான்கு தொகுதிகளை வாசியுங்கள். அதில் உள்ள பார்வை ஒன்றே ''அனைத்தும் பெளத்தம்'' என்பதுதான். இந்த அயோத்திதாசர் இரட்டைமலை சீனிவாசனின் சகோதரியின் மகளை திருமணம் செய்தவர்.
பாபாசாகேப் புத்தகம் எழுதி 60, 70 வருசமானாலும் அதை பொய் என்று எவராலும் நிரூபிக்க முடியவில்லை. ஏன்னா எல்லாத்தையும் ஆதாரத்துடன் எழுதியுள்ளார். நாம ஏன் ஒண்ணும் தெரியாத மாதிரி இருக்கோம்னா, ''நாம் யார்?'' என்று பாபாசாகேப் சொல்றதை படிக்கிறதில்லை. படிக்கிறவன் அதை இன்னொருவரிடம் விவாதிப்பதுமில்லை. ஆனால் படம் வைத்து மாலையும், பூஜையும் செய்றோம் வருடத்திற்கு ஒருமுறை. அதைத்தவிர வேற எதையும் நாம செய்கிறதில்லை. மராட்டிய மன்னர் சத்ரபதி சாகுமகராஜ் 1919ல் பிற்படுத்தபட்டவர்களின் மாநாட்டில் பாபாசாகேப்பை நிறுத்தி சொன்னது ''இவரை உங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள். இவரே நீங்கள் விரும்பும் சமத்துவத்தை படைக்க முடிந்தவர்''. ஜனங்கள் ஆரவாரத்தை கேள்வியுற்ற காந்தியும், காங்கிரசும் பிற்பட்ட வகுப்பு தலைவர்களிடம், ''நீங்க விரும்பும் அனைத்தும் காங்கிரஸ்தான் செய்யும், அவர்களோடு சேர்ந்தா, நீங்களும் தாழ்த்தபடுவீர்கள்'' என்பதோடு, தாழ்த்தபட்டோரை தனிமைபடுத்தவும், இந்து சமயம் பலப்படவும் வைத்த பெயர்தான் ''ஹரிஜன்''. பிற்பட்டவர்களையும், தாழ்த்தபட்டோரையும் மீண்டும் நயவஞ்சகமாக பிரித்த காந்தியின் செயல் பாபாசாகேப்பின் மனதை காயப்படுத்தியது.1956 அக்டோபர் 14ம் தேதி மிகப்பெரும் பூகம்பம் வெடித்தாற் போன்ற, தாக்கத்தை உடைய ஒரு சம்பவம் நடந்தது. அதன் அதிர்வு இன்றும் உள்ளது. சமீபத்திய சேஷசமுத்திரம் தேரை எரித்தவுடன் மறுபடியும் அந்த பேச்சு வைரலா இணையத்தில் பரவி வருகிறது. அது என்ன சம்பவம்? யாராவது சொல்ல முடியுமா?
- தொடரும்.

No comments: