Friday, March 30, 2018

சமூக - புலன் விசாரணை : இயந்திரத்தின் துணையுடன் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா...

``ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்”னு
சதுரங்க வேட்டை படத்தில் பிரமாதமான வசனம் ஒண்ணு வரும்.

அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இன்றைய தேதிக்கு நம் நாட்டின் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் முடிவுகளுக்கும் பாஜகவுக்கும் ரொம்ப பொருந்தும்.

எதுக்கு அந்த வசனத்தை இப்போ இங்க குறிப்பிடுறேன் என்பது இந்த பதிவின் இறுதியில் உங்களுக்கு புரியக்கூடும்.

பெரிதாக நீட்டி முழங்க விரும்பவில்லை..
இந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது .. அதன் இறுதி நிலை ஒரு சர்வாதிகாரியை நமக்கு பரிசளிக்க கூடும்.

அந்த சர்வாதிகாரியின் பெயர் மோடி என்று வரலாறு பதிவு செய்யும் சூழல் வந்தால் அதிர்ச்சியடையாதீர்கள்..

ஏனெனில் இந்தியாவில் அடுத்தடுத்து நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூட்டிக்கழித்துப்பாருங்கள்.. நான் சொல்ல வரும் எச்சரிக்கை உங்களுக்கு புரியக்கூடும்.

இந்த சர்வாதிகாரத்தை நோக்கிய பயணம் மெல்ல மெல்ல நம்மை சுற்றி வளைக்கிறது. அதற்கு பெரும் துணையாக இருப்பது ஒரு இயந்திரம்.

ரோபோக்கள் நம்மை ஆளும்.. அதிகாரம் செய்யும் என்றெல்லாம் விஞ்ஞான கதைகளிலும் படங்களிலும் படித்திருப்போம்.. பார்த்திருப்போம்..

ஆனால் நிஜமாகவே ஒரு இயந்திரம் நம் அனைவரது வாழ்க்கையிலும் விளையாடி வருகிறது.. அந்த இயந்திரத்தின் பெயர் மின்னணு வாக்குபதிவு இயந்திரம்.

மோடி அதிகாரத்திற்கு வந்தப்பிறகு பல அரசுதுறை இயந்திரங்கள் அவரது அடிமையாகிப்போனது. அதில் முக்கியமானது இந்த வாக்குப்பதிவு இயந்திரம்.

வெறுமனே மூன்றாண்டு திட்டமிடலுடன்.. கணினியையும் போட்டோஷாப்பையும் சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி மோடி சூப்பர் மேன் ஆகாசய சூரன் என்றெல்லாம் பில்டப் கொடுத்து அதிகாரத்திற்கு வர முடிந்தது.

அந்தளவுக்கு மோடிக்காக வேலைப் பார்க்கும் தகவல் தொழில் நுட்ப பிரிவு பலமாக இருக்கிறது. அந்த தகவல் தொழில் நுட்பப்பிரிவின் அதிகாரம் எந்தளவுக்கு உள் நுழையக்கூடியது என்பதற்கு,

கர்நாடகா தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் கமிஷனுக்கு முன்னதாக பாஜகவினர் முன்னதாக அறிவித்ததே சான்று.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அவர்களின் இந்த அவசர குடுக்கை அறிவிப்பு தான் தேர்தல் கமிஷனையும் அதன் இயந்திரத்தையும் அவர்கள் மொத்தமாக இயக்கி வருகிறார்கள் என்பதற்கு உதாரணம்.

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் இந்த நொடி நான் என்ன செய்கிறேன் .. என் போனில் என்ன இருக்கிறது என்பதையெல்லாம் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து யாரோ ஒருவர் கண்காணிப்பதும் தகவலை திருடுவதும் எளிதானது.

அப்படி ஒரு சூழலில் அதிகாரத்தை எப்போதும் தங்கள் வசம் வைக்க உதவக்கூடிய ஒரு இயந்திரத்தை தங்களுக்கு ஏற்ப சாதகமாக்க முடியாது என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்பதுதான் அந்த துறை சார்ந்த நண்பர்கள் சொல்லும் செய்தி.

மோடி அதிகாரத்திற்கு வந்தப்பின் நடைபெறும் ஒவ்வொரு மாநில தேர்தலகளையும் கவனித்துப்பாருங்கள்.. அதன்பிறகு நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகளையும் கொஞ்சம் நுட்பமாக ஆய்வு செய்து பாருங்கள்..

அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு நடைபெறும் தேர்தல்கள் எல்லாவற்றிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். கடும் எதிர்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படும் பகுதிகளில் பார்டரில் பாஸாகியிருக்கும்.

அதே சமயம் ஒரு சில இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவியிருக்கும்.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி இயல்பாகவே எழும்..

அது வாக்குப்பதிவு இயந்திரத்தை மொத்தமாக கைக்குள் போட்டுக்கொண்டால் எல்லா தேர்தல்களிலும் பாஜகதானே வெற்றிப்பெற வேண்டும்.. அப்படியில்லாமல் சில தேர்தல்களில் காங்கிரசும் இன்னபிற கட்சிகளும் வெற்றிப்பெற்றிருக்கிறது.. அது எப்படி என்று தோன்றுகிறதல்லவா..

நமக்கெல்லாம் இப்படி கேள்வி எழ வேண்டும் என்பதுதான் அந்த திருட்டு தந்திரத்தில் ஒளிந்திருக்கும் அரசியல்.

இந்த இடத்தில் தான்,

``ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்” என்ற வசனத்தை நீங்கள் பொருத்திப்பார்க்க வேண்டும்.

எல்லா தேர்தல்களிலும் பாஜக மட்டுமே வெற்றிபெற்று வருவதுபோல் நடந்து கொண்டால், அது கள்ளாட்டம் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.

ஆனால் சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிப்பதுபோல் அவ்வப்போது சில தேர்தல்களில் பிற கட்சிகளையும் வெற்றிப்பெற வைத்துவிட்டால் பெரிதும் சந்தேகம் வராது.

சமீபத்தில் உ.பி இடைத்தேர்தலில் பாஜக தோற்றது சின்னமீனை விட்டுக்கொடுப்பது மாதிரி. (அதில் பிரதமர் பதவிக்கு போட்டிக்கு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டும் யோகியை டம்மி பண்ணும் மோடி அமித்ஷா கம்பெனி அரசியலும் இருக்கலாம்)

இப்போது சர்வாதிகார பஞ்சாயத்துக்கு வருவோம்..
ஊடகங்கள் மட்டுமல்ல.. நம் நாட்டின் நான்கு தூண்களும் பாஜகவின் அடிமையாகதான் இருக்கின்றன.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீடியா முன் கண்ணீர் விட்டதைப்பற்றியெல்லாம் நான் உங்களிடம் சொல்லவில்லை.(;) )

அரசுத்துறைக்குள் அதிகார மிக்க பதவிகளுக்குள் எல்லாம் பாஜகவினர் ஊடுருவியிருக்கிறார்கள்.. அவ்வளவு ஏன்.. எதிர்கட்சிகளுக்குள் கூட ஸ்லீப்பர் செல்களாக ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை பாஜக நண்பர்களே கண்ணடித்து சொல்கிறார்கள்.

இப்போது மோடியின் மூலம், ஒரே மொழி ஒரே மதம் என்ற அகண்ட பாரத கனவில் இருக்கிறார்கள். அதற்கு மாநில மொழிகள் தடையாக இருக்கின்றன என்பதால் அங்கெல்லாம் இந்தியை திணிக்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்தின் பலனை இப்போது யார் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள் நான் சொல்ல வருவது புரியும்.

பாஜகவில் வெறுமனே வெளியே தெரியும் முகங்கள் அல்ல அரசியல்.. பின்னால் பெரும் கூட்டம் மறைமுகமாக இயங்கி வருகிறது.

அடிக்கடி மோடி உலகம் சுற்றுகிறார் என்பதை நான் கார்ட்டூன் போட்டும் நீங்கள் ஸ்டேட்டஸ் போட்டு கலாய்த்தபடி கடந்து போயிருப்போம். ஆனால் அவையெல்லாம் வெறும் சுற்றுப்பயணங்கள் அல்ல.. நிதி திரட்டலுக்கான பயணங்கள்.

ஒருவேளை நான் மோடிக்கு ஆதரவாக கார்ட்டூன் போட ஆரம்பித்தேன் என்றால், நண்பர்கள் லைன் மீடியாவுக்கு சந்தா கட்டி படியுங்கள் என்று கோரிக்கை வைக்க வேண்டிய அவசியமே இருக்காது.  ஏனெனில்  கவனிப்பு அப்படி .. துட்டு மாமே துட்டு.. ;)

கருத்துருவாக்கத்திற்காக அவர்கள் அவ்வளவு பணம் இறைக்கிறார்கள்

வரப்போகும் நாடாளுமன்றத்தேர்தலில், ஆதார், ஜிஎஸ்டி என்று பல விசயங்களால் அரசு மீது எரிச்சலில் இருக்கும் மக்களை மோடி கம்பெனி துளியும் நம்பவில்லை..

அவர்களின் ஒரே நம்பிக்கை வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே..

அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.

அந்த இயந்திரத்தின் துணையுடன் இந்தியாவின் மீது சர்வாதிகாரத்தின் நிழல் படிய துவங்கியிருக்கிறது.

அந்த இயந்திர வாக்குபதிவு முறையிலிருந்து விடுபடுவது அல்லது இயந்திரத்தை சர்வாதிகார கும்பலிடமிருந்து மீட்பது மட்டுமே ஜனநாயகத்தை பாதுகாக்கும்.

இந்த கட்டுரையை படித்து முடித்ததும் வழக்கம் போல் காவி பக்தாள் எனக்கு பின் லேடன் என்ற பெயரை சூட்டுவார்களா.. சதாம் உசேன் என்ற பெயரை சூட்டுவார்களா என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.. ;)

-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா

No comments: