Sunday, April 15, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 17

இந்த ஜமீன்தார் கட்சியில் 'கூலிக்காரர்களுக்கு 10 ஏக்கர் நிலம் கொடுக்கணும்'னு முடிவெடுத்தா, ஓமந்த ரெட்டியார் வீட்டார்தான் அவங்க நிலத்தில் கூலி வேலை செய்யணும். மூப்பனார் வீட்டார்தான் களை புடுங்கணும். சிதம்பரம் வீட்டினர்தான் கதிர் அறுக்கணும். ஆக இதை பற்றி பேசுவதேயில்லை. ''கூலி வேலை செய்றவன் கஷ்டபடுறான். அவனுக்கு கூலி 100லிருந்து 110ஆக கொடுப்போம்'' ன்னு சட்டம் போடுறான்க. அதையும் பெருமையாக ''ஓராண்டு சாதனை'' என்று இரண்டாண்டு பேசுவானுங்க. நம்ம பிரதிநிதிங்க கூட காங்கிரஸ் கைக்கூலிகளாகத்தான் பேசுவாங்க. உண்மையிலேயே விவசாயிக்கு என்ன தேவைன்னா? கூலியை விட அவனை முதலாளியாக்கிரதுதான். ஆனா நடக்கிறதென்னவோ கூலியை கொஞ்ச கொஞ்சமா ஏத்தறதுதான். ஆனா பாபாசாகேப் எதிர்பார்ப்பு என்னன்னா, ''கூலிகள் இருக்கக்கூடாது, எஜமானர்களும் இருக்கக்கூடாது'' என்பதுதான். இதை மனதில் வைத்துதான் சட்டத்தை உருவாக்கினார். ஓட்டு போடுற உரிமை எல்லாருக்கும் சமம். அதாவது ஏழைக்கும் ஒரு ஓட்டு. டாட்டா, பிர்லான்னாலும் ஒரே ஓட்டு. ஒரு ஓட்டு - ஒரு மதிப்பு. ஆக அரசியலில் சமத்துவம் வந்திடிச்சி. ஆனால் சமூகத்தில் மேல்சாதி - கீழ்சாதி, ஜமீன்தார் - கூலி, ஏழை - பணக்காரன் என்ற பிரிவினையோடுதான் இருக்கு. இதனால் மேல்சாதி, ஜமீன்தார், டாட்டா - பிர்லா, அம்பானி - அதானி என்ற வர்க்கம்தான் ஆட்சியில் உள்ளது. அதை எதிர்த்து எதிர்கட்சியாக நிற்பதுவும் அதே வர்க்கம்தான். அதனால்தான் பணக்காரன் பணக்காரனாயிருப்பதும், கூலிகள் ஏழைகளாகவே இருப்பதும் தொடர்ந்திட்டே இருக்கு. அதனால்தான் ஏழைகள் விரக்தியில் ''யாரு ஆட்சிக்கு வந்தாலென்ன, நாம உழைச்சாதான நமக்கு சோறு'' என்கின்றனர். எதுவரைக்கும் இந்த நிலைமை இருக்கோ, அதுவரைக்கும் இதை ''சுதந்திர இந்தியா'' என சொல்லமுடியாது.

பொதுமக்களும் இப்பொழுது ''ஓட்டு விற்பனைக்கு'' என்று போர்டு போடாத குறையாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். ஏன்னா இந்த ஓட்டின் மதிப்பும், இந்த ஓட்டுரிமைக்காக பாபாசாகேப்பின் போராட்டமும் என்னவென்று தெரியாது. இப்போது கூட காங்கிரஸ் குப்பை என்றால், பா.ஜ.க. சாக்கடை. இதில் குப்பையா?, சாக்கடையா? என மாறி, மாறி தேர்வு செய்வதால் ஆட்சி யார் செய்தாலும் நம்ம நிலை என்னவோ ''நாம உழைச்சாத்தான் நமக்கு சோறு'' என்றுதான் பெரும்பாலானோர் சொல்வதை கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டிலும் இதே கதைதான். உழைக்கிற வர்க்கம் ஏழையாகவே இருப்பதும், சுரண்டுபவன் பணக்காரர்களாகவே இருப்பதும் நிச்சயமா இது ''சுதந்திர இந்தியா'' என்று யாராலும் ஒப்புக்கொள்ள முடியாதுதான். அதனால்தான் பாபாசாகேப் சொல்கிறார் ''ரொம்ப நாள் இந்த கொடுமையை என் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒருநாள் அவர்கள் கிளர்ந்தெழுவார்கள். அப்பொழுது நீங்கள் உருவாக்கிய இந்த அரசாங்கத்தை அவர்கள் துவம்சம் செய்வார்கள்'' என்றார். பாபாசாகேப் வார்த்தையை மறுபடி படித்து பாருங்கள். அவர் பிரார்த்தனை செய்யலை. எச்சரிக்கை செய்கிறார். நமக்கு உத்வேகம் கொடுக்கும் இந்த வார்த்தையை யாரை நம்பி (அ) எந்த பலத்தை நம்பி சொல்கிறார்?

பாபாசாகேப் எந்த பலத்தை வைத்து எச்சரிக்கிறார் என்றால், அது படித்த அரசு ஊழியர்களை நம்பித்தான். சட்டம் எழுதும் போது யாரை மனதில் வைத்து, யார்க்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று எழுதினார் என்றால் அரசு ஊழியர்களுக்குதான். ஏனென்றால் அவர்கள்தான் தன்னை போன்று சுதந்திரமாக சிந்திப்பார்கள் என்று நம்புகிறார். ஏன்னா நிலம் நம்முடைய அடிப்படை உரிமை இல்லை, தொழில் நம்ம அடிப்படை உரிமை இல்லை. ஆகவே நிலம், தொழில் நம்ம கைகளில் இல்லை. இதனால் நமது இளைஞர்கள் தொழில்நுட்பம் படித்திருந்தும் வெல்டிங் பட்டறைகளிலும், மெக்கானிக் ஷெட்களிலும் கூலி வேலை செய்கிறார்கள். கம்பெனிகளிலும் அடிப்படை சேவைப்பிரிவுகளில்தான் உள்ளனர். ஆனால் அடிப்படை சட்டத்தில் இடம்பிடித்த இட ஒதுக்கீடினால் வந்த அரசு ஊழியர்களைத்தான் நம்பித்தான் அவர் எச்சரிக்கிறார். அவர்கள்தான் இந்த சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் திறன் படைத்தவர்கள் என்ற நம்பிக்கையில்தான் எச்சரிக்கிறார். ஏன்னா ஒரு மாற்றம் வேண்டுமென்றால், அதற்கான நேரம், அறிவு, பணம் இவர்களிடம்தான் உள்ளது. இவர்கள்தான் சமூக மாற்றத்தின் முக்கிய காரணியாக கருதுகிறார். படித்தவர்களுக்கு அறிவு இருக்கும், அறிவு இருந்தால் அரசு வேலை கிடைக்கும், அரசு வேலையினால் மாதா மாதம் நல்ல சம்பளம் கிடைக்கும். 8 மணிநேர வேலைக்குபின் நிறைய ஓய்வுநேரமும் கிடைக்கும். தன்னை போல் பொருளாதார, நேர, அறிவு சுதந்திரமானவனாய் இருப்பான். இவன் சமூக சிந்தனையிலும் சுதந்திரமாக இருப்பான். அப்படிப்பட்டவன் இந்த சமூகத்தை ஒருங்கிணைப்பான். இந்த சமூகத்தை உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்வான் என்ற நம்பிக்கை பாபாசாகேப்பிற்கு இருந்தது. அப்படிப்பட்ட அரசு ஊழியர்கள் பாபாசாகேப் காலத்திலேயே 60000 பேர் இருந்தனர்.

- தொடரும்

No comments: