Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 27

2012ல் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டார்கள் ''ஏன் உங்க கட்சி தோல்வி அடைந்தது?''. அதற்கு ஒரே வரியில் பதில் சொன்னார் ''ஆதிதிராவிடர்கள் (பட்டியல் இனத்தவர்) எங்களுக்கு ஓட்டு போடலை''. அப்படின்னா இவ்வளவு நாளா முதலமைச்சரா இருந்தாருன்னா, அது இந்த பட்டியலினத்தாலதான். அப்ப இந்த பட்டியலினத்தோட ஓட்டு எங்கே போச்சு? அது ஜெயலலிதாவுக்கு விழுந்திருக்கு. ஆக நாம யாருக்கு ஓட்டு போடுறோமோ, அவங்கதான் முதலமைச்சர்ன்னா, எல்லாரையும் முதலமைச்சராக்கிற நாம் ஏன் முதலமைச்சராகக்கூடாது? இப்போ முடிவெடுங்க. நாம முதலமைச்சர் ஆகணுமா? வேணாமா?
ஆகணுமென்றால், அதை நாமதான் உருவாக்கணும். நாம ஓட்டு போடுறவங்க, கூட்டணி, யுக்தி என திரும்பவும் அதிமுக, திமுகவிடமே கூட்டணியானா நாம எப்ப முதலமைச்சராவது? ஆக மத்திய, மாநில S.C., S.T. தலைவருங்க 1000 பேரோ, 100 பேரோ கூட வேண்டாம். 10 தலைவருங்க முடிவெடுத்தா போதும் ''எப்படிப்பட்டவர் தலைவராகணும்ன்னு''. படித்த அரசு ஊழியர்கள் தலைவர்களை உருவாக்கணும். இது பாபாசாகேப் எதிர்பார்ப்பு. சமூகத்திற்காக தலைவர்கள் உருவாக்கப்படணும், தலைவர்கள் இந்த சமூகத்தை உருவாக்கக்கூடாது. தலைவர் இந்த சமூகத்திற்கு பணிவாக இருக்க வேண்டும். இந்த சமூகத்தை பயன்படுத்தி தான் மட்டும் வளரக்கூடாது. சமூகத்தை தன் பின்னே வைத்து 10 சீட் கொடு, 20 சீட் கொடுன்னு இந்த சமூகத்தை விலை பேசக்கூடாது. அது புரோக்கர் வேலை. நாம இதுவரை கண்டதெல்லாம் லீடர்ஸ் இல்லை, சீடர்ஸ். அவ்வளவுதான். நாம் உருவாக்குவோம் நல்ல தலைவர்களை. அதுக்குக் காலதாமதமானாலும், நேர்மையான, திறமை, கச்சிதமான தலைவர்களை உருவாக்குவோம். அது கஷ்டம்தான். எனினும் ஈஸியா கிடைச்சா, சீக்கிரமே ஈஸியா போயிடும். நிலைக்கிறதில்லை. அப்ப எப்படி யோசிக்கணும்னா,

நம்ம தலைமுறையை மட்டும் யோசிக்காம, அடுத்த தலைமுறையையும் யோசிப்பதுதான் பாபாசாகேப்பின் பார்வை. அதனால் ''I want see my people as a rulling class'' என்ற பாபாசாகேப்பின் எதிர்பார்ப்பு அவர் காலத்தில் முடியவில்லையெனினும், நம் காலத்திலே முடியும். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை நாம் ஆள்வோம். சட்டசபைகளில் இனி நீலக்கொடி பறப்பதை மனக்கண்களால் இப்பொழுதே காணுங்கள். எல்லோரையும் முதலமைச்சராக தலைவனாகவும், தலைவியாகவும் ஆக்கியாச்சு. இனிமேலாவது நம் சமூகத்தில் முதலமைச்சராகணும். அதைப்போல பிற்பட்ட  வகுப்பினரும் பாபாசாகேப் அம்பேத்கரிய சிந்தனையோடு இணைந்து வந்தால், அவர்களையும் நம்முடன் இணைச்சி, பாபாசாகேப்பின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்.

புத்தர், நபிகள் நாயகம், இயேசு, பாபாசாகேப் போன்றவர்களிடம் உள்ள ஒற்றுமை என்னன்னா? இவர்கள் அடிமைத்தனத்தை எதிர்த்து, போராட்டம் செய்தவர்கள். ஏன்னா இவர்கள் பிறக்கும்போது இவர்களின் இனம் அடிமைத்தனத்தில் இருந்தது. ஆகவேதான் அவர்களின் இனத்திற்கு விடுதலைப்போராட்டம் செய்தார்கள். அதனால் நாமளும் நமது இனத்தின் விடுதலைக்கு பட்டியல் இனத்தில் எதுவாக இருந்தாலும் சரி, நம் அடிமைச்சமூகத்தை தலைநிமிர்ந்து வாழ, அம்பேத்கரியம் கொண்டு உறுதுணையாக நிற்கும் எவராயிருந்தாலும் சரி, அவனோட தியாகம், திறமையை பாருங்க. அவன்தான் தலைவன். அவன் என்னிக்குமே சமூகக் கட்டுபாட்டுக்குள்ளேயே இருக்கணும். சமூகத்தை பயன்படுத்துகிறவனாக இருக்கக்கூடாது. இந்த அரசியலமைப்பு சட்டம்தான் நமக்கு புனித நூல். இதைத்தாண்டி இன்னொன்று கிடையாது. ஏன்னா பாபாசாகேப்பை தாண்டி எதுவுமே கிடையாது. இதை நோக்கிதான் நம் சமூகத்தை தயார் செய்யணும்.

தொடரும்

No comments: