Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 30

நாமெல்லாரும் ஓரணியிலே இருந்தால் மறுநாளே எதிரிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். இது நமக்கு புரியலையென்றால், இன்னும் அரசியல் நமக்கு விளங்கவில்லை என்று அர்த்தம்.
பாபாசாகேப் 6000 சாதியாய் பிரிந்தவர்களை நான்காக இணைக்கிறார். எப்படி? பட்டியலினம், பட்டியல் பழங்குடிகள், இதர பிற்படுத்தபட்டோர், மத சிறுபான்மையினர் என்று.
கான்சிராம் இந்த நான்கையுமே ஒன்றாக இணைத்து ''பூர்வ பெளத்தர்களாக'' அழைக்கிறார். இந்த உண்மையை எப்பொழுது நீங்கள் எல்லோரும் உணர்கிறீர்களோ, அன்றைக்கு மனுவாதிகளின் ஆட்டம் குளோஸ். எப்பொழுது நீங்கள் உங்கள் சாதியை தூக்கி பிடிக்கிறீர்களோ, அப்பொழுது வரை நாம் அடிமைகள்தான். நாம சாதி பார்த்து, அதிலும் உட்பிரிவு பார்த்து சுருங்க, சுருங்க நம் குரலுக்கு மதிப்பிருக்காது. சேர்ந்தாத்தான் மதிப்பும், மரியாதையும்.
உதாரணமா, முஸ்லிமைப் பாருங்கள். எவ்வளவு தலைவர்கள்? எத்தனை கட்சி? பாபர் மசூதி இடிபடும்போது அதில் யாராவது தன் எம்.பி., எம்.எல்.ஏ. பதவியை துறந்தார்களா என்றால் இல்லை.

நம் எதிரியான பார்ப்பான் கூட நம்மை ''சூத்திரன்'' என்ற ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுறான். நாமோ நம்மை சுருக்கி, தனிமைப்படுத்தி, சுயசாதி வெறியர்களாக, ''நான் பள்ளன், நான் பறையன், நான் சக்கிலியன், etc. என குறுகிட்டே போனால் நாம் எந்த காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது. இங்கே நம்பர்தான் முக்கியம். நாமெல்லாம் இணைந்து ஒன்றாய் நிற்கிறோமா? இல்லைன்னா மறுபடியும் 6000 சாதியா மாறப்போறோமா?
இப்படியாக நாம் பிரிந்து, எந்த கட்சிக்கு போனாலும் அவன் நம்மை அடியாளாகத்தான் வைப்பானே தவிர ஆட்சியாளரா வைக்க மாட்டான். சிந்தியுங்கள்.

பரம்பரை பரம்பரையாக காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அதிமுகவிற்கு வாக்களித்து, நம் மக்கள் யாராவது முதலமைச்சர் ஆனார்களா? ஆக வெற்றியை தீர்மானிக்கிற வாக்கு வங்கியை வைத்திருக்கிற நமக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டிற்கு போய், ''தாயே பிரியாணி கொடு''ன்னு கேட்கலாம். ஆனால் அந்த தாயோ பழைய சோறைத்தான் போடுவாள். ஏன்னா, அவளுக்கு தெரியும் பிச்சைக்காரனுக்கு என்ன கொடுக்கணும் என்று. ''எனக்கு 10 சீட் கொடு'' என்று கேட்கலாம். ஆனா கொடுக்கிறது என்னவோ 1, 2 சீட்தான், அதுவும் தனித்தொகுதியில்.

ஆட்சிக்கு போனால்தான் நமக்கு தன்மானம் கிடைக்குமே தவிர, எவனையாவது, எவளையாவது கொண்டு வந்தால் நமக்கு தன்மானம் கிடைக்கிறதில்லை. தன்மானம் என்பது, நம் சொந்த கால்களில் நிற்கிறோமா? அடுத்தவர்களின் நிற்கிறோமா? என்பதுதான். ஏனென்றால் நம்ம தேவை என்னவென்று நமக்குத்தான் தெரியும். அவனுக்கோ, அவளுக்கோ என்ன தெரியும்? ''என் மக்கள் ஆட்சியாளராக வேண்டும்'' என்ற பாபாசாகேப்பின் பாதையை விடுத்து, வேறு எந்த பாதையில் நாம் தன்மானத்துடன் வாழ்வது? வன்முறையை கையிலெடுத்து ஒருமுறை உள்ளே போனால், சாவும்வரை அவன் ரவுடிதான். ஆக நம் சமூக படித்த இளைஞர்கள் ரவுடியாகணுமா? ஆட்சியாளராகணுமா? ஏனென்றால் அவர்கள்தான் இந்த சமூகத்தின் நரம்பும், ரத்த நாளங்களை போன்றவர்கள். ஆனால் அவர்களோ திக்கற்று அலைகிறார்கள்.

- தொடரும்

No comments: