Monday, January 14, 2019

சிந்திக்க சில வரிகள்...

சிந்தனை 1

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?

அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!

"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?

இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!!

"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!

"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?

எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!

"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?

அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.

"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!!

எனவே நான் (i - ஐ) தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும்.

தமிழே தாயே அழகு மொழி நீயம்மா

சிந்தனை 2

அகரம் முதல் சிகரம் வரை ஆயிரம் வாய்ப்புகள் உண்டு

உலகை அறிந்திடு உழைப்பால் உயர்ந்திடு உனக்கென ஓர் சரித்திரம் எழுதிடு..!!

உன் நெருங்கிய தோழனாய் உழைப்பு இருக்கட்டும் நெருங்கவே முடியாத எதிரியாய் சோம்பல் இருக்கட்டும்..!!

பலமுறை உன்னை நீயே கேட்டு விடு நான் ஏன் பிறந்தேன் என்று..?

பல வெற்றி கண்ட பிறகு ஒரு முறை சொல்லி விடு சாதிக்கப் பிறந்தவன் நான் என்று..!!

இனியும் தாமதம் வேண்டாம் இறப்பதற்குள் சரித்திரம் படைத்திடு..!!!

சிந்தனை 3

வீழ்ச்சியின் எழுச்சியில்

அதர்மங்களின் விளைவால் மனிதன் வீழ்ச்சி  அடைவதும் உண்டு

தர்மத்தை நம்பி வீழ்ச்சி அடைவோரும் உண்டு

முந்தியது கண்ணாடி பாத்திரம் கீழே விழுவது போல

மனிதர்கள் நொறுங்கிப் போவார்கள்

பிந்தியது தரையில் விழுந்த விதையைப் போல

வீழ்ந்த  இடத்தில் இருந்து

விருட்சமாக துளிர்த்து  எழுவார்கள்

சிந்தனை 4

தீப்பெட்டிச் சிறையில்
தீர்ப்பெழுதப்பட்ட மரண தண்டனைக்
கைதிகளாய் தீக்குச்சிகள்!

தவறேதும் செய்யாதபோதும்
தலை கருகி உயிர் விடுகின்றன
தண்டனை என்ற பெயரில்....

மனதை காயப்படுத்தி போனவரை
மன்னிக்கவோ மறக்கவோ கூடாது.
அடுத்து அந்த தப்பை சந்திக்காமல்
இருக்க மனதை திடப்படுத்த அதுவே உதவும் !

No comments: