Saturday, March 2, 2019

தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பதிவு...

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மட்டுமன்றி அனைத்து மாணவர்களுக்குமான தேர்வுக் காலம் தொடங்கிவிட்டது. வருடம் முழுக்கச் சிரமப்பட்டுப் படித்ததன் பலனை இனி உற்சாகமாக அறுவடை செய்யலாம். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு அவசியமான தேர்வுகால வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து சில வாரங்களுக்குப் பார்க்க இருக்கிறோம்.

தேர்வு நெருக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய கடைசிகட்டத் திருப்புதலில் அவற்றைத் தொடங்குவோம். தேர்வுக்கு முந்தைய தினம், அடுத்தடுத்த பரீட்சைகளுக்கு இடைப்பட்ட விடுமுறை தினங்களில் படிப்பது போன்றவை இதில் அடங்கும்.

தடுமாற்றம் தவிர்ப்போம்

நன்றாகப் படிப்பவர்கள், சுமாராகப் படிப்பவர்கள் எனச் சகல மாணவர்களும் தேர்வு நேரத்தில் அனாவசியப் பதற்றத்துக்கும், அழுத்தத்துக்கும் ஆளாவார்கள். இந்தச் சூழலும் அவை தொடர்பாக உணரப்படும் நெருக்கடியும் இயல்பானவையே. மாணவர்களின் கவனம் குவிக்கவும், விரைவாகச் செயல்படவும் இந்தத் தேர்வு நேர அழுத்தம் உதவும்.

அதேநேரத்தில் அளவுக்கு மீறிய பதற்றம் நமது நோக்கத்தைச் சிதறடிக்கும். தேர்வு நெருங்கும்போது படித்ததெல்லாம் மறந்தது போன்ற தடுமாற்றத்தை மாணவர்கள் உணர்வார்கள். பதற்றம் தவிர்த்து நிதானமாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட்டால் இம்மாதிரியான தடுமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

தேர்வு நெருக்கத்தில் புதிதாகப் படிப்பது கூடாது. ஏற்கெனவே படித்த பாடங்களின் முக்கியமான பகுதிகளை விரைவாகத் திருப்புதல் செய்யலாம். ஒருவேளை அடிக்கடி கேட்கப்பட்ட ஒரு வினாவை இதுவரை படிக்காமலிருந்தால், முழுமையான திருப்புதலைப் பாதிக்காத வகையில் அதைப் படிக்கலாம். மாதிரி வினாத்தாள்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் இருந்து திருப்புதல் செய்வது சிறப்பு.

பிளஸ் 2 மாணவர்கள் தங்களுக்கான புதிய வினாத்தாள் மாதிரிகளைப் பள்ளிக்கல்வி தொடர்பான பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறலாம். ‘இந்து தமிழ்’ நாளிதழும் மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டுவருகிறது.

திட்டமிட்டுத் திருப்புதல் செய்வோம்

“பாடங்களைப் படிப்பதற்கான வழக்கமான திட்டமிடல் போன்றே கடைசிகட்ட திருப்புதலுக்கும் முறையாக முன் கூட்டியே திட்டமிடுவது அவசியம். தேர்வுகளுக்கு இடையேயான விடுமுறை தினங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அதில் அடுத்து வரும் தேர்வுக்கு நேரம் ஒதுக்குவதுடன் அதற்கடுத்து வரும் பாடங்களுக்கும் தேவையெனில் நேரம் ஒதுக்கித் திட்டமிடுவது அவசியம். மொழிப் பாடங்கள் என்றால் மனப்பாடப் பகுதி, இலக்கணம்.

கணிதம் எனில் சூத்திரங்கள், வரைபடங்கள் என்பன போன்று பாடங்களுக்கு ஏற்றவாறு முக்கியமான பகுதிகளுக்குத் திருப்புதலில் உரிய நேரம் ஒதுக்க வேண்டும். தேர்வெழுதும் மாணவர் தனக்கான தனித்திறமை மற்றும் கடினத்தன்மையைப் பொறுத்தும் இந்தத் திட்டமிடலில் மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்“ என்கிறார் பத்தாம் வகுப்பு ஆசிரியரான எம்.ஜலீல் முகமது.

உழைப்புடன் ஓய்வும் அவசியம்

“‘மாதிரி வினாத்தாள்’ வாயிலாகச் மட்டுமன்றி, ‘கீ வேர்ட்’, முக்கியமான ‘பாயிண்டுகள்’ வாயிலாகச் சங்கிலித் தொடர் போன்று பாடத் தலைப்புகளைத் திருப்புதல் செய்வதும் உதவும். தேர்வு காலத்தில் மாணவர்கள் உழைக்கும் அளவுக்குத் தேவையான ஓய்வும் உறக்கமும் அவசியம்.

இரவில் போதிய நேரம் உறங்குவதுடன், இடைப்பட்ட விடுமுறை தினங்களில் தொடர்ந்து நீண்ட நேரம் படிக்கும்போது ஏற்படும் களைப்பையும் அலுப்பையும் போக்கக் குட்டித் தூக்கமும் போடலாம். ஆனால், படிக்கும் இடத்திலேயே தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்”

No comments: