Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 26

பார்ப்பனன் 3% இருந்தாலும் அவன் சமூகத்திற்கு பொறுப்புள்ளவனாயிருக்கிறான். நாம 25% மேலே இருந்தாலும் சுயநலவாதிகளாயிருப்பதால நம்மோட சமூகம் சரிஞ்சிட்டிருக்கு. ஆனால் இந்த நிலையை உ.பி.-யில் மாற்றியிருக்கிறார்கள். அங்கேயுள்ள அரசு ஊழியர்கள் தாதாசாகிப் கான்சிராம் சொன்னமாதிரி ஒரு முடிவு எடுத்தாங்க. சமூகத்திற்காக அவர்கள் தங்கள் சுயநலத்தை மறந்து வேலை செய்கிறார்கள். அதனால்தான் அந்த மாநிலத்தில் அரசுதுறை மட்டுமல்ல. தனியார்துறையிலும் 30% ரிசர்வேசன் வாங்கியிருக்கிறார்கள். மேலும் பெகன்ஜி மாயாவதி ஆட்சியில் எந்த விவசாயியுமே தற்கொலை செய்ததில்லை. ஏன்னா அந்த விவசாயிக்கு தகுந்த மாதிரி நிறைய கொள்கைகளை கடைப்பிடித்தார்கள். 30 லட்ச ஏக்கர் விவசாய நிலங்களை விவசாயிக்கு இலவசமாக கொடுத்தார்கள். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் வெளிநாடு சென்று படிக்க ஸ்காலர்ஷிப் கொடுக்கப்பட்டது. காரணம் அம்பேத்கரியம் அவர்களிடம் இருந்தது. அதனால்தான் நில எடுப்பு மசோதாவிற்கு எதிராக குரல் கொடுத்தார்கள். எதிரிகளால் இவரை ஒன்றும் செய்ய முடியாத காரணம், இவர் பின்னே 2 லட்ச அரசு ஊழியர்கள் பலமாக காலூன்றி இருக்கிறார்கள். அரசியலில் 5 மணிக்கு ஒரு சிறு நிகழ்வென்றாலும் 5:5க்கு நமக்கு வந்து எட்டுவது இந்த பலத்தால்தான். ஒரு மீட்டிங் செலவு 10 கோடி என்றாலும், இந்த அரசு ஊழியர்களால் அது நடக்கிறது. இந்த அரசு ஊழியர்கள் யாரும் கோடிஸ்வரர்கள் இல்லை. ஆனால் எல்லோரும் இணைந்து நின்றதால் எல்லா கோடிஸ்வரனையும் தாண்டி நிற்கிறார்கள்.

இந்த பூமி இருந்தால்தான், மரம், செடி எல்லாமே இருக்கும். அதைப்போல இந்த சமூகம் நல்லா வாழ்ந்தால்தான் நாமும் வாழ முடியும். இந்த பூமிதான் என் சமூகம். பூமியே நம் ஆதாரம். பூமி நல்லாயிருந்தா மரம், செடியும் நல்லாயிருக்கும். இதைத்தான் பாபாசாகேப், ''No individual can succeed without the society'' என்கிறார். ''தனிமனிதனை இந்த சமூகத்திலிருந்து பிரிக்க முடியாது'' என்று அர்த்தம். உங்களை ஒருவர் மதிப்பது இந்த சமூகத்திற்கு கிடைத்த மரியாதை (அல்லது) சமூகம் சார்ந்து மதிக்கிறார்கள். இந்த சமூகம் வளர்ந்தா எல்லோரும் நம்மை மதிப்பார்கள். ஆனா இன்னைக்கு நான் இந்த சமூகத்தை சேர்ந்தவன் சொல்றதுல நாம கூச்சப்படுகிறோம். காரணம் இந்த சமூகம் சீரழிஞ்சி இருக்கிறது. நீங்க நல்லாயிருந்தாலும், ''நான் இந்த சமூகம்தான்'' சொல்ல கூச்சப்பட்டால், உங்களால் இந்த சமூகத்திற்கு என்ன பயன்? நீங்க பெரிய ஆபிஸராக கூடயிருக்கலாம். ஆனால் உங்கள் சமூகம் சாக்கடையிலிருக்குதே? இன்னைக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில பார்ப்பனர் வறுமையிலிருந்தாலும், அவன் மனதில் என்னவோ ''நான் ஐயர்'' என்ற மேட்டிமைத்தனம் இருக்கு. அப்போது ஆட்சி செய்ததால் முஸ்லிம் சமூகத்தினரை ''சாகிப்'' (அதாவது தலைவர்) என்பார்கள். ஆனால் இன்றோ ''ஏய், சாய்பு'' என்று வேலைக்காரனை கூப்பிடுவது போல கூப்பிடுகிறார்கள். ஆட்சியிலிருந்தால் மட்டுமே மரியாதை. ஆக இந்த சமூகத்தை மேலே தூக்காமல் நாம் மரியாதையுடன் இருக்க முடியாது. பாபாசாகேப் எதிர்பார்த்தது என்னன்னா, ''இந்த படித்த அரசு ஊழியர்களை தயார் பண்ணி, அவர்கள் சிந்தனையை மாற்றி, அவர்கள் முடிவெடுத்தால், ஒரு கட்சியை உருவாக்கி, தேர்தலில் நிலைநிறுத்துவார்கள்'' என்பதையே.

- தொடரும்.

No comments: