Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 32

மற்ற இனத்தினர் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று நாம நினைப்பது மாயையே. உதாரணமாக திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் இருக்கும் ஆளுங்கட்சி வேட்பாளரும், தோல்வியுற்ற வேட்பாளரும் ஒரே இனம்தான். அந்த சமுதாய ஓட்டே வெற்றியை நிர்ணயிக்காது. அதிலும் இரண்டாய் பிரிந்தாலும், இருவரில் யாரேனும் வெற்றி பெறுகின்றனர். என்னத்தான் நடக்கிறது?

அங்கே பிற சமுதாயமும், ஏன் நம்மவர்கள் கூட அவர்களில் ஒருவருக்கு வாக்களிக்கிறார்கள். ஏனென்றால் நம் வாக்கிற்கான விலை நம் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது.

அப்படின்னா, நம் ஓட்டின் வீரியம் என்னவென்று நம் பாமர மக்களுக்கு புரியவில்லை. ஆனால் நம் மக்களின் ஒழுக்க கேட்டினை சுட்டிக்காட்டும் நம் படித்த இளைஞர்கள், அரசு ஊழியர்களும் அதை சரிசெய்ய முயற்சி எடுக்கிறார்களா என்றால், இல்லை.

இன்றைக்கு சுகமாய் ஆட்சி செய்யும் பா.ஜ.க., காங்கிரஸ் ஆட்சியாளர்களின் வெற்றிக்கு பின்னே மாபெரும் தியாகங்கள் இருக்கிறது. எப்படி?

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்காக நிறைய இளைஞர்கள் திருமணமே செய்யாமல், வருடத்திற்கே ஐம்பதாயிரம் மட்டுமே செலவு செய்து மிச்சமாகும் ஐந்து லட்ச பணத்தை தன் இயக்கத்திற்காக கொடுக்கிறார்கள்.

ஒரு சிலரோ தன் பார்ப்பனிய கொள்கையை பரப்புரை செய்ய பிரச்சாரர்களாக கையில் ஒரு பையுடன் கிளம்பியவர்கள் இன்றுவரை வீடு திரும்பவில்லை.

அநீதி இழைப்பதற்கே கூட்டம், கூட்டமாய் கிளம்பும் அவர்களை எதிர்த்து, நீதியை நிலைநாட்ட எண்ணும் நம் அம்பேத்கரியர்கள் தமிழ்நாட்டிலேயே ஒரு சிலர்தான் என்பதுதான் கசப்பான உண்மை.

நன்றாகப்படித்து இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்ற அரசு ஊழியர்களின் எண்ணங்கள் என்னவாக இருக்கிறதென்றால், ''நான் இரவு, பகல் கண்விழித்து படிச்சித்தான் வேலைக்கு வந்தேன். எனக்கு சமுதாயம் எந்த வகையிலும் உதவவில்லை. நான் ஏன் சமுதாயத்திற்கு உதவணும்'' என்கிறார்கள்.

இப்படிப்பட்ட உணர்வாளர்களை நான் ஒன்று கேட்கிறேன். சமுதாயம் ஒன்றும் செய்யாததை உங்கள் மதம் மட்டும் செய்து விட்டதோ?

மத காரியங்களுக்கு வாரி வழங்கும் வள்ளல்கள், சமுதாயம் என்றதும் கை  குறுகக் காரணம், நம் வரலாறு என்ன என்பது தெரியாததுதான்.

சில பெற்றோர்களோ, தன் மகன்/ள் வெளி உலகம் தெரியாமல், கோழி முட்டையை அடை காப்பது போல் படிக்க வைப்பதால் அவர்களுக்கு சமுதாய சீரழிவு குறித்து எள்ளளவும் தெரிவதில்லை. அதனால் அவனுக்கு வேலை கிடைத்தாலும் முழு பார்ப்பானாகவே மாறி,  சமுதாய சீரழிவிற்கு இவர்களே காரணனாகி விடுகிறார்கள்.

அதனால்தான் பாபாசாகேப் இவர்களைக்குறித்து, ''இந்த அறிவாளி வர்க்கத்தினர் நேர்மையற்று இருக்கிறார்கள். மக்களுக்கு கல்வி தந்து, சரியான வழி காட்டும் அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள்.
தம் சிந்தனையின் பயனை தம் மக்களுக்கு வழங்க மறுக்கும், இந்தப் படிப்பாளி வர்க்கத்தின் நேர்மையின்மை படு அயோக்கியத்தனமாகும்'' என்கிறார்.

தொடரும்

No comments: