Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 29

கல்வி என்னிக்குமே அரசு கையிலேதான் இருக்கணும். ஆனால் சுதந்திரம் அடைந்ததும் 5 வருடத்தில் கல்வியை தனியார்மயம் ஆக்கிட்டாங்க. தனியார்கல்வியில் 3 வயசில் pre kgலிருந்தே ஆங்கிலம். ஆனால் நம் மக்களோ ஓடு, ஓலை வேய்ந்த பள்ளிகளில்,  ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், எந்த அடிப்படையும் இல்லாத பள்ளிகளில் பயில்கிறார்கள். இந்த இரு குழந்தைக்கும் நிறைய வித்தியாசம். அவன் MBA, MCA, C.A, M.TECH, M.E, M.B.B.S. என்று படிக்கிறான். வருடத்திற்கு ஏறக்குறைய 20 லட்சம் சம்பாதிக்கிறான். ஆனால் நம் மக்களோ,  ஒருவேளை B.A, B.SC, B.COM. என முடித்தும்,  அரசாங்க வேலைக்கு முயற்சித்து, அது கிடைக்காத விரக்தியில், தனியார்துறையில் கிடைத்த வேலையில், குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கின்றனர். ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? சட்டம் சொல்வதை விடுத்து, அதற்கு விரோதமாக செய்யும் அரசை தவறாக தேர்ந்தெடுத்ததுதான் நம் குற்றம். அமெரிக்காவாகட்டும், ஆஸ்திரேலியாவாகட்டும், இங்கிலாந்தாகட்டும், இன்னும் என்னென்ன நாட்டையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களின் சொந்த அரசியல் அமைப்பு சட்டத்தையே நடைமுறைப்படுத்துகிறார்கள். அந்த சட்டத்திற்கு உட்பட்டே ஆட்சி செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமே அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக, அரசே செயல்படுவதை அன்றாடம் நாம் கண்டு வருகிறோம். சட்டத்திற்குட்பட்டு போராடுபவர்களை இந்த அரசாங்கம் ''தேச விரோதி'' என்கிறார்கள். தேச விரோதத்தையே முழு நேர தொழிலாக கொண்டவர்களை ''தேச பக்தர்கள்'' என்றழைக்கிறார்கள். அந்த தேச விரோத அமைப்பிலிருந்துதான் உருவானதுதான் இப்போதைய ''மோதி அரசாங்கம்''. இவர்களா அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள்?

நம் தந்தை பாபாசாகேப், நம்மை அடிமைத்தனத்திலிருந்து ஆட்சியாளராக மாற்றுவதற்கு தன் வாழ்வையே நமக்கு தந்தார். ஆனால் நாமோ நம் பொறுப்பற்றத் தனத்தால் நம் குழந்தைகளை மீண்டும் பிச்சைக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் மக்கள்தொகை எஸ்.சி., எஸ்.டி. 23% பேர். ஆனால் நம் மக்கள்தொகையை விட அதிகமான இட ஒதுக்கீடு எங்கே கொடுக்கிறாங்கன்னா? அது சிறைச்சாலைகளில்தான். அங்கே 38% நம் மக்கள் உள்ளனர். ஏனிந்த நிலை? படித்து முடித்து  வேலை கிடைக்காமல், குடித்து, சீரழிந்து, ரவுடிகளுக்கு அடியாட்களாய் போய் கொண்டிருக்கிறார்கள். ஏன் அப்படி ஆனாங்க? படித்தும், அவன் நினைச்ச வாழ்க்கை கிடைக்காதபோது குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறான். வாழ்வா? சாவா? என்ற நிலையில்தான் அவன் வாழ்க்கை ஓடிட்டிருக்கு. போலிஸ், கோர்ட், கேஸு என்று வாழ்க்கையே போராட்டமாக்கிட்டாங்க. ஆனா அரசு ஊழியர்கள் நினைப்பது என்னன்னா, நாம பாதுகாப்பாய் இருக்கோமென்று. ஆனால் நிச்சயமாக இல்லை. இப்பத்தான் நீங்க ரொம்ப ஆபத்தான இடத்தில் இருக்கிறீங்க. பணத்துக்கு ஓட்டு போடும் நம் மக்கள் வாங்கி, வாங்கி பழகிட்டாங்க. நாம் அதை சரி செய்கிறோமா?

இன்னொரு முக்கிய விஷயம் என்னன்னா பாபாசாகேப் பின்னாடி நம் மக்கள் பாதிபேர் போனால், காங்கிரஸ் பின்னாடி மிச்சபாதி பேர் போனாங்க. இப்பவுமே அதைப்போல நம் ஒவ்வொரு சாதி உட்பிரிவிற்கும் ஒரு தலைவர் வந்து மக்களை பிரித்தாளுகின்றனர். ஒட்டுமொத்தமாய் இணைப்பது எப்படி? நாமே இப்படி தனித்தனியே பிரிந்திருந்தால்  பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் எப்படி நம்மை நம்பி வருவார்கள்?

தொடரும்

No comments: