Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 31

நம் மக்களுக்கான தலைவரை எப்படி நாம் உருவாக்கணும் என்றால், அவர் 'இந்த சமுகத்தை தாண்டி தனக்கு எதுவுமே இல்லை' என்று நமக்குதான் விசுவாசமாய் இருக்கணுமேயன்றி, எவனையோ, எவளையோ ஆதரிக்கிறவரா இருக்கக்கூடாது. ஒரு பாபாசாகேப்பை போல, ஒரு பெரியாரை போல, ஒரு இம்மானுவேல் சேகரனை போல, ஒரு ஒண்டிவீரனை போல, ஒரு அயோத்திதாசரை போல சமூகத்திற்காக, கொள்கைக்காக தன் உயிரையும் கொடுக்கத்தக்க தலைவர்களை உருவாக்கணும். வாழும்போது எவர் இந்த சமூகத்திற்காக வாழ்கிறார்களோ, அவர்களுக்கு சாவே கிடையாது. நாம் அப்படிப்பட்ட மாவீரர் போன்றோர்களை தலைவராக்கணும். இனி நாம்தான் தமிழ்நாட்டை, இந்தியாவை ஆள வேண்டும். ''இது முடியுமா?'' என்று யோசிக்காதீர்கள். ''ஏன் முடியக்கூடாது? என்பதாகவே உங்கள் சிந்தனை இருக்கட்டும். அதை நாம் கனவில் கூட நினைக்க வில்லை என்றால் எப்படி முடியும்? அட்லீஸ்ட் கனவையாவது பெரிதாக காணுங்கள். கனவை காணவே தைரியமில்லையென்றால், ஆட்சியாளராய் மாற எப்படி தைரியம் வரும்? இப்படித்தான் ''பாபாசாகேப் போன்று நன்கு படித்து பெரிய ஆளாக வருவேன்'' என உ.பி.யில் ஒரு சிறுபெண் சிறப்பாக படித்து, கலைக்டர் ஆக வேண்டும் என கனவு கண்டவரை பார்த்து தாதாசாகிப் கான்சிராம் அவர்கள் ஒரு மீட்டிங்கில், ''இன்று முடிவெடு, நீ கலெக்டராகணுமா? அல்லது அந்த கலெக்டர்களெல்லாம் சல்யூட் அடிக்கும் முதலமைச்சராகணுமா?'' என்று கேட்டார். உடனே தனது பார்வையை அரசியலுக்கு திருப்பி, 4 முறை தன்னை முதலமைச்சர் என்ற நிலைக்கு உயர்த்தியவர். அவர்தான் பெகன்ஜி மாயாவதி. எப்படி முடிந்தது? முடியும் என முடிவெடுத்ததாலேயும், பாபாசாகேப்பின் வழியை தேர்ந்தெடுத்ததாலேயும். பாபாசாகேப் பாதை என்பதே வெற்றியின் பாதைதான் என நிரூபித்துள்ளார். நாமும் இவர்களுடன் ஓரணியில் நிற்க வேண்டும்.
பொதுவாக நாம் கூறுவது, ''நம்மிடம்தான் ஒற்றுமையே இல்லையே'' என்பதை. அது உண்மைதானா? பார்க்கலாமா?
உதாரணமாக, சமுகப்பற்றுள்ள நம் மக்களின் வீடுகளில் பார்த்தால், பள்ளர் வீடுகளில் பாபாசாகேப், இம்மானுவேல் சேகரனாரும், பறையர் வீடுகளில் பாபாசாகேப், இரட்டைமலை சீனிவாசனும், சக்கிலியர் வீடுகளில் பாபாசாகேப், ஒண்டிவீரனும், மற்றும் இன்னுமுள்ள 76 பட்டியலினமும் தலைவர்களின் படத்துடன் பாபாசாகேப்பை புகைப்படமாக வைத்திருப்பார்கள். இவர்கள் எல்லாரயும் இணைக்கும்  மைய புள்ளியாக இருப்பது யாரென்றால் அது பாபாசாகேப்தான். இது வேறெந்த சமுதாயத்திற்கும் உண்டா? பாபாசாகேப்தான் அனைவரையும் இணைக்கிறார். சொல்லப்போனால் இதர பிற்பட்ட வகுப்பினர், மத சிறுபான்மையினரையும் இணைக்கும் மைய புள்ளியும் பாபாசாகேப்தான். மேலும் பார்ப்பன மகளிர் முதல் அனைத்து பெண்களுக்கும் ''சம உரிமை, சொத்துரிமை, பெண் விடுதலை'' என ''இந்து சட்ட மசோதா''வை தாக்கல் செய்ததால் இந்திய நாட்டில் பாதியாக இருக்கும் அனைத்து சமுதாய பெண்களுக்கும் பாபாசாகேப்தான் மானசீக குருதான். நாம் இதனை அவர்களுக்கு இதை அறிவிக்க வேண்டியது மட்டுமே பாக்கி. இப்போது சொல்லுங்கள் வெற்றி நம் கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரிகிறதா? இல்லையா?
ஒற்றுமை ஓ.கே. பொருளாதாரம் இல்லையே என நீங்கள் நினைத்தால், மொத்தா மொத்தம் நம் அரசு ஊழியர்கள் மாதாமாதம் 200 ரூபாய் மட்டும் இந்த சமூகத்திற்கு திருப்பி செலுத்தினால் கூட, குறைந்தது ஒரு மாவட்டத்திற்கு 5000 பேர் செலுத்தினால் கூட போதும். முடிந்தால் கணக்கு போட்டு பாருங்கள்.
தொடரும்

No comments: