பொதுத்தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்குப் பெற்றோரும், பள்ளிக்கூடமும் தரும் அழுத்தங்கள் சொல்லில் அடங்காதவை. ஒன்பதாம் வகுப்பிலேயே இந்த அழுத்தம் தொடங்கிவிடுகிறது. பள்ளி, டியூஷன் என்று எந்நேரமும் படித்து முழு மதிப்பெண் எடுத்துவிட வேண்டுமென நினைக்கின்றனர்.
விளையாட்டு, தொலைக்காட்சி என எவ்விதப் பொழுதுபோக்கும் பல குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது. இந்த அழுத்தம் எல்லை மீறும்போது பொதுத் தேர்வுக்கு முன்போ பின்போ விபரீதங்கள் அரங்கேறுவதையும் ஒவ்வோராண்டும் வேதனையுடன் கண்ணுற வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கப் பெற்றோர் கவனத்தில்கொள்ள வேண்டிய 10 புள்ளிகளைக் காண்போம்:
1. சரியான அழுத்தமே பலூனுக்கு அழகு
கொள்ளளவுக்கு மீறிய அழுத்தம் பலூனை வெடிக்கச் செய்துவிடும். ஒரு இலக்கை நிர்ணயம்செய்து அதை அடைய வேண்டுமென உழைப்பது நல்லதே. ஆனால், ‘500/500 எடுத்தே ஆக வேண்டும்; இல்லையென்றால்...’ என்பதுபோன்ற அழுத்தத்தைக் குழந்தையின் மூளைக்குள் திணிக்க வேண்டாம்.
அது அவர்களைப் பலவீனப்படுத்தும். நீண்ட காலத் திட்டத்துடன் வருடத்தின் ஆரம்பம் முதலே சரியானபடி கால அட்டவணை இட்டுப் படிக்கப் பழக்கப்படுத்தி இருக்க வேண்டுமே அல்லாமல் தேர்வுக்குச் சில நாட்களே இருக்கும் இந்நேரத்தில் திடீரென அழுத்தம் கொடுப்பது உதவாது. இப்போதிருக்கும் நிலையைச் சரியாகப் புரிந்துகொண்டு குறுகியகாலத் திட்டத்துடன் செயல்படுவதே சரியானதாகும்.
2. காற்றில் கட்டிடம் கட்ட முடியுமா?
பள்ளித் தேர்வுகளில் 250 எடுக்கச் சிரமப்படும் குழந்தை பொதுத்தேர்வில் 450 எடுக்க வேண்டுமென எதிர்பார்க்க வேண்டாம். உதாரணத்துக்கு, அடிப்படைக் கணக்குகளையே போடத் திணறும் உங்கள் மகனோ மகளோ பொறியாளர் ஆக வேண்டுமெனக் கனவு காணாதீர்கள். அதீத எதிர்பார்ப்பு ஆபத்தில் முடியும். அவர்களால் அதிகபட்சம் என்ன முடியுமோ அதைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
3. கரையை நோக்கியே கண்கள் இருக்கட்டும்
கடலில் நீந்தும்போது சுற்றிலும் உள்ள நீரைப் பார்த்து மலைத்துப் போகாமல் கரை மீது மட்டுமே கண்களை வைத்து நீந்த வேண்டும். அதுபோல தேர்வு நேரத்தில் தேர்வுக்கான தயாரிப்பில் மட்டுமே குழந்தைகளின் கவனம் இருக்கப் பெற்றோர் உதவ வேண்டும். குடும்பப் பிரச்சினைகள், திருவிழாக் கொண்டாட்டங்கள், டிவி, செல்போன், வீடியோ கேம், சினிமா, வெளியூர்ப் பயணங்கள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
4. படிப்பும் ஓய்வும் சமநிலையில்
மேலே கூறிய கருத்துக்கு எந்நேரமும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல பொருள். கம்பி மீது நடக்க உடலில் சமநிலை எப்படி அவசியமோ, அதுபோல படிப்புக்கு இடையிடையே சற்று ஓய்வும் அவசியம். இரண்டையும் சரியாகக் கையாளத் தெரியவேண்டும்.
5. மனம் செம்மையானால்…
நல் எண்ணங்களே வாழ்க்கையின் உயரத்தைத் தீர்மானிக்கும். ஒவ்வொரு நாளையும் மனத்தை ஒருமுகப்படுத்தும் செயல்களான தியானம், யோகா போன்றவற்றுடன் தொடங்கினால் நேர்மறை எண்ணங்களால் மனம் நிறைந்து, தேர்வு குறித்த பயம் அகலும். மன அழுத்தம் நீங்கும். வெற்றி கிடைக்கும்.
6. உடனிருத்தல் என்பது தொணதொணத்தல் அல்ல
தேர்வு நேரத்தில் பெற்றோரின் உடனிருப்பும் ஊக்கமும் மிக அவசியம். குழந்தைகளைப் படிக்கச் சொல்லிவிட்டுப் பெற்றோர் டி.வி. பார்த்துக்கொண்டிருப்பது சரியன்று. தானும் குழந்தைகளோடு அமர்ந்து ஏதேனும் புத்தகம் படிப்பது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும். அதேநேரத்தில் பெற்றோரின் உடனிருப்பு உதவியாக இருக்க வேண்டுமே அல்லாமல் உபத்திரவமாக இருக்கக் கூடாது.
7. மானோடு மயிலை ஒப்பிடலாமா?
இயற்கையில் ஒவ்வொரு உயிரினமும் தனித்துவம் வாய்ந்தது. எனவே, யாரையும் எவரோடும் ஒப்பிட முடியாது. ஊக்கப்படுத்துவதற்காக அன்றி எந்தக் காரணத்துக்காகவும் குழந்தைகளைப் பிறரோடு ஒப்பிடாதீர்கள். அவர்கள் தனக்கான இலக்கைத் தானே நிர்ணயித்துத் தனது முந்தைய மதிப்பெண்ணைவிட அதிகம் பெற முயல்வதே உண்மையான போட்டி.
8. அன்பு அனைத்தையும் சாதிக்கும்
வளரிளம் குழந்தைகள் தன் மீது அன்பு கொண்டவர்களின் பாராட்டைப் பெற உழைக்கத் தயங்க மாட்டார்கள். குழந்தைகளின் அன்பிற்குரியவர்களாக நீங்கள் இருப்பின் உங்களது ஊக்கமூட்டும் வார்த்தைகள் நிச்சயம் அவர்களைச் சாதிக்க வைக்கும்.
9. பிடுங்கப்பட்ட ஆணிகளும் தடங்களைவிட்டுச் செல்லும்
எதிர்மறை வார்த்தைகள் குழந்தைகளின் உணர்வுகளைப் பாதித்து ஆழ் மனத்தில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிடும். கண்டிப்பதென்றாலும் அவர்களது தவறான செயலைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கலாமே தவிர, ‘உன்னால் எனக்கு அவமானம்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவே கூடாது.
மின்சாரக்கம்பியைச் சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் ஒயர் கம்பியைப் பாதுகாப்பது போல அதீத அழுகை, அதீத மகிழ்ச்சி, அதீத கோபம்…எனக் குழந்தைகள் உணர்வுரீதியாகப் பாதிக்கப்படாமல் இருக்கப் பெற்றோர் பொறுப்பேற்க வேண்டும். உணர்வு மேலாண்மையைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
10. தன்னையே செதுக்கும் சிற்பி
படிக்க வேண்டு மெனப் பெற்றோரால் வற்புறுத்தப்படும்போதுதான் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் சிக்கல் எழும். மாறாகத் தான் படிப்பது தனக்காக என்ற உணர்வுடன் குழந்தைகள் தானாகவே படிக்கும் நிலையை உருவாக்குவதே சிறப்பானது.
“பெற்றோர்களே உங்கள் குழந்தையின் புத்தகங்களைத் திறந்து பாருங்கள்; அவற்றில் மயிலிறகுகள் இல்லை என்றால் உங்கள் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்கிறார் எழுத்தாளரும், கல்வியாளருமான ஆயிஷா நடராசன். எத்தனை ஆழமான பொருள் கொண்ட வாக்கியம் இது!
சிறு வயதில் புத்தகத்தினுள் மயிலிறகு வைத்து அது குட்டி போட்டிருக்கிறதா என்று தினமும் திறந்து பார்க்காதவர்கள் நம்மில் யாராவது உண்டா? அந்தக் குழந்தைத்தனம் இன்றிருக்கும் குழந்தைகளுக்குள் உண்டா? அதை நாம் அனுமதிக்கிறோமா? குழந்தைகளைப் புத்திசாலிகளாக்குகிறோம் என்று நினைத்துக்கொண்டு தகவல்களை அவர்களது மூளைக்குள் திணித்து, அவர்களை போன்சாய் தாவரங்களாகத்தானே உருமாற்றிக்கொண்டு இருக்கிறோம். மதிப்பெண் முக்கியம் தான். ஆனால், மதிப்பெண்களைக் காட்டிலும் மதிப்புள்ளவர்கள் நம் குழந்தைகள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
No comments:
Post a Comment